Saturday, October 7, 2017

                               *நான் யார் ?*

*வாழ்க வையகம்          வாழ்க வளமுடன்*

                  *வளர்க வேதாத்திரியம்*

*உலகப்பொது அருள்நெறிசமயஆண்டு : 31*

           *அக்டோபர் 08/10/2017 ஞாயிறு*

                    *இன்றைய சிந்தனை*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳.

                               *நான் யார் ?*

நான் உடல் என்று குறுகி நிற்பதா?  நான் மனம் என்று விரிந்து நிற்பதா?  நான் உயிர் [ஆன்மா] என்று உயர்ந்து நிற்பதா?  நான் பிரம்மம் என்று உணர்ந்து, முழுதுணர்ந்து நிற்பதா?

குறுகி நின்றால் விரிவு இல்லை.  விரிந்து நின்றால் குறுக்கமும் விரிவும் மட்டும் தான் உண்டு,  உயர்வு இல்லை.  உயர்ந்து நின்றால் விரிவும் உயர்வும் மட்டுந்தான் உண்டு;  உணர்வு, முழுதுணர்வு இல்லை.  உணர்ந்து நின்றால் இவை அனைத்தும் உண்டு.

உடல் தோற்றமாக இருக்கிறது.  உயிர் ஆற்றலாக இருக்கிறது.  மனம் உணர்வாக இருக்கிறது. மனம் தான் நான் எனிலோ மனம் என்ற ஒன்று தனியாக இல்லையே!  உயிர்தானே மனம் என மறுபெயர் பெற்றிருக்கிறது.  உயிரோ அணுக்கூட்டம்.  அணுவோ பிரம்மத்தின் இயக்க நிலை.  எனவே நான் பிரம்மம் என்பது தெளிவாகிறது.

நான் என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும்.  இறைநிலை உணர்ந்த தெளிவில்தான் ஆசை ஒழுங்குறும்.  எது எல்லாவற்றிற்கும் பெரியதோ, எதை விடப் பெரிது வேறொன்றும் இல்லையோ,  அதுவே நானாக இருக்கும்போது  அந்நிலை உணர்ந்த தெளிவில் நான் இருக்கும் போது அது எனக்கு வேண்டும் இது வேண்டும் என்று அவா எழ இடம் ஏது ?

என்னை உடலளவில் குறுக்கிக் கொண்டிருந்தபோது எதெதனோடோ என்னை ஒப்பிட்டுக் கொண்டேன்.  அப்போது நான் பெரியவன், நான் வல்லவன், நான் செல்வன், நான் அழகன் என்றெல்லாம் தருக்கு வந்தது.  ஒப்புவமையில்லாத ஒரு பெரிய பொருளாக நானே இருக்கும் நிலையை உணர்ந்து கொண்டு விட்ட போது எதனோடு என்னை ஒப்பிட்டுத் தருக்குவது?  ஆணவம் எழக் காரணமே இல்லாமல் அல்லவா போய் விடுகிறது.  நானே பிரம்மம் ஆக இருக்கிறேன், பிரம்மம் எல்லாமாக இருக்கிறது என்னும் போது, எல்லாமே நானாக இருக்கும் நிலையையும் நானே எல்லாமாக இருக்கும் நிலையையும் நான் உணர்ந்து மறவாமல் இருக்கும் போது,  எதன் மீது பற்று வைப்பது? என்னுடையது என்ற பற்று எழ முகாந்திரமே இல்லையே !  நான் என்னும் அகங்காரமும் எனது என்னும் மமகாரமும் ஒருங்கே ஒழியும் இடம் நான் யார்? நான் பிரம்மம் என்ற தெளிவு தான்.

*வாழ்க வையகம்             வாழ்க வளமுடன்.*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
.
         *அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

No comments:

Post a Comment