Thursday, January 23, 2020

Maharishi thought Jan 20

*வாழ்க்கை மலர்கள்: ஜனவரி 20*

*மனிதன்*

“அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது” என்பது ஆன்றோர் வாக்கு. ஏன் அவ்வாறு கூறுகின்றனர்? மனிதன் ஒருவனால் தான் பிறவற்றைக் கண்டு நலன் உணர்ந்து அவைகளைப் போன்று போலி (Imitate) செய்து வாழ முடிகிறது. இயற்கைகளை மாற்றித் தன் வாழ்வின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது. தன் மூலத்தை உணர்ந்து தன்னைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பிற எவருக்கும், எந்த ஒன்றுக்கும் இன்னல் பயவா இன்ப வாழ்வு வாழ முடிகிறது. இவ்வாறு வாழ்வது தான் மனிதனின் இயற்கை.

எனவே தான், மனிதன் என்ற பெயரைப் பெற்றான். அதாவது எவன் ஒருவன் மனத்தை இதமாக வைத்துக் கொள்கிறானோ அவன் தான் மனிதன் என்ற பொருளில் இச்சொல் ஏற்பட்டுள்ளது. மனம் என்ற சொல்லைப் பார்த்தால் அதுவும் இதே பொருளைத்தான் அழுத்தமாக உணர்த்துகிறது. “மனம்” என்ற சொல் “மன்” என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்தது. “மன்” என்றால் நிலையானது. அழியாமை என்ற பொருள். ஆனால், நாமோ மனத்தைப் பேயாக, குரங்காக இருப்பதை உணர்கிறோம்.

ஆனால், அதே மனத்தைத் தவத்தால், தற்சோதனையால், புறத்தே குதிக்காமல் அகத்தே ஆழ்ந்து ஆழ்ந்து தன்னையுணர்கின்ற மெய்யுணர்வு தோன்றுகிறது. அப்போதுதானே எல்லாவற்றுள்ளும், எல்லாமும் தன்னுள்ளும் இருப்பது உணரப்படுகின்றது. அந்த நிலையில் மனம் இதமாகிறது. இதனைத்தான் மனிதன் பெற வேண்டும்.

மனம் படைத்த மனிதன் [ மன் + இதன் ] நிலைப்பேறான மெய்ப்பொருள் உணர்வு பெற்ற வாழ்வு வாழ வேண்டுமானால் மனம், மொழி, செயல் மூன்றிலும் இனிமை தோன்ற வாழ வேண்டும். இத்தகையவர்களைத் தான் வள்ளுவர் செம்பொருள் கண்டவர்கள் என்கிறார். மனத்தைத் தெளிந்து, மனம் நிலைத்து மக்களுக்கும் பிற உயிர் இனங்களுக்கும் மன இதமாய்த் தொண்டாற்றுகின்ற பெருமக்களே நிறை மனிதர்கள்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

No comments:

Post a Comment