Monday, January 13, 2020

இந்து மதத்தின் முக்கிய கருத்துக்கள்- பாகம்-40

இந்து மதத்தின் முக்கிய கருத்துக்கள்-
பாகம்-40
-
கடந்த காலத்தில் ஏற்பட்ட விஷயங்களைப் பற்றிய நினைவுகளும் அவற்றை மனத்தினின்றுநீக்கும் வழிகளும்
-
மனம் மாசுபடுவதற்குக் காரணமே கடந்த கால நிகழ்ச்சிகள் மனத்தில் சேர்ந்து இருப்பது தான். எந்த ஒரு நினைவும் தொலைந்து போவதில்லை என்கிறது இராஜயோகம். ஒவ்வொரு நினைவும் முடிவில்  தெளிவற்ற நிலைக்குச் சென்று அங்கே பதிவாகிவிடுகிறது. ஒரு சராசரி மனத்திற்குள் எண்ணற்ற பதிவாகிய நினைவுகள் இருக்கும்.
இந்தப்பதிவு நிலையில் உள்ள எண்ணங்களே சமஸ்காரங்கள் என வடமொழியில் அழைக்கப்படுகின்றன. இராஜயோக முறைப்படி தியானம் பழகுவது இத்தகைய சமஸ்காரங்களின்று மனத்தைத்தூய்மைப்படுத்த உதவுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு கதை மூலம் இதைத் தெளிவாக்கலாம்.
ஓர் ஏரியின் கரையில் ஒரு மனிதன் நீரை உறிஞ்சக்கூடிய காகிதத்துண்டுகள் அடங்கிய சுருளுடன் நின்று கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்வோம். அவன் ஒவ்வொரு துண்டாக எடுத்து ஏரியின்  தண்ணீருக்குள் போடத் தொடங்குகிறான். முதலில் போட்ட துண்டு ஏரியில் சிறிது நேரம் மிதக்கும் .
சில நிமிடங்களில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். அதே போல் அடுத்தடுத்துப் போடும் துண்டுகள் முதலில் மிதந்து பின்னர் ஒன்றன் மீது ஒன்றாகப் படிந்து விடும். அதே போல் மனம் தான் ஏரி.காகிதத்துண்டுகள்  தான் நினைவுகள். முதலில் மிதக்கும் காகிதத்துண்டுகள் நினைவு நிலையில் இருக்கும் மனத்தில் உள்ள எண்ணங்கள்.
நீருக்குள் மூழ்கி அடித்தளத்தில்   இருப்பவை தெளிவற்ற மனநிலையில்  உள்ள கடந்த கால நினைவுகள். இந்தப் பதிவுகள் அனைத்தும் நிழற்படங்களின் மூலங்கள்(Negatives). அவை தேவைப்படும் போது தக்க சூழ்நிலைகளில் பல படங்களை எடுக்க  உதவும்.அதே போன்றே இந்த சமஸ்காரங்கள் தகுந்த சூழ்நிலை ஏற்படும் போது மறுபடியும் தெளிவான எண்ணங்களாக மாறும் சக்தி வாய்ந்தவை.
மனத்தை ஒரு முகப்படுத்தி ஒருவன் தியானம் செய்யும் போது அந்தத் தியானத்தின் தன்மையானது லேசர் ஒளிக்கற்றைகளைப் போன்று செயல்பட்டு எண்ணங்களின் அடுக்குகளினூடே  ஊடுருவி ச் சென்று அடிமட்டத்தில் கிடக்கும்  சமஸ்காரங்களைச் சென்றடையும்.இந்த ஒரு முகப்பட்ட எண்ண அலையானது நீருக்குள்  மூழ்கித் தேடுபவர்களைப் போல் அடியில்  சென்று சேமித்து வைக்கப்பட்ட சமஸ்காரங்களைத் துன்புறுத்தத் தொடங்கும். அதன்  விளைவாக அவை இருக்கும் இடத்தை விட்டுப் புறப்பட்டு ஒவ்வொரு எண்ணமாகத் தெளிந்த  மனநிலையின் தன்மைக்கு வந்து சேரும் .மறுபடியும்  அவை உயிருள்ள நினைவுகளாக மாறிவிடும். இவ்வாறு புத்துயிர் அளிக்கப்பட்ட  எண்ண  அலைகளை தியானம் செய்பவர். விருப்பமில்லாதவர் போன்று கவனிக்க வேண்டும்.
அத்தோடு அதன்படி நடக்க முற்படக்கூடாது .அவ்வாறு  அலட்சியப் படுத்தப்பட்ட  எண்ணங்கள் தெளிந்த மனநிலைக்கு வந்தவுடன் காற்றுக் குமிழிகள் போன்று வெடித்துச் சிதறி மறைந்துவிடும். இவ்வாறு தொடர்ந்து  தியானம் பழகுவதால் படிப்படியாக  பழைய சமஸ்காரங்களினின்றும்  விடுபட்டு  மனத்தூய்மை பெற்றவனாகிறான்.அவ்வாறு இல்லாமல்  புத்துயிர் பெற்ற எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படத்  தொடங்கினால்  புதுப்புது  சமஸ்காரங்கள் தோன்றிவிடும். மனமும் தூய்மை அடையாமல் போய்விடும்.
-

  சித்திகள்(அமானுஷ்ய சக்திகள்)
-
  இராஜயோகம் பயிலும் சாதகன் தியானம் பழகும் போது பிறர் மதிக்கும் அளவிற்கு மனத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளும் திறமை பெற்றுவிடுவான். அதன் பயனாக அவனுக்கு அஷ்டசித்திகள் எனப்படும் மேலான எட்டு சக்திகள் கிடைத்துவிடும்.
அவையாவன-(1)அணிமா-இந்த சக்தி பெற்றவனுக்கு மிகச்சிறிய மூலக்கூறாக வளர்ந்து திடப்பொருள்களுக்குள் ஊடுருவிச் செல்லும் திறமை கிடைத்துவிடும்.
(2)-லகிமா-இந்த சக்தி பெற்றவனின் உடல் மிகவும் லேசானதாக ஆகிவிடும்.
(3)-இந்த சக்தியைக்கொண்டு (உருவத்தை) உடலை விரிவடையச்செய்யலாம்.
(4)-பிராகாமியா-பிறரால் எதிர்க்க முடியாத விருப்பத்தை உடையவனாவான்.
(5)-மஹிமா-உடலை மிகவும் பெரிதாக்கிக் கொள்ளும் திறமை அடைதல்.
(6)-ஈஷித்வா-இறைச்சக்தி போன்ற திறமையைப் பெறுதல்.
(7)-வசித்வா- ஒருவருடைய ஆணைக்குக் கீழ் அனைத்தையும் கொண்டு வருதல்.
(8)-காமாவசாயிதா-தான் எதை விரும்பினாலும் அதை அடையும் திறமை.
மேலே கூறப்பட்ட எட்டு சக்திகளைத் தவிர மேலும் சில சித்திகளும் கிடைக்கலாம்.அதாவது பறக்கும் திறமை அடைதல் –கேசரி வித்யா(Khechari-vidya).சாவை வெல்லும் திறமை –ம்ருத்யுஞ்ய வித்யா (MRITYUNJAYA-Vidya), புதையல் இருப்பதை அறிந்து  அதை அடையும் திறமை –பாதாள சித்தி (Patala-Siddhi) , பிறரது  உடலுக்குள் புகும் சக்தி-காய சித்தி (Kaya-siddhi) , கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால  நிகழ்வுகள் பற்றிய  அறிவு, திரி கால ஞானம்(Trikala-Jnana) விரும்பும் போது மரணம் அடைதல் – இச்சா ம்ருத்யு (Ichchha-Mrithu), தன்னைப் பிறர் கண்காணாமல் ஆக்கிக் கொள்ளுதல்- அந்தர் தான (antnrdhana), பசி தாகம் எடுக்காமல் இருக்கும் தன்மை அடைதல்-சஷீத்பிபாஸ(Kshutpipasa-nivitti), அனைத்துப் பிராணிகளின்  மொழிகளை அறிதல் (Sarvabhutarnuta-Jnana)  போன்றவற்றையும் அடையலாம்.
ஆனால் சாதகர்கள் மேலே கூறப்பட்ட எந்த ஒரு சக்தியையும்  உபயோகப்படுத்தக் கூடாது என்று  அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவை அனைத்தும்  ஆன்மீக  முன்னேற்றம் என்னும்  பாதையில் இருக்கும்  மைல்கற்களைப் போன்றவை. அவை அடைய வேண்டிய குறிக்கோளை அடையவிடாமல் தடுக்கும் தடைக்கற்களாகும்.எந்த சாதகனாவது இந்த சித்திகளின் வசீகர சக்திகளின் ஆளுமையால்  ஈர்க்கப்பட்டு எந்த ஒரு மைல் கல்லிலாவது சிக்கிவிட்டால் அவனால்  அடைய வேண்டிய  குறிக்கோளை அடையவே முடியாது. இந்த சித்திகளின் பக்கம் எண்ணத்தைச் செலுத்தாது அவற்றை  அலட்சியப்படுத்திவிட்டு  சீராக முன்னேற்றப் பாதையில் சென்றால்   குறிக்கோளை எளிதாக அடைந்து விடலாம். ஒரு தடவை குறிக்கோளை எட்டி விட்டால்  அவனுள் இருக்கும் தெய்வீக சக்தி அதிக ஒளியுடன் வெளிப்படும்.அதன் பிறகு அவன் மனிதனின்  எல்லைக்குட்பட்ட சக்திகளினின்றும்  விடுபட்டுச் சிறந்த முனிவனாகிவிடுவான்.

தொடரும்..

https://wa.me/919789374109?text=send_group_link

No comments:

Post a Comment