Friday, January 17, 2020

அசைவ உணவையே தொடாத) கிராமம்

*தமிழ் நாட்டிலும் உள்ள ஒரு unique (அசைவ உணவையே தொடாத) கிராமம்:*

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாடிமனைப்பட்டி என்ற கிராமத்தில் கோழி, ஆடு வளர்க்கக் கூடாது. கண்மாயில் மீன் பிடிப்பது இல்லை. கடந்த 55 ஆண்டுகளாக சன்மார்க்க சங்கத்தில் இணைந்து, மூன்று தலைமுறைக்கும் மேலாக இந்த கிராமத்து மக்கள் தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்துக்குள் டாஸ்மாக் வாடையே கிடையாது. பிரதி வாரம் திங்கள் கிழமை உழவு மாட்டிற்கும், உழவர்களுக்கும் விடுமுறை நாளாகும். இந்த கிராமத்தில் அனைத்து விதமான பறவைகளும் அதிகமாகவே உள்ளன. ஆனால் இதனை வேட்டையாட யாருக்கும் அனுமதி கிடையாது.

இங்குள்ள ஆண்களை திருமணம் செய்து கொண்டுவரும் பெண்களும் இவர்களது பழக்கத்திற்கு மாறி விடுகின்றனர். இப்பகுதியில் உள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டு சென்றாலும், அங்கேயும் பெண்கள் சன்மார்க்கத்தையே கடைபிடிக்கின்றனர்.

இவர்களது திருமணம் உறுதி மொழி எடுத்து, வேதமந்திரங்கள் இல்லாமல், மிக எளிமையான முறையில் நடைபெறுகிறது. திருமணத்திற்கு வரதட்சணை வாங்குவதில்லை.

தற்போது வரை இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அடிதடி, சண்டையென காவல் நிலையம், நீதி மன்றம் சென்றதில்லை. இவர்கள் வள்ளாலாரின் சன்மார்க்கத்தை பின்பற்றுவதால் பலரும் நூறு வயதுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர்.

பலர் நோய்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றதே இல்லை.

இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி கூறியதாவது :

" வாடிமனைப்பட்டி கிராமத்தில் சன்மார்க்க கொள்கைகளை கடந்த 55 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறோம். இந்த கிராமத்தில் கோழிகள், ஆடுகள் வளர்க்காததற்கு சிறப்பான காரணம் வேறொன்றுமில்லை. அவைகளை வளர்த்தால் ஒரு காலகட்டத்தில் அவைகளை கொன்று தின்னும் எண்ணம் வளரும். எனவேதான் வளர்ப்பதில்லை. கண்மாய்கள் அழியும்போது, அதில் வளர்ந்த மீன்களையும் நாங்கள் பிடிப்பதில்லை. அவை தானாகவே இறந்து விடும். மீன்களைப் பிடித்தால், அதனை கொன்று தின்னும் எண்ணம் வரும். எனவே யாரும் மீன்களைப் பிடிப்பதில்லை. இப்பகுதியில், விவசாய நிலத்தில் உள்ள பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிப்பதில்லை. பயிர்களுக்கு அடி உரமாக வேப்பம் புண்ணாக்கு, செடி, கொடி, இலைகளை உரமாக போட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றோம்.

இங்கு பசு மாடுகள், காளை மாடுகள் மட்டும் வளர்க்கப்படுகின்றன.
அருகில் உள்ள கிராமத்தில் வளரும் கோழிகள், ஆடுகள் கூட எங்கள் பகுதிக்குள் நுழைவதில்லை. இங்குள்ளவர்கள் யாருக்கும் மதுப்பழக்கம் கிடையாது.

பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் 'அ' என்ற உயிரெழுத்தில்தான் பெயரிடப்படுகிறது. அதற்குக் காரணம் அருட்பெருஞ் ஜோதி மகா மந்திரத்தின் முதல் எழுத்து 'அ' தான். அதனால்தான் இவ்வாறு பெயர்களை வைக்கிறோம்" என்றார்.

இவ்வளவு நல்லொழுக்கத்தை இந்த கிராமத்தில் ஏற்படுத்தியது யார் எனக்கேட்டபோது:
" அவர் பெயர் முத்தையா. சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமமே வள்ளலார் வழியை பின்பற்ற இவர்தான் காரணம். சில ஆண்டுகளுக்கு முன்புதான்
இறந்தார்" என்றார்.

முத்தையா மகன் சத்தியசீலன் கூறியது :

" எனது தந்தை முத்தையா செய்த ஒரு தீவிரமான காரியம் என்னவென்றால், அந்தக் காலத்திலேயே சைக்கிளில் அன்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு 99 கிராமங்களுக்குச் சென்று சன்மார்க்க கல்வியை புகட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது 130 சன்மார்க்க கிளைச்சங்கங்கள் உள்ளன" என்றார்.

*நம் மண்ணில் இப்படியொரு அதிசய கிராமமா? இவர்களது வாழ்க்கையை பின்பற்றினால் நிச்சயமாக நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழலாம்.*

No comments:

Post a Comment