அச்சமும் அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளும்...
நன்றி - பன்னீர் செல்வம் Jc.S.M (தன்னம்பிக்கை இதழ்)
.
பலர் முன்னிலையில் மைக் பிடித்துப் பேச அழைத்தால், “எனக்குப் பேச வராது; பேசிப் பழக்கமில்லை” என்று சொல்லி வாய்ப்பை மறுக்கிறோம்.
பஸ் பயணம்; நான்கு ரோடு சந்திப்பில் சிக்னலுக்காகக் காத்திருக்கும் போதே, பயணிகளை அவசர அவசரமாக இறக்கிவிடும் கண்டக்டரிடம், “பஸ் நிறுத்தத்தில் தான் இறங்குவேன்” என்று சொல்ல முடியாமை,
இளம் வாலிபன், தன் வயதை ஒத்த கன்னிப்பெண்ணைப் பார்த்து, பேச விரும்புகிறான்; அவள் பேச வரும்போது, இவனுக்குப் பேச இயலாமை,
பயிலரங்கம் ஒன்றில் பயிற்சியாளர் கேட்கும் கேள்விக்கு நன்றாகப் பதில் தெரிந்தாலும், எழுந்து சொன்னால் தப்பாகிவிடுமோ என்ற எண்ணம்,
பேச்சுப்போட்டியில் பேசத் தயார்நிலையில் உள்ளபோது, முதலில் சென்று பேச முன்வராத நிலை,
வாசகர்களே! மேலே நீங்கள் படித்தது போன்ற ஏதோ ஒரு நிலையைப் பலர் அனுபவித்திருக்கலாம். இதற்கு என்ன காரணம்?
பயம்.
ஆம்! பயம் தான் அனைத்துக்கும் காரணம்.
சுவாமி விவேகானந்தர், 1893 செப்டம்பர் 11, சிகாகோவில் சர்வமத மகாசபையில் பேசுவதற்காகவே சென்றார். ஆனால், முற்பகலில் தன்னைப் பேச அழைத்த போது, பேசவில்லை. பிற்பகலில் தான் பேசினார். அந்தப் பேச்சும் சுமார் 6 நிமிடங்கள் தான். நியூயார்க் ஹெரால்டு என்ற செய்திப் பத்திரிக்கை, இந்தப் பேச்சுத்தான் தலைசிறந்த பேச்சு; சுவாமி விவேகானந்தரே தலைசிறந்த பேச்சாளர் என்ற செய்தியை வெளியிட்டது.
இந்த பயம் என்ற உணர்ச்சி (மனநிலை) மனிதராகப் பிறந்து வாழும் அனைவருக்குமே உள்ளது. இது மனதின் ஒருநிலை தான். வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மனிதன் குரங்கிலிருந்து தான் தோன்றினான் என்று உறுதிபடக் கூறிவிட்டனர். பயம் என்ற ஒரு குணம். நமக்கு மிருக குணமாகவே வந்துவிட்டது. இது மட்டுமல்ல, இன்னொரு மிருக குணமான கோபமும் சேர்ந்தே வந்துவிட்டது. கோபமும் பயமும் எதிரெதிர் துருவங்கள். ஆனால் நம்மிடம் இரண்டுமே உள்ளன.
.
தோற்றம்
விலங்கினங்கள், தாம் உயிர் வாழத் தேவையான உணவுக்கு தாவரங்களையும், மற்ற உயிரினங்களையுமே நம்பி இருந்தன இருக்கின்றன. பலமுள்ள பெரிய விலங்கு. பலம் குறைந்த சிறிய விலங்கைத் துரத்திப்பிடித்து, உணவாக உட்கொண்டது (உம்) சிங்கம் தன் உணவுக்காக மானைத் துரத்தியது; மானோ தன் உயிரைக் காத்துக்கொள்ள, சிங்கத்திடம் பிடிபடாமல் ஓடியது.
பசியால் சிங்கம் கோபத்துடன் துரத்தியது; உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மான் பயத்தால் ஓடியது. இந்த நிலையில் தான் பயமும், கோபமும் உண்டாயின என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
.
பயம்
தைரியமில்லாத மனநிலை, அச்சம், தயக்கம் போன்ற சொற்களாலும் பயத்தைக் கூறலாம். ஒன்றின் மேலுள்ள ஆசை அல்லது விருப்பத்தின் காரணமாக செய்ய வேண்டிய செயலை, ஏதோ காரணத்தால் செய்யாமல் வாழும் மனநிலை தான் பயம்.
“பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்” என்பது முன்னோர் சொன்ன அனுபவ மொழி. அதுபோன்றே “பயம் வந்திடப் பின்னே செல்வோம்” என்பது உண்மை மொழி. பயமானது நமது நிகழ்காலத்தையும் வீணாக்குவதுடன், எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்குகிறது. ஒருசிலர் மட்டுமே இதற்கு விதி விலக்காயுள்ளனர். மனித இனம் தோன்றியது முதற்கொண்டு, பயம் என்ற உணர்வானது நம் மனதிலேயே முகாமிட்டுள்ளது.
பய உணர்விலிருந்து வெளிவந்து, நம் மனநிலையை மாற்றிவிட்டால், வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும். பயம், கோபம் போன்ற உணர்வுகளை மிருகங்களுக்கு வழங்கிய இறைநிலை. மனிதனுக்கு சிந்தித்துச் செயல்படும் 6-வது அறிவை அளித்துள்ளது.
.
காரணம்
பிறந்த குழந்தைக்கு விபரம் புரியும் வரை இந்த பய உணர்வு இல்லை. அது தேளையும் பயமின்றிப் பிடிக்கும்; நெருப்பையும் துணிச்சலுடன் தொடும். அறிந்தபின் மீண்டும் மீண்டும் அதையே செய்யும். ஏனென்றால், அதனால் வரும் விளைவுகளை அக்குழந்தை, ஆராய்ந்து தெளியும் அறிவாற்றலில் உயரவில்லை.
வளர்ப்பு முறை, விபரம் தெரிதல், கேள்வி கேட்டல் போன்ற பல முறைகளால், ஒரு செயல் செய்தால், அது மோசமான பாதிப்பைத் தரும் என்று தெளிந்தபின், மீண்டும் அச்செயலைச் செய்யாது.
ஆனாலும் அதை வளர்ப்பவர்களது கட்டளைக்கு கீழ்ப்படிந்து, மீண்டும் மோசமான பாதிப்பைத் தரும் செயல்களைச் செய்யும்போது, அதனால் வந்த பலன்களை அனுபவிக்கும் நிலையில் பயம் என்ற உணர்ச்சி உண்டாகிறது.
அடிப்படைக் காரணம் முந்தைய ஒரு நிகழ்வு அல்லது வேறொருவருடைய அனுபவத்துடன் ஒப்பீடு செய்வதால் உண்டாகும் மனநிலை தான் பயம்.
.
உதாரணம்
லூயிஸ் எல். ஹே என்ற பாட்டி தற்போது 80 வயதுக்கு மேல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வருகிறார். சிறு வயதில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையான சூழலில் ஆரம்பக் கல்வி பயின்றபோது, ஒருநாள் மாணாக்கர்களுக்கு கேக் இலவசமாக வழங்கப்பட்டது.
வசதியான மாணாக்கர்கட்கு அதிக எண்ணிக்கையில் வழங்கப்பட்டதைக் கண்டு, தன் முறைவரும்போது, தான் ஆசைப்படும் கேக் கிடைக்குமா? என நினைத்துக் கொண்டிருந்தார். இவரது முறையும் வந்தது; அதற்கு முன்பே கேக் அனைத்தும் தீர்ந்துவிட்டது. ஆசிரியை கேக் துகள்களைத் திரட்டிக் கொடுத்தார். அவருக்கு இவரது ஏழ்மை நிலைதான் தெரியுமே.
அந்த லூயிஸ் எல். ஹே வாழ்க்கையில் பிறபெண்கள் படக்கூடாத துன்பங்களையெல்லாம் கடந்த பின், பயம் என்ற ஒன்றைத் தன்னிடமிருந்து நீக்கும் வழியைக் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தினார்.
அதன்பின் அவரது வாழ்க்கை வளமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைந்தது. அவர்தம் அனுபவங்களை ‘நம் வாழ்வு நம் கையில்’ என்றநூலில் விரிவாக எழுதியுள்ளார். இந்த நூல் உட்பட இவரது 27 புத்தகங்களும் 26 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு சுமார் 50 நாடுகளில் அதிக அளவில் விற்பனையாகின்றன.
“பயத்திலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியது மனப்பயிற்சிகளே” என்கிறார் இவர்.
.
விலை உயர்ந்த தேநீர்
பொதுவாக நன்றாக உடை உடுத்தியிருப்போர், செல்வந்தர்கள், பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல்களுக்கு செல்வது நம்மில் பலருக்கு கனவுகளாகவே இருக்கும்.
தன்னை அறிந்த இளைஞன், தன் திறமையை முழுமையாக நம்பினான். அந்த மாதிரி ஓட்டலுக்கு வருபவர்களைத் தன் வாடிக்கையாளர்களாக்க முடிவு செய்தான். தினமும் தேநீர் அருந்துவதை நிறுத்தி, அந்தத் தொகையைச் சேமித்தான். கணிசமாகச் சேர்ந்தபின், நல்ல உடை ஒன்றை வாடகைக்கு எடுத்து அணிந்தான். நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல் ஒன்றுக்குச் சென்றான். செல்வந்தர்கள் பலர் குழுமியிருந்த பகுதிக்குச் சென்று ஒரு தேநீர் கொண்டுவரச் செய்தான். எல்லோரிடமும் அறிமுகமானான். தன் திறமைகள் என்ன என்பதைச் சிறுகாட்சி மூலம் செய்து காண்பித்தான்.
மனம் மகிழ்ந்த பலர் தம் நிறுவனத்தில் பயிற்சி வழங்க வாய்ப்பு தந்தனர். உலகின் போற்றத்தகுந்த பயிற்சியாளரானார். பல சுயமுன்னேற்ற நூல்களையும் எழுதி, விற்பனையிலும் சாதனை படைத்தார்.
யார் அந்த அமெரிக்கர்?
பதில் தேடுங்கள்; பகிர்ந்து கொள்ளுங்கள்.
.
பயம் நீங்கப் பயிற்சிகள்
சிறு ஆலம் விதை தான்; அதனை மூடியுள்ள உறை, அதனை வெளிப்படுத்துவதில்லை. அந்த உறை நீங்கியபின், நிலத்தில் விழுந்து அபார வளர்ச்சி பெற்று ஆகாயத்தையே மறைக்குமளவு வளர்கிறது.
மனிதர் அனைவருமே திறமைகளுடனேயே பிறக்கின்றனர். பயம் என்ற உறை, அந்தத் திறமைகளை மூடியிருப்பதால், தெரிவதில்லை.
.
“என்னால் முடியாது, எனக்கு வசதியில்லை”
இதுபோன்ற பலவற்றைப் பேசுபவர்கள், பயம் என்ற ஒன்றிடமிருந்து விடுபட்டுவிட்டால், எதையும் சாதிக்கும் சாதனையாளர்களாகி விடுவதைப் பார்க்கிறோம்.
நம்மை மூடியுள்ள அறியாமையால் மூடன் என்ற பெயர் பெறுகிறோம். வானத்தை மேகம் மறைத்ததை, மேக மூட்டம் என்று சொல்வதை நினைவில் கொள்ளுங்கள். அறியாமையை அகற்ற ஓரளவு செய்திகளை, விசயங்களை தெரிந்து கொள்வது அவசியம்.
அறியாமை நீங்கிய நிலையில் ஆணவம் என்ற ஒன்று இயல்பாக வந்து, அலட்சிய மனோபாவத்தைத் தரும். விழிப்பு நிலையில் இருந்து ஆணவம், அலட்சிய மனோபாவம் இரண்டையும் அருகில் வரவிடாமல் செய்யவும்.
அதன்பின் உணர்ச்சிவயப்படுகின்ற பொழுது பழக்கத்தின் காரணமாக, பயமனநிலைக்குச் சென்று விடும் வாய்ப்பு அதிகமுள்ளதாய், நிதானமாக, திட்டமிட்டவாறு, அடிமேல் அடிவைத்து, செயல்பட்டால், பயம் என்ற மனநிலை நம்மிடம் வரவே பயப்படும்.
திருவள்ளுவரும் “தீவினை அச்சம்” என்ற தலைப்பில் 10 குறட்பாக்களில் தீய செயல்கள் செய்ய அச்சப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
.
பயம் என்ற மனநிலையிலிருந்து விடுபட கீழுள்ள நல்ல பண்புகளை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.
.
சுயநேசிப்பு
“உன்னை நீ நேசி” இதன் விளக்கம். எதற்காகவும், எப்போதும் தன்னைக் குறைசொல்லாத மனநிலை. இந்த மனநிலை அவசியம் தேவை. இதைப் பெற, அதிகாலை நேரம், முகம் பார்க்கும் கண்ணாடியில், அவரவர் முகம் பார்த்து, அந்த உருவத்தை நேசிப்பதாய் சொல்ல வேண்டும். இது பல அற்புதங்களை அளிக்கும்.
.
அக்குபிரசர்
பயத்தால் அட்ரினல் சுரப்பி, அதிகம் சுரந்து, குளுக்கோசை அதிக அளவு இரத்தத்தில் கலக்கச்செய்து கூடுதல் சக்தியை உருவாக்கும். இந்த ஆற்றல் பயத்தை வெளியேற்ற, நம் உடல் மேற்கொள்ளும் வழி.
நாம் நம் உள்ளங்கையில் அட்ரினல் சுரப்பி மையத்தை (ஆட்காட்டி விரல், நடுவிரல் இரண்டும் உள்ளங்கையில் சேருமிடத்திற்குக் கீழே சுமார் அரை இஞ்ச் தூரத்திலுள்ள புள்ளி) அழுத்தி, அழுத்தி விடுவதால், அட்ரினல் சுரப்பி, சரியாகச் சுரந்து பயம் என்ற உணர்வை நம் மனதிலிருந்து உதறிவிடும்.
.
முஷ்டி முத்திரை
பயம் நீங்க முஷ்டி முத்திரை அல்லது தன்னம்பிக்கை முத்திரை செய்வது உடனடி பலன் தருகிறது. கை விரல்களை ஒன்றாக இறுகப் பிணைத்தால் உருவாவதே முஷ்டி முத்திரையாகும், இது மிக எளிய முத்திரை.
# பெருவிரல் தவிர்த்துப் பிற நான்கு விரல்களையும் உள்ளங்கையில் இறுக அழுத்திப் படியும் படி வைத்துக் கொள்ளுங்கள்.
# பெருவிரலை மடித்து மோதிர விரலின் மேல் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள்.
# விரல்கள் அனைத்தும் இறுக்கமாக இருப்பது அவசியம். இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும்.
# அமர்ந்த நிலையில் செய்வது நல்லது. நின்று கொண்டும் செய்யலாம். கை விரல்களில் மட்டும் இறுக்கம் இருக்க வேண்டும், உடலின் பிற பாகங்கள் தளர்வான நிலையில் இருப்பது அவசியம்.
# சுவாசம் ஆழ்ந்தும் சீராகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
# தினமும் காலை, மாலை தலா 5 நிமிட நேரம் இருகைகளிலும் செய்துவந்தால் தைரியம் தானே வரும்.
.
மலர் மருத்துகள்
சிலருக்கு காரணத்துடன் கூடிய பயமும், காரணமே இல்லாத பயமும் இருக்கும். விபத்து, தோல்வி, பேய் போன்றபயங்களும் வரும். இருக்கின்ற பயங்களிலேயே பெரிய பயம் மரண பயம் தான். மேலுள்ள பயிற்சிகளுடன் ரெஸ்கியூரெமிடி, மிமுலஸ், ஆஸ்பென், ராக்ரோஸ் போன்ற மலர் மருந்துகளை மனநிலைக்கேற்றவாறு சாப்பிட்டால், மிகக்குறுகிய கால அளவில் பயம் நீங்கிய மனிதராகலாம்.
“அதன்பின் ஜெயமுண்டு; பயமில்லை” என்ற நிலை தான். அச்சம் எனும் பயத்தை அகற்றி அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம்.
.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்
https://www.facebook.com/groups/811220052306876/
.
தெரியாது என்று சொல்வதற்கும் கிடையாது என்று சொல்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது.
# தெரியாது என்றால் எனக்கு தெரியவில்லை என்று அர்த்தம்.
# கிடையாது என்றால் இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் அறிந்த நானே கூறுகிறேன் அப்படி ஒன்றும் கிடையாது என்று அர்த்தம்.
எனவே நாம் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
.
‘கஷ்டம் யாருக்குத்தான் இல்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு’
.
"யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்.
சுதந்திரமாக வாழ்வதற்குரிய ஒரே தகுதி இது தான்."
.
"பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதை கற்றுக் கொடுத்தால், வாழ்க்கையில் முன்னேறுவான்"
.
“பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது
சேவை குணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது”
No comments:
Post a Comment