மலச்சிக்கலை நெறிப்படுத்தும் சித்த மருத்துவம் !!!
உண்ட உணவு செரிமானம் ஆக, சாரைப் பாம்பு போல ’சரசரவென’ வளைந்து நெளிந்து, உணவுப் பொருட்களைக் கூழ்மமாக்க வேண்டிய குடல் பகுதிகள், கொழுத்த மானை விழுங்கிய மலைப் பாம்பு போல, அசைவற்றுக் கிடக்கின்றன முழுநேர மயக்கத்துடன்!
இதற்கான காரணத்தை ஆராய, மருத்துவ வல்லுநர்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை; நாம் சாப்பிடும் உணவு முறையை முறைப்படுத்தினாலே போதுமானது. தவறான வாழ்க்கை முறையால் உண்டாகும் மிக முக்கியமான தொந்தரவுகளில் மலக்கட்டுக்கு முதல் இடம் கொடுக்கலாம்.
மலக்கட்டு காரணங்கள்
முதிர்ந்த வயதில், குடலின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதால் ஏற்பட்டுவந்த மலக்கட்டு பிரச்சினை, தற்போது குழந்தைகள் முதல் முதியோர்வரை அனைவரையும் தொற்றிக்கொண்டிருக்கிறது. காலம் தவறிய உணவு, அதிக அளவு உணவு, குறை உணவு, துரித உணவு எனப்படும் குப்பை உணவு, மசாலா சேர்த்த உணவு போன்றவை மலக்கட்டை உருவாக்குவதற்கான முக்கியமான காரணிகள்.
இயற்கை அளித்த வரப்பிரசாதங்களான காய், கனிகளைத் தவிர்ப்பது, உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்குவது, அதிகமாக அசைவ உணவைச் சாப்பிடுவது போன்றவை அடுத்த வரிசை காரணங்கள்.
புகைப்பிடித்தல், மது, காபி, டீ, குளிர்பானங்களை அதிகமாக அருந்துதல், உறக்கமின்மை, வேலைப்பளுவின் காரணமாகப் போதுமான அளவுக்கு நீர் பருக மறப்பது போன்ற காரணங்கள், மலக்கட்டை உண்டாக்குவது உறுதி.
மன அழுத்தமும் காரணம்
மன அழுத்தத்துக்கும் நோய்களின் உருவாக்கத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது ஆராய்ந்து வெளியிடப்பட்ட உண்மை. மலக்கட்டு மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? செரிமானத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலம், மன அழுத்தத்திடம் மனதைப் பறிகொடுத்துப் பாதிக்கப்பட்டு மலக்கட்டு உண்டாக வழி செய்கிறது.
நாட்பட்ட மன அழுத்தத்துக்கு ஆட்படும்போது, ஒருவருடைய குடலில் இயல்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இயக்கங்கள் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு மலக்கட்டு தொந்தரவு விஸ்வரூபம் எடுக்கிறது. திருமண நிகழ்ச்சி, தேர்வு, அதிகப் பணி சுமை இருக்கும் நேரத்தில், மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணமே குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மன அழுத்தத்துக்கும் மலக்கட்டுக்கும் உள்ள தொடர்பை அறுக்க, வழக்கறிஞரிடம் செல்ல வேண்டியதில்லை. வாழ்க்கையின் அழகை ரசித்து, மனசை உற்சாகமாக்க, தெளிவான சிந்தனை இருந்தால் போதும்.
மதுவும் மலக்கட்டும்
நீண்ட நாட்களாக மது அருந்தும் பழக்கம் உடைய திறமைசாலிகளுடன், மலக்கட்டும் கைகோத்துக்கொண்டு வீர நடைபோடுவதில் ஆச்சரியமில்லை. ஆல்கஹாலானது, மலத்தில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி வறட்சியாக்கி, குடல் அசைவுகளைத் தடுத்து, மலக்கட்டை உண்டாக்கிவிடுவதில் பலே கில்லாடி!
சித்த மருத்துவம்
திரிபலா சூரணம் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) அரை தேக்கரண்டி அளவு, தினமும் இரவு வெந்நீரில் கலந்து அருந்தலாம். திரிபலா சூரணம், மலக்கட்டை நீக்குவது மட்டுமன்றி, உடலில் தேங்கிய நச்சுகளையும் (Toxins) வெளியேற்றும் சிறப்புடையது. தனிக் கடுக்காய் பொடி, மலைக் கிராமங்களில் முக்கிய மலமிளக்கி மருந்தாகப் பயன்பட்டு வருவது. மேலும் நிலவாகைச் சூரணம், ஏலாதி சூரணம், பொன்னாவாரைப் போன்ற சித்த மருந்துகளை மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.
செரிமானத்தைத் தூண்டக்கூடிய சீரகம், மிளகு, இஞ்சி, ஓமம், பெருங்காயம் ஆகிய பொருட்களை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பீன்ஸ், கேரட், பூசணி, உருளை, முட்டைகோஸ் போன்ற காய்கறி வகைகள், கொட்டைகள், விதைகள் போன்றவற்றை அதிகமாக உட்கொண்டு மலக்கட்டைத் தடுக்கலாம். தினசரி நடைப்பயிற்சி செய்வதால், குடல் பகுதிகள் நன்றாகச் செயல்பட்டு மலத்தைச் சிரமமின்றி வெளியேற்றும். அப்படியும் மலம் சரியாக வெளியேறாதபோது, துணியை நீரில் நனைத்து வயிற்றுப் பகுதியில் போடலாம்.
விளக்கெண்ணெய் மகத்துவம்
தசவாயுக்களில் ஒன்றான அபானவாயு (கீழ்நோக்கிச் செலுத்தப்படும் வாயு) பாதிக்கப்படுவதால், மலக்கட்டு உண்டாகும் என்கிறது சித்த மருத்துவம். ஆமணக்கு எண்ணெய்க்கு, மலமிளக்கி செய்கையைக் கொண்டிருப்பது மட்டுமன்றி, அபான வாயுவைக் கட்டுப்படுத்தும் திறனையும் இருப்பதால், வாரம் ஒருமுறை அரை தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலந்து உட்கொள்ளலாம். மலக்கட்டு இருக்கும்போது, அடிவயிற்றின் மீது விளக்கெண்ணெயைத் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கிப் போட்டால் குணமாகும். எருவாயின் உட்புறத்தில் விளக்கெண்ணெயைத் தடவ, மலம் இளகி வெளிப்படும்.
இளக்கும் கீரைகள்
பொதுவாகவே அனைத்துக் கீரை வகைகளும் மலத்தை இளக்கி வெளியேற்றும் சக்தி கொண்டவை என்பதால், தினசரி உணவில் கீரை வகைகளுக்குத் தாராளமாக அழைப்பு விடுக்கலாம்! கீரைகளில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பது மட்டுமன்றி, உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் உள்ளன.
நார்ச்சத்துப் பழங்கள்
பழ வகைகளில் பப்பாளி, வாழை (3.1 கிராம் நார்ச்சத்து), கொய்யாப் பழம் (5.4 கிராம் நார்ச்சத்து), ஆப்பிள் (4.4 கிராம் நார்ச்சத்து), பேரிக்காய் (5 6 கிராம் நார்ச்சத்து) போன்ற இயற்கை அமுதங்களை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். உலர் திராட்சைகள், உலர் அத்தி ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, இரண்டு வேளை சாப்பிட்டால் மலத்தை இளக்கும். ஆளிவிதை (Flax seeds) பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம். நார்ச்சத்து அதிகமுள்ள உணவை உட்கொள்வது மட்டுமன்றி, அதை வெளியேற்றத் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் மிகவும் முக்கியம்.
நீண்ட நாட்களாகத் தொடரும் மலக்கட்டு பிரச்சினையைச் சரிசெய்யாவிட்டால் அது தோல் நோய்கள், மூலம், இதய நோய், புற்று நோய் என வேறு பல நோய்களுக்கு அடித்தளமாக அமைந்துவிடும். எனவே, அடித்தளத்தை வலுப்படுத்தாமல், மலத்தைச் சரியாக வெளியேற்றி உடலை உற்சாகப்படுத்துவோம்!
டாக்டர் வி. விக்ரம்குமார்
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
http://tamil.thehindu.com/
No comments:
Post a Comment