வீடுதோறும் வாழை இலையில் சாப்பிடுவோம்!
வாழைமரம் தமிழர் பண்பாட்டில் இரண்டற கலந்த ஒன்று. மங்கல நிகழ்வின் அடையாளமாக கொண்டாடப்படும் மரம்.அதன் இலையில் உணவு பறிமாறுதல் நமக்கு பழக்கமான ஒன்று. எவர்சில்வர் பயன்பாட்டிற்கு பிறகு வீடுகளில் பெருபாலானோர் இலையை, மறந்து தட்டுக்கு மாறியுள்ளனர். நகரங்களில்தான் வாழைமரம் வளர்த்து இலை பறிக்க எல்லோருக்கும் வாய்ப்பிருக்காது. வாய்ப்புள்ள கிராமங்களிலும் தட்டையே பயன்படுத்துகின்றனர்.
வாழையிலையில் சுடசுடச் சோறு பிசைந்து சாப்பிடுவது தனி சொகம்தான். சித்தமருத்துவம் கூட இதற்கு மருத்துவ பலன் இருப்பதாக கூறுகிறது. மருத்துவ பலன் இருக்கட்டும். சுற்றுசூழலுக்கு வாழை இலை பயன்பாடு மிகுந்த பயனளிப்பதாகவே கருதுகிறேன். கிராம, சிறுநகரங்களில் வசித்தபோது இயற்கையோடு ஒன்றியிணைய கிடைத்த கொஞ்ச வாய்ப்புகளும் சென்னை வந்தபிறகு முழுமையாக துண்டிக்கப்பட்டதை உணர்ந்தேன்.
கிராமங்களில் இலவசமாகவும் சிறுநகரங்களில் சிறுதொகைக்கும் கிடைத்த முருங்கைக்கீரை சென்னை வந்த முதல் மூன்றண்டுகள் முருங்கைக்கீரை சுவைக்காமலே கழிந்தது. ஓரிரு சமயங்களில் சந்தையில் முருங்ககீரை கண்டு ஆசையில் அதன் விலைகேட்டு வாயடைத்ததுண்டு. காரணம் ஊர்களில் அக்கம்பக்கத்துவீடுகளில் வசிப்பவர்கள் சமையலுக்கு காய் இல்லாதபோது சொல்லிவிட்டு தானாக பறித்துச்செல்வர். எங்கள் முருங்கைமரமும் அப்படித்தான் பயன்பட்டது. நாங்களும் அப்படித்தான் முருங்ககீரை மற்றவர்களிடமும் பெற்றுயிருக்கிறோம்.
அதேபோலத்தான் வாழைஇலையும், அக்கம்பக்கத்து வீடுகளில் இலவசமாக அறுத்துக்கொள்ள இயலும். அதற்கு அன்புதான் விலை. அப்படி பழகிய நமக்கு இலையை விலைகொடுத்து வாங்க தொடக்கத்தில் சங்கடம் இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் கவிஞர் தமிழியலனோடு உரையாடியபோது சொன்னார்.
எங்கள் வீட்டில் மூன்றுவேலையும் வாழையிலை சாப்பாடுதான் என்றார். எனக்கு வியப்பு மேலிட்டது. சென்னையில எப்படி மூன்று வேளையும்..?வியப்பாய் கேட்டேன். ’’வாரம் ஒருமுறை காய்கறியோடு வாழையிலையும் வாங்கிவிடுவோம். டிபன் இலை என ஒரு இருபது ரூபாய்க்குக் கேட்டால் ஒரு வாரம் முழுதும் பயன்படும் அளவுக்கு எண்ணிக்கையில் அதிக இலை கிடைத்துவிடும். மகிழ்வாய் சாப்பிடுகிறோம்.’’ என்றார்.
அந்த உரையாடலுக்குப்பிறகு எனது வீட்டிலும் அந்த நடைமுறை பின்பற்றத் தொடங்கினேன். கிராமத்தைப் பிரிந்துவிட்ட உணர்வில் சின்னதாய் மீண்டும் இணைப்பு ஏற்பட்ட உணர்வு பெரும் மகிழ்வைத் தந்தது. அதுமட்டுமல்ல வீட்டில் பெண்களுக்கும் சாப்பாட்டு தட்டு கழுவுகிற வேலை மிச்சம். நேரம் மிச்சம். பாத்திரம் கழுவுகிற தண்ணீர் மிச்சம். பாத்திரத்தை கழுவ பயன்படுத்தும் ராசயண சோப்பின் பயன்பாடு குறைவு என நன்மைகளை உணரமுடிந்தது.
இலை, பாலீதீன் தாள்களைப் போல் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது என்பது இன்றைய விஞ்ஞான உலகுக்கு முக்கியச்செய்தி. இந்த இலை பயன்பாட்டை வீடுதோறும் ஏற்படுத்தினால் வாழை விவசாயிகள் பொருள் வளம் பெறுவர். நிலத்தை மனைகளாக விற்க முன்வரமாட்டார்கள். உலகில் எந்த ஒரு மாற்றமும் சிறுபுள்ளியில் தான் தொடங்குகிறது நண்பர்களே.
-யாணன்
No comments:
Post a Comment