Tuesday, February 2, 2016

வாழ்த்துவது நம்மை நாமே வாழ்த்துவது,

கேள்வி - அலுவலகத்தில் மற்றும் நிறைய இடங்களில், எங்கு சென்றாலும் இவ்வளவு ஏன் வீட்டில் உள்ளவர்கள் கூட எனக்குத் தடைகளை ஏற்படுத்துபவர்களாகவும், தீங்கு செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள். நான் என்ன செய்வது ? தியானம் செய்யலாமா ? அப்படி தியானம் செய்யும் பொழுது தீமைகளை விலக்கும் ஏதேனும் மந்திரத்தை உச்சரிக்கலாமா ? அப்படிப்பட்ட மந்திரம் இருந்தால் சொல்லுங்களேன்.

இராம் மனோகர் - இந்நிலையில் நீங்கள் தியானம் செய்ய அமர்ந்தால் அங்கும் உங்களுக்குத் தடை ஏற்படுத்தப்படுவது போலத்தான் தோன்றும். தியான முயற்சியால் அந்த எண்ணம் வலுப் பெறும் பொழுது அத்தகைய சூழல் இயல்பாகவே உருவாகிக் கொண்டேயிருக்கும். இது மனதால் ஏற்படும் பிரச்சனையாகும். நமது வாழ்க்கைச் சூழல்கள் செயலுக்கு வருவதும், வராமல் போவதும் நம் கையில்தான் இருக்கிறது. எல்லாமே நமக்கு எதிராக செயல்படுகிறது என்றால், நமது, எண்ணமோ, சொல்லோ, செயலோதான் அதற்கு காரணமாக இருக்கும். எனவே நம்மை நாம் தற்சோதனை செய்து நம் எண்ணங்களை, சொற்களை, செயல்களை சீரமைத்துக் கொள்வது மட்டுமே ஒரே உபாயமாகும். சிலர் ஜோதிடர்களிடம் போய் கேட்பார்கள். அவர் இன்ன  இன்ன கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள் தடை விலகும் என்று சொல்வார்கள். அவர்களும் ஜோதிடர் சொன்ன அனைத்து கோவில்களுக்கும் சென்று வழிபாடு செய்துவிட்டு நம்பிக்கையோடு வருவார்கள். அந்த நம்பிக்கையானது அவர்களது வாழ்க்கைச் சூழலை மாற்றி விடுவதோடு, அவர்களது எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் கூட மாற்றத்தை ஏற்படுத்தி விடும். ஆனால், இது அனைவருக்கும் பலன் தராது. தன் நிலை குறித்த தெளிவு, ஆழமான நம்பிக்கை, எண்ணங்களை, சொற்களை, செயல்களை மறு சீரமைத்துக் கொள்ளும் நோக்கம் இவற்றைப் பொருத்தான் பலன் அமையும்.

என் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதற்கு ஒரு எளிய வழிமுறையை சொல்லித் தருகிறார். அது என்னவென்றால் வாழ்த்துவது. நம்மை நாமே வாழ்த்துவது, அனைவரையும் வாழ்த்துவது. இடைவிடாமல் காண்போரையெல்லாம் வாழ்த்துவது. அதிலும் குறிப்பாக எதிரிகளை, நமக்கு தீங்கு செய்பவர்களை கூட வாழ்த்துவது மிகமிக அவசியம். பொதுவாக நாம் ஒருவரை வாழ்த்தும் பொழுது நமது மனமானது அறிவு தன் இயக்கதின் நுண்ணிய நிலையைப் பெறுகிறது. நம்மை நாமே வாழ்த்திக் கொள்வதால் மனதில் எழும் அலையானது, நாம் பிறரை வாழ்த்தும் பொழுது, அவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இடைவிடாது வாழ்த்திக் கொண்டேயிருப்பதால் நம் மனதில் அறிவின் நுண்ணிய இயக்க நிலை வலுப்பெற்று விடுவதால் இறைநிலை உணர்வு ஏற்படுகிறது. இதனால் இறைநிலையில் கலந்திருக்கும் நிலை உருவாகிறது. இந்நிலையில் வாழ்த்து அழுத்தம் பெறப் பெற பலன் அதிகரிக்கும். ஒரு முறை வாழ்த்தினாலே ஆயிரம் தடவை வாழ்த்தியதற்கான பலனைப் பெற்றுத் தரும். எனவே ஓய்வாக இருக்கும் பொழுதெல்லாம் நம்மை நாமே வாழ்த்திக் கொள்வதோடு, நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், நமக்குத் தொல்லை தருபவர்கள் அனைவரையும் வாழ்த்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிறார்.

மேலும், தவத்தில் மந்திரங்களை உச்சரிப்பதால் ஏற்படும் பலனை விட, வாழ்த்துவதால் ஏற்படும் பலன் துரிதமாகச் செயல்படும் என்கிறார். நமக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்களோ, அவர்களை ஒவ்வொருவராக நூறு முறை வாழ்த்த வேண்டும். தீமை செய்பவர்களை முதலில் வாழ்த்த வேண்டும். உறவினர்கள், நண்பர்களை அதற்குப் பிறகு வாழ்த்தலாம். அதற்குப் பிறகு பார்த்தால் வாழ்த்துவதற்கு நேரமே இல்லையே என்ற நிலை உருவாகி விடும். நாம் வாழ்த்திக் கொண்டேயிருக்க இருக்க வாழ்த்தப்படுபவர்களுக்கும் நமக்குமிடையே உயிர்க் கலப்பு வலுப்பெற்றுக் கொண்டே வரும். இதனால் நமக்கு தீங்கு செய்ய நினைப்பவர்கள் மனதில் திருப்பம் ஏற்பட்டு விடும். இவருக்குப் போய் தீங்கு நினைத்தோமே, இவருக்குத் தடைகளை ஏற்படுத்தினோமே என்ற எண்ணம் அவர்கள் மனதில் உருவாகும். இந்த எண்ணம் அழுத்தம் பெறும் பொழுது அவர்கள் நிலை மற்றும் குணத்தை மாற்றி நன்மை செய்யக் கூடியவர்களாக மாற்றி விடும். அதாவது நண்பர்களை வாழ்த்துவதினால் அவர்களுக்கு உணர்வுப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பொல்லாதவர்களை வாழ்த்துவதினால் தீமையை விலக்கிக் கொள்வதோடு, அவர்களால் நன்மையையும் அடைகிறோம். இது மிகவும் எளிய உபாயமாகும். இது என்னால் இயலாது என்று உங்களுக்குத் தோன்றுமானால், ஒரு சிறந்த மனதத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது மட்டுமே வழி. வேறு வழியேதுமில்லை.

No comments:

Post a Comment