Sunday, February 14, 2016

கொண்டைக்கடலை சுண்டல்

#கொண்டைக்கடலை சுண்டல்
தேவையானவை: கொண்டைக்கடலை - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன், தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - 1 சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப.

செய்முறை: எட்டு மணி நேரம் ஊறவைத்த கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டுத் தாளித்து, ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து, வேகவைத்த சுண்டலைக் கலந்து, தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்க வேண்டும்.
பலன்கள்: அதிகப் புரதம், கால்சியம், நார்ச்சத்து அடங்கிய இந்த சுண்டலை, வாரம் இரு முறை சாப்பிடலாம். காலை உணவுடன் ஒரு கப் அல்லது மாலைச் சிற்றுண்டிபோல சாப்பிடலாம்.

#சத்துமாவு இனிப்புப் பணியாரம்
தேவையானவை: சத்துமாவு மிக்ஸ் - 1 கப், வெல்லப்பாகு - தேவைக்கு ஏற்ப, அரிசி மாவு - 2 டீஸ்பூன், ஏலக்காய் - 2, நெய் - தேவைக்கு ஏற்ப.

செய்முறை: ஹெல்த் மிக்ஸில், வெல்லப்பாகு, சிறிதளவு தண்ணீர், அரிசி மாவைச் சேர்த்து, திக்கான மாவாகக் கலந்துகொள்ளவும். பணியாரத் தட்டில் நெய் ஊற்றித் தடவிக்கொள்ளவும். ஹெல்த் மிக்ஸ் மாவை பணியாரத் தட்டில் ஊற்றி எடுக்க வேண்டும்.
பலன்கள்: சத்துள்ள மாலைச் சிற்றுண்டி. புரதம், இரும்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம் இருப்பதால், சமச்சீரான உணவைச் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

#இலை அடை
தேவையானவை: கோதுமை மாவு - 300 கிராம், நேந்திரம் பழம் - 1, தேங்காய்த் துருவல், வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள் - சிறிதளவு, உப்பு, தண்ணீர்  - தேவையான அளவு.

செய்முறை:  கோதுமை மாவை, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து, சிறிய வட்டமாகத்  தட்டிக்கொள்ள வேண்டும். நேந்திரம் பழத்தைச் சிறிய துண்டுகளாக வெட்டி, வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி, இலையில் இருக்கும் சப்பாத்தியின் மேல் வைத்து, இலையைச் சரிபாதியாகப் பிரித்து, அரை வட்ட வடிவில் மூட வேண்டும். குக்கரில் இலை அடையை  வேகவைத்து, சூடாகப் பரிமாறலாம்.
பலன்கள்: வாழை இலையில் உள்ள சத்துக்கள், சப்பாத்தி மாவில் இறங்கிவிடும். இதனால் நார்ச்சத்து, மாவுச்சத்து, தாதுஉப்புகள் ஆகியவை கிடைக்கும். உடல் எடை அதிகரிக்க இதைச் சாப்பிடலாம்.

#மினி பொடி இட்லி
தேவையானவை: இட்லி மாவு -  1 கப், இட்லி பருப்புப் பொடி - தேவையான அளவு, கறிவேப்பிலை - 1 கொத்து, நெய் - சிறிதளவு, முந்திரி - 5.

செய்முறை: சின்ன இட்லி ஊற்றுவதற்கான பிரத்யேக இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி கறிவேப்பிலை, முந்திரி போட்டு, தாளித்த இட்லி பருப்புப் பொடியைத் தூவவும். அடுப்பை அணைத்துவிட்டு, அதில் இட்லியைப் புரட்டி முந்திரியைத் தூவிச் சாப்பிடலாம்.
பலன்கள்: இட்லி பிடிக்காத குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவர். குட்டியான வடிவத்தில் இருப்பதால், குழந்தைகளுக்குப் பிடிக்கும். பொடியுடன் நெய் சேர்ப்பது குழந்தைகளின் எடை அதிகரிக்க உதவும். காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது. பெரியவர்கள் மட்டும் நெய், முந்திரியைத் தவிர்க்கலாம்.

RAJAJI JS

No comments:

Post a Comment