சுகர் வியாதி வராமல் தடுக்க சிறந்த யோகாசனம்..!
இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு குறைபாட்டு தாக்கம், பலரையும் பாதித்திருக்கிறது. பலர் இன்னும் இதற்கு ஆட்படும் அபாயத்தில் இருந்து வருகின்றனர். இந்திய இளைய சமுதாயத்தில், 4 சதவீதம் பேர் நீரிழிவு குறைபாட்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக, புள்ளி விபரங்கள் சொல்கின்றன. வாழ்க்கை முறை மாற்றம் தான் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் இன்று வரை தீர்மானமாக எந்த முடிவுக்கும் மருத்துவ உலகம் வர இயலவில்லை.
நீரிழிவு ஒரு நோயல்ல, குறைபாடு என்பதே உண்மை. பிறவி ஊனம் மட்டுமே குணப்படுத்த முடியாதது என்பர். ஆனால் நீரிழிவை பொறுத்தமட்டில் பெரும்பாலோருக்கு இடையில் வரும் ஒரு ஊனம். ஆக, இந்த ஊனம் ஏற்படாமல் தடுக்க முயல வேண்டும். அதற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுப்பது யோகாசனங்கள் தான். அதிலும் குறிப்பாக யோகாசனங்களில்
பஸ்சிமோத்தாசனம் நீரிழிவை தடுக்கிறது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் தருகிறது. இந்த ஆசனத்தை செய்வதும் எளிது. உட்கார்ந்த நிலையிலான ஆசனங்களில் நீரிழிவுக்கு மிகவும் பயன்தரக்கூடிய ஒரு ஆசனம் இது என்று கூறலாம்.
செய்யும் விதம் - முதல் நிலை: விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் சேர்த்தாற் போல் நீட்டி வைத்துக் கொள்ளவும். இரண்டு கைகளை காதுகளை ஒட்டினாற் போல் தலைக்கு மேல் நீட்டி வைத்துக் கொள்ளவும். கைவிரல்கள் சேர்ந்திருக்க வேண்டும். இப்போது மூச்சை நன்றாக இழுத்துக் கொள்ளவும். இப்போது கைகள் காதுகளை விட்டு விலகாதபடி மூச்சைப் பிடித்து எழுந்து உட்காரவும். இது தான் முதல்படி நிலை.
இரண்டாவது நிலை: இப்போது மூச்சை விட்டபடியே முன்னுக்கு குனிந்து கால்களின் கட்டை விரல்களை, கைகளின் ஆள்காட்டி விரல், நடுவிரல் இவை இரண்டையும் கொக்கி போல் மடக்கி பிடித்துக் கொள்ளவும். இது இரண்டாவது நிலை.
மூன்றாவது நிலை: இந்த நிலையில் மூச்சை ஒரு தரம் இழுத்து விட்டவாறே இன்னமும் கீழே குனிந்து முழங்கைகள் முட்டிக்கால்களை ஒட்டி தரையை தொட்டவாறு இருக்கும் படியான நிலைக்கு வரவும். அதாவது முகத்தை முழங்கால்களின் சந்து வரை எட்டிக் குனியவும்.
மடக்கின முழங்கைகள் தரையில் படவேண்டும். இந்த நிலையில் ஐந்து முதல் பத்து எண்ணும் வரை இருக்கலாம். பின்னர் கைகள் மற்றும் கால்கள் இரண்டின் பெருவிரல்களை மட்டும் பிடித்திருக்கும் படியான நிலைக்கு நிமிர்ந்து வரவும். இதற்கடுத்து கைகள் இரண்டையும் முதல்நிலையில் சொன்னது போல் காதுகளை ஒட்டியிருக்கும் படியான நிலையில் வைத்து நிமிர்ந்து உட்காரவும். பின்னர் உடலை சிறிது சிறிதாக பின்னோக்கி சாய்ந்து படுக்கை நிலைக்கு வரலாம்.
இப்போது மூச்சை இறுக்கிப் பிடிக்காமல் சாதாரண நிலையில் விட்டு வரவும். இவ்வாறு செய்து முடிப்பது ஒரு பஸ்சிமோத்தாசனம் ஆகும். இது போல் மூன்று முதல் நான்கு முறை செய்யலாம்.
Credits: dinamalar daily newspaper
No comments:
Post a Comment