ஓஷோ ஞானக்கதைகள் - 18
காலிக் கோப்பை
நான்சேன் என்பவர் மிகப் பிரபலமான
ஜென் ஞானிகளில் ஒருவர். அவரைப் பற்றி பல கதைகள் கூறப் படுகின்றன. அதில் ஒன்று நான்
உங்களுக்கு பல முறை கூறியிருக்கிறேன். நான் அதை திரும்பக் கூறுகிறேன். ஏனெனில் இது
போன்ற கதைகளை திரும்ப திரும்ப கூறுவதன் மூலம் நீங்கள் அதை நன்கு உள்வாங்கிக் கொள்ள
முடியும். அவை உங்களை வளப்படுத்தும். ஒவ்வொருநாளும் நீங்கள் ஊட்டம் பெற வேண்டும்.
நேற்று காலை நான் உணவு சாப்பிட்டு விட்டேன், அதனால் இப்போது எனக்கு உணவு வேண்டாம்
என்று நீங்கள் கூறுவதில்லை. ஒவ்வொரு நாளும் நீங்கள் சாப்பிட்டாக வேண்டும். நேற்று
நான் சாப்பிட்டுவிட்டேன். இப்போது ஏன் சாப்பிடவேண்டும் என்று கேட்பதில்லை.
இந்த வித கதைகள் – இவை உங்களை
வளப்படுத்தும் கதைகள். இந்தியாவில் இவற்றைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு ஒரு
குறிப்பிட்ட வார்த்தை உண்டு. அதை மொழிமாற்றம் செய்ய முடியாது, ஆங்கிலத்தில் “படிப்பது” என்ற ஒரு வார்த்தை உண்டு. இந்தியாவில் இரண்டு விதமான வார்த்தைகள் உண்டு. ஒன்று படிப்பது, மற்றொன்று படித்ததையே திரும்ப திரும்ப படிப்பது. அதன் ஒரு பாகமாகி விடுவது. ஒவ்வொரு நாளும் காலையில் நீ கீதையை
படிக்கிறாய். அது படிப்பது அல்ல. ஏனெனில் நீ அதை பலமுறை படித்திருக்கிறாய்.
இப்போது அது ஒருவிதமான வளப்படுத்துதல். நீ அதை படிக்கவில்லை. நீ அதை ஒவ்வொரு
நாளும் உண்கிறாய்.
அது ஒரு சிறந்த அனுபவமாகும்.
ஏனெனில் ஒவ்வொரு நாளும் நீ வெவ்வேறு விதமான மனநிலையில் வருவதால் பல்வேறு விதமான
அர்த்தங்கள் புரிகின்றன. அதே புத்தகம், அதே வார்த்தைகள் ஆனால் ஒவ்வொரு நாளும் புது
ஆழத்தை நீ உணர்கிறாய். ஒவ்வொரு நாளும் புதிதான ஏதோ ஒன்றை படிப்பது போன்று நீ
உணர்கிறாய். ஏனெனில் கீதை அல்லது அது போன்ற புத்தகங்களில் ஆழமான உண்மை உண்டு.
அவற்றை ஒருமுறை படித்தால் மேலோட்டமாக இருக்கும், இரண்டாவது, மூன்றாவது தடவை படிக்க
படிக்க ஆழ்ந்து செல்வாய். ஆயிரம் தடவைகள் படித்தபின் அந்த புத்தகங்களை முழுவதுமாக
படிப்பது என்பது சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்வாய். அதிக அளவு கவனமாக,
விழிப்புணர்வுடன் இருக்க இருக்க உனது தன்னுணர்வு ஆழமாகும். இதுதான் இதன் பொருள்.
நான் நான்சேனின் கதையை
திரும்பவும் கூறுகிறேன். ஒரு பேராசிரியர், தத்துவ பேராசிரியர் அவரைக் காண வந்தார்.
தத்துவம் ஒரு நோய், அது கேன்சர் போன்றது. அதற்கு மருந்து கிடையாது, அதை நீ
வெட்டிதான் எறிய வேண்டும். ஒரு பெரிய அளவிலான அறுவை சிகிச்சைதான் செய்தாகவேண்டும்.
தத்துவமும் அப்படிப்பட்ட ஒருவிதமான வளர்ச்சியாகும். ஒருமுறை அது உன்னுள்
வந்துவிட்டால் அது உன்னுடைய சக்திகளை எடுத்துக் கொண்டு அது அதன் போக்கில் வளரும்.
அது ஒட்டுண்ணி. நீ பலவீனமடைந்து கொண்டே போவாய், அது மேலும் மேலும் பலமடைந்து
கொண்டே போகும். ஒரு வார்த்தை மற்றொரு வார்த்தையை உருவாக்கும். அது முடிவில்லாமல்
போய்க் கொண்டே இருக்கும்.
ஒரு தத்துவவாதி நான்சேனை காண
வந்தார். நான்சேன் ஒரு சிறிய குன்றின் மேல் வசித்துவந்தார். அவர் மலைஏறி வந்ததால்
மிகவும் வியர்த்து களைத்து வந்தார். அவர் நான்சேனின் குடிசைக்குள் நுழைந்த உடனேயே
உண்மை என்பது என்ன எனக் கேட்டார்.
நான்சேன், உண்மை கொஞ்ச நேரம்
காத்திருக்கலாம், அதற்கு அவசரமில்லை. இப்போது உங்களுக்குத் தேவை ஒரு கோப்பை
டீதான். நீங்கள் மிகவும் களைத்திருக்கிறீர்கள் எனக் கூறி விட்டு டீ தயார் செய்ய
சென்றார். இதை ஒரு ஜென்குருவிடம் மட்டுமே காண முடியும். இந்தியாவில் சங்கராசாரியா
உனக்காக டீ தயார் செய்வது சாத்தியமில்லாதது – உனக்காக, சங்கராசாரியாவா டீ தயார்
செய்வதா, நடக்கவே நடக்காது. அல்லது மகாவீரர் உனக்காக டீ தயார் செய்வது……..
மடத்தனம். ஆனால் ஒரு ஜென்குருவிடம் இது நிகழக் கூடும். அவர்களிடம் வித்தியாசமான
அணுகுமுறை உள்ளது. அவர்கள் வாழ்க்கையை காதலிக்கின்றனர். அவர்கள் வாழ்க்கைக்கு
எதிரி அல்ல. அவர்கள் எளிமையாக வாழலாம், ஆனால் அவர்கள் வாழ்க்கைக்கு
எதிர்மறையானவர்கள் அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். அவர்கள் சாதாரணமாக வாழ்வதுதான்
அசாதாரணமான ஒரு விஷயம் என்று கூறுகிறார்கள். அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கை
வாழ்கின்றனர். நான் எளிமையானது என்று கூறும்போது உண்மையான எளிமையைதான்
குறிப்பிடுகிறேன். திணிக்கப்பட்ட எளிமை அல்ல. இந்தியாவில் அப்படிப்பட்ட
திணிக்கப்பட்ட எளிமையை நீ காணலாம். எளிமை திணிக்கப்படுகிறது. அவர்கள் நிர்வாணமாக
இருந்தாலும் முழு நிர்வாணமாக இருந்தாலும் அவர்கள் எளிமையானவர்களாக இல்லை. அவர்களது
நிர்வாணம் மிகவும் சிக்கலானது. அவர்களது நிர்வாணம் ஒரு குழந்தையினுடைய நிர்வாணம்
போன்றதல்ல. அவர்கள் அதை உருவாக்கிக் கொண்டனர். உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் எப்படி
எளிமையானதாக இருக்கமுடியும், தங்களை அவர்கள் அப்படி வரையறுத்துக் கொண்டுள்ளனர்,
வரையறுத்த ஒரு விஷயம் எப்படி எளிமையானதாக இருக்க முடியும், அது மிகவும்
சிக்கலானது.
ஜைன திகம்பர சாமியாரின்
நிர்வாணத்தை விட உங்களது ஆடைகள் எளிமையானவைதான். அவர் அதற்காக பல ஆண்டுகள்
கஷ்டப்பட்டிருக்கிறார். அதற்கு ஐந்து படிகள் உள்ளன. நீ ஒவ்வொரு படியையும்
ஒன்றன்பின் ஒன்றாக பூர்த்தி செய்ய வேண்டும், அதன்பின்தான் நீ நிர்வாணமாக
இருக்கமுடியும். அது ஒரு லட்சியம், ஒரு லட்சியம் எப்படி எளிமையானதாக இருக்கும், நீ
அதற்காக பல வருடங்கள் உழைத்திருந்தால், அதை அடைவதற்காக நீ பல முயற்சிகள்
செய்திருக்கும்போது அது எப்படி எளிமையானதாக இருக்கமுடியும், இப்போதே, இங்கேயே,
உடனடியாக கிடைக்கும், அதற்காக உழைக்கவேண்டிய அவசியமில்லாத ஒரு விஷயம் மட்டுமே
எளிமையானதாக இருக்க முடியும்.
நிர்வாணம் எளிமையான ஒரு விஷயமாக
இருக்கும்போது அது மிக கம்பீரமான காட்சிஅற்புதம். நீ வெறுமனே உடைகளை
விட்டுவிடலாம். அது மகாவீரருக்கு நடந்தது. அது எளிமையானது. அவர் அவரது மாளிகையை
விட்டு கிளம்பும்போது அவர் ஆடை அணிந்திருந்தார். ஒரு ரோஜாபுதரை தாண்டும்போது அவரது
ஆடை அதில் சிக்கிக் கொண்டது. அது ஒரு மாலை நேரம், எனவே அந்த ரோஜாசெடி
தூங்கும்நேரம், எனவே அதை பிரித்து எடுத்து அதன் தூக்கத்தை கலைக்கக் கூடாது, எனவே
அவர் சிக்கிக் கொண்ட ஆடையை மட்டும் கிழித்து விட்டுவிட்டு பாதி ஆடையுடன் சென்றார்.
அடுத்த நாள் ஒரு பிச்சைக்காரன் வந்து யாசகம் கேட்டான். அவனுக்கு தர ஏதுவுமில்லை
இந்த பாதி ஆடையை தவிர. எனவே இந்த பாதி ஆடையையும் அவனுக்கு கொடுத்துவிட்டு
நிர்வாணமாகி விட்டார். அவரது நிர்வாணம் மிகவும் அழகானது, இயற்கையானது, எளிமையானது,
அது நிகழ்ந்தது. அது பயிற்சி செய்யப்பட்டதல்ல. ஆனால் ஒரு ஜைனதுறவி அதை பயிற்சி
செய்கிறார்.
ஜென்குருக்கள் மிகவும் எளிமையான
மக்கள். அவர்கள் மற்றவர்களைப் போலவேதான் வாழ்கிறார்கள். அவர்கள் எந்த
வித்தியாசத்தையும் உண்டாக்கிக் கொள்வதில்லை. ஏனெனில் அடிப்படையிலேயே ஆணவம்
இருந்தால்தான் வித்தியாசம் வரும். இந்த விளையாட்டை நீ பல வழிகளில் விளையாடலாம்,
ஆனால் விளையாட்டு ஒன்றேதான். நான் உன்னை விட உயர்ந்தவன். விளையாட்டு ஒன்றுதான்,
என்னிடம் உன்னைவிட அதிக பணம் இருக்கிறது, நான் உன்னைவிட உயர்ந்தவன், நான் உன்னைவிட
படித்தவன், நான் உன்னை விட உயர்ந்தவன், நான் உன்னை விட அதிக மதவாதி, அதனால் நான்
உன்னைவிட உயர்ந்தவன், நான் அதிகம் துறந்திருக்கிறேன், அதனால் நான் உன்னைவிட
உயர்ந்தவன்,
நான்சேன் உள்ளே சென்று டீ
தயாரித்துக் கொண்டு வெளியே வந்தார், கோப்பையை விரிவுரையாளரின் கைகளில் கொடுத்தார்,
கெட்டிலில் இருந்து டீயை ஊற்ற ஆரம்பித்தார். கோப்பை நிறைந்துவிட்டது. அந்த வினாடி
வரை வந்தவர் பொறுத்திருந்தார், ஏனெனில் அதுவரை எல்லாமே சாதாரணமாகதான் நடந்தது, ஒரு
களைப்பான மனிதனுக்காக இரக்கப்பட்டு டீ தயாரித்துக் கொண்டு வந்தார். அது
அப்படித்தான் இருக்கும். நீ கோப்பையில் டீயை ஊற்றுகிறாய் – அதுவும் சரிதான், ஆனால்
பின்தான் அசாதாரணமானது நடந்தது.
நான்சேன் ஊற்றிக் கொண்டே
இருந்தார். கோப்பை நிறைந்து வழிந்தது. இப்போது விரிவுரையாளர் சிறிது
ஆச்சரியமடைந்தார். இவர் என்ன செய்கிறார், இவருகென்ன பயித்தியம் பிடித்துவிட்டதா,
ஆனாலும் பொறுத்தார் – அவர் மிகவும் நாகரீகமடைந்த மனிதர், இது போன்ற சிறிய
விஷயங்களை ஒரளவுக்கு தாங்கிக் கொள்ள முடியும். ஒரு சிறிதளவு
பைத்தியக்காரத்தனத்தை….. ஆனால் கோப்பையின் கீழே இருந்த தட்டும் நிறைந்து
வழிந்தது, நான்சேன் ஊற்றிக் கொண்டே இருந்தார்.
இது மிகவும் அதிகம். இப்போது
ஏதாவது செய்தாக வேண்டும், எதையாவது சொல்லியாக வேண்டும், வந்தவர் நிறுத்துங்கள் என
கத்தினார். ஏனெனில் இப்போது டீ தரையில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன
செய்து கொண்டிருக்கிறீர்கள், கோப்பை இனிமேலும் கொள்ளாது. இதைக்கூட உங்களால்
பார்க்க முடியவில்லையா, உங்களுக்கு என்ன பயித்தியமா எனக் கேட்டார்.
நான்சேன் சிரித்துக் கொண்டே,
இதைதான் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறேன், உங்களுக்குகென்ன பயித்தியமா கோப்பை
நிறைந்து விட்டது அதில் இன்னும் கொஞ்சம்கூட ஊற்ற முடியாது என்பதை பார்க்க
முடிகின்ற உங்களால் உங்களது மூளை நிறைந்து வழிகிறது அதில் சிறிதளவுகூட உண்மை ஏறாது
என்பதை ஏன் பார்க்க முடியவில்லை. இந்த டீயைப் போலவே உங்களது மண்டையிலிருந்து
நிறைந்து வழியும் தத்துவம் என் குடிசை முழுவதும் பரவி இருப்பதை உங்களால் பார்க்க
முடிகிறதா, நீங்கள் ஒரு பொருள்முதல்வாதி, உங்களால் டீயை பார்க்க முடிகிறது.
இப்போது அடுத்த விஷயத்தையும் பார்ப்போம் வாருங்கள். என்று கூறினார்.
இந்த நான்சேன் என்பவர் மக்கள்
விழிப்புணர்வு பெற பல வழிகளிலும், பல முறைகளிலும், பல விதங்களிலும் பலருக்கு
உதவியுள்ளார். வேறுபட்ட பல விதங்களிலும் பல விதமான சூழ்நிலைகளை உருவாக்கி மக்கள்
விழிப்புணர்வு பெற உதவியுள்ளார்.
Source : AND THE FLOWERS SHOWERED che #11
No comments:
Post a Comment