Wednesday, April 27, 2016

நிம்மதியான வாழ்வுக்கு நண்பர்களை சம்பாதியுங்கள்!!!

நிம்மதியான வாழ்வுக்கு நண்பர்களை சம்பாதியுங்கள்!!!

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். அந்த விவசாயியிடம் ஆடுகளும் இருந்தன. பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். அவன் வேட்டைக்கு பயன்படுத்த சில வேட்டை நாய்கள் வைத்திருந்தான்.

இந்த நாய்கள் அடிக்கடி அருகில் உள்ள ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதுமாக இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டை வீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து ""உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை கடித்து காயப்படுத்துகின்றன'' என்றான்.

ஆனால் அந்த வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. அதேபோல் நாய்கள் வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின. இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.

வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், ""இதோ பார் ஆட்டை துரத்துவது, கடிப்பது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ'' என்றான்.

இதைத் தொடர்ந்து மனமுடைந்த விவசாயி, அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரை சந்தித்து, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு. ஏனென்றால் விவசாயி நல்லவன். எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து வருபவன். விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், ""என்னால் பஞ்சாயத்தை கூட்டி அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?'' என விவசாயியைப் பார்த்து கேட்டார்.

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட விவசாயி, ""அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம்'' என்றான். ""சரி உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருக்கவும், அந்த வேட்டைக்காரனும் உன் நண்பனாக இருக்கவும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்'' என்று சொல்லி பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை விவசாயியிடம் சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான். தனது பட்டியில் இருக்கும் தனது ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான். ஆட்டுக்குட்டிகளை பெற்றுக்கொண்ட அந்த குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள். தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுகாக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கிலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது.

யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான். தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன். ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகி விட்டனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான். பிரச்னை தான் வேறு வேறு.

நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக் கொள்ளக்கூடாது. நீதிமொழிகள் 3:31-இல் ""கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே'' என்றும், நீதிமொழிகள் 27:10-இல் உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே; உன் ஆபத்துக்காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி'' என்று அருகில் உள்ள வீட்டாரோடு சிநேகமாக இருக்க வேண்டும் என பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கிறோம்.

ஆகவே நாமும் நம்முடைய வாழ்வில் நண்பர்களை சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய நம்பிக்கை அனைத்தும் இறைவன் மீது வைக்கும்போது இறைவன் நமக்கு தேவையான ஞானத்தைத் தருவார், நிம்மதியான வாழ்வு வாழலாம்.

- ஒய். டேவிட் ராஜா
http://www.dinamani.com/

No comments:

Post a Comment