Monday, January 4, 2016

அச்சம் தவிர்

அச்சம் தவிர்

சமுதாயம் எப்போதும் தன் பயங்களை உன் மீது திணித்து உன்னையும் பயத்தில் ஆழ்த்தத் தயாராய் உள்ளது.

சமுதாயத்திடம் உன் பிரச்சனைகளுக்கான தீர்வைக் கேட்காதே.   நீ யாரிடம் கேட்கிறாயோ, அவன் தன் அனுபவத்தின் அடிப்படையில் தீர்வு சொல்லுவான்.  அது உன் வாழ்க்கைக்குப் பொருந்தாது.  

நீ பிரத்யேகமானவன்.   உன் பிரச்சனைகளும் பிரத்யேகமானவை.   அவைகளுக்கான தீர்வை உன்னால் மட்டுமே தர இயலும். 

அறிவியல் ரீதியான அனுபவங்களை  பகிர்ந்துகொள்ளலாம்.  அவை பொதுவானவை.  உதாரணமாய் நீரை 100 டிகிரி கொதிக்க வைத்தால் என்ன ஆகும் போன்ற அறிவியல் சார்ந்த விசயங்களை சமுதாயத்திடம் இருந்து நீ தெரிந்துகொள்ளலாம்.  ஆனால் உன் வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகள் பிரத்யேகமானவை..  

“என்ன செய்துட்டு இருக்குறீங்க?”
பொதுவாக சமுதாயம் நமைப் பார்த்துக் கேட்கும் கேள்வி

“சமுதாயப்பணி" - பதில்

உடனே,,,,,,,,

“அதில் என்ன வருமானம் வரும்? உங்கள் சர்வைவலுக்கு (Survival) என்ன செய்கிறீர்கள்?  உங்களுக்கு வேறு வருமானம் வருகிறதா?  வட்டிக்கு விட்டிருக்கிறீர்களா? வீடு அல்லது ஏதாவது கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறீர்களா? எப்படி சமாளிக்கிறீர்கள்?  இப்போது எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம்.   பின்னாளில் என்ன செய்வீர்கள்?  வயசான காலத்துல நாலு காசு இருந்தாதானே நாலு பேரு மதிப்பான்.  தயவு செய்து இந்த பொதுப்பணியையெல்லாம் விட்டுட்டு நாலு காசு சம்பாதிக்கப் பாருங்க.,  உங்க மேல இருக்கற அக்கறைலதான் நான் சொல்றேன்”

என ஒரு பேருரையே நிகழ்த்தும்.  

இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் பயம்.  சமுதாயத்தித்தின் பதட்டமயமான வாழ்க்கைக்கு இந்த பயம்தான் காரணம்..  இந்த பயம்தான் அவர்கள் வாழ்க்கையை இயந்திரமயமாக மாற்றிவிட்டது.  இந்த பயம்தான் அவர்கள் வாழ்வை வாழாமல் தொலைத்துவிட்டதற்கான முழு முதற் காரணி.  

இந்த பயமற்று இருப்பவன் அவர்களைப் பொறுத்தவரையில் ஆபத்தானவன்.  அவன் சுயமாய் சிந்திப்பவன்.  அவன் அடக்குமுறைகளுக்குப் பணியமாட்டான்.  அவன் பணத்திற்கு விலைபோக மாட்டான்.  கபட வேடங்களை தோலுரித்துக்காட்டுவான்.  தந்திரங்களால் அவனை வெல்ல முடியாது. அவனை புகழ்ந்துரைத்து காரியங்கள் சாதித்துக் கொள்ள முடியாது.   பிறரின் புகழ்ச்சி என்பது அடிமுட்டாள்தனமானது என்பதை தெளிவாகத் தெரிந்தவன் அவன்.

எனவே இந்த பயத்தை எப்படியாவது அவனுக்குள் திணிக்க வேண்டும் என ஒட்டுமொத்த சமுதாயமும் சேர்ந்து முயற்சி மேற்கொள்ளும்.

“நீ எவ்வளவு திறமை படைத்தவன்.   உன் அத்தனை திறமைகளும் வீணாகிக் கொண்டிருக்கின்றன.  நீ ஏன் இப்படிக் கஷ்டப்படுகிறாய்?  சிறிதே சிறிது சமுதாயத்துடன் ஒத்துப்போனால் நீ ராஜ வாழ்க்கை வாழலாம்.  ஒரு திறமையும் இல்லாதவன் எல்லாம் ஓகோ வென வாழ்கிறான்.  உனக்கென்ன கொறச்சல்”   என ஆசை காட்டும்.

அதற்கு செவிசாய்க்காதபோது விதவிதமாய் பயமுறுத்தும்.  ஒதுக்கி வைக்கும்.   பல்வேறு இன்னல்களைத் தரும்.  ஆனால் மனம் கடந்து சென்றுவிட்டவன் ஒட்டு மொத்த உலகமே எதிர்த்து நின்றாலும்  சலனப்பட மாட்டான்.

எதற்கு இந்த பயம்?   இந்த பயம் தேவையற்றது.. 

எனக்குத் தெரிந்து,,,,,,,

“நான் மிகப்பெரிய பக்திமான்.  வருடந்தவறாமல் ஐயப்பனுக்கு மாலை போடுவேன்.  திருப்பதி செல்வேன்.   கோயில்களுக்கு என்னால் ஆன கைங்கர்யங்களைச் செய்வேன்,   இரண்டு வேளை குளிப்பேன்.   நாள்தவறாமல் சிவன் கோயில் செல்வேன்” எனச் சொல்லும் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உள்ளவன் கூட……

இந்த பயத்தினால் பீடிக்கப்பட்டு,  பொருள் தேடும் முயற்சியில்,  அது தந்த பதட்டத்தில் பலருக்கும் துன்பம் கொடுத்து, ஏமாற்றி, தந்திரம் செய்து அப்பொருளைச் சம்பாதிக்கிறான்.  

உண்மையில் கடவுள் நம்பிக்கை உள்ளவன் செய்யும் செயலா இது!  

தன் தேவைகளை இறை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை இல்லாததனால்தானே இப்படித் தந்திரங்களாலும், சூழ்ச்சியினாலும் செல்வத்தைக் குவித்துக்கொண்டே செல்கிறான்.   பின் எதற்காக தன்னை இறை நம்பிக்கையுள்ளவன் என பறைசாற்றிக் கொள்கிறான் என்பது புரியாத புதிராகவே உள்ளது.  இதைவிட கடவுளை மறுக்கும் நாத்திகனே ஒரு படி மேல் அல்லவா?

ஆகவே பயத்தை விட்டொழி.  அது உன்னை வாழவிடாது.   தன்னையுணர்ந்த சுதந்திர வாழ்க்கைக்காய் ஏக்கம் கொள்.   ஆழந்த தாகம் கொள்.   தவிப்புக் கொள்.   பிரபஞ்ச சக்தி அதற்கான சூழ்நிலைகளை உனக்கு ஏற்படுத்தித் தரும்.   

முழுமையான விழிப்புணர்வில் அகங்காரத்தை கரைத்துவிடும்போதுதான் உன் வாழ்க்கை உண்மையில் ஆரம்பமாகிறது.   அதுவே உன் உண்மையான பிறந்த நாள்.

“உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பதில்லை”

No comments:

Post a Comment