Monday, April 1, 2019

Maharishi thoughts (April 2)

வாழ்க்கை மலர்கள்; ஏப்ரல் 2

கவலை இல்லை

திறமையின்மை, அச்சம் இவையிரண்டும் கவலைகளைப் பெருக்கும் மன நிலைகளாகும். மனத்தின் விழிப்பு நிலை பிறழ்ந்த மயக்க நிலையும், இயற்கையின் ஒழுங்கமைப்பை அறியாமையும், எளிதில் தீர்வு காணத் தக்க கூர்மை அறிவை வளர்க்கும் சிந்தனைப் பயிற்சியின்மையும் திறமையின்மையாகும். தவறான செயல்களின் விளைவைக் கண்டோ அல்லது தனது வாழ்வின் போக்கில் ஊறு விளைவிக்கும் என்று கற்பனை செய்து கொண்டோ, துணிவிழந்து வருந்துதல் அச்சமாகும்.

கவலையால் உடல், உள்ள நலன்கள் கெடுகின்றன. ஏன்? வாழ்வே துன்பமாகவும், தோல்வியாகவும் அமைந்து விடுகிறது. இதனை மனிதன் ஒழித்தேயாக வேண்டும். கவலையை ஒழிக்க வேண்டுமெனில் இயற்கையின் ஒழுங்கமைப்பை அறிய வேண்டும்; சிந்திக்கும் திறனைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை வேண்டும். முயற்சி வேண்டும். துணிவு வேண்டும்.

மாறாத இயற்கை விதிகளை உணர்ந்து கொள்ளல், சமுதாய ஒழுங்கமைப்பைப் புரிந்து, மதித்து வாழ்தல், தன்னிலை விளக்கம் பெற்றுப் பிறவியின் லட்சியத்திற்கு ஒத்த இசைவான வகையில் வாழ்க்கை நடைமுறைகளை அமைத்துக் கொள்ளல் என்ற அறிவுடைமை வந்துவிட்டால் தானே சிக்கல்களைத் தோற்றுவித்துக் கொள்ளாத தகைமை கிடைக்கிறது. சிக்கல்கள் இல்லாமல் போகவே, துன்பமில்லை, கவலையுமில்லை என்றாகி வாழ்வே ஓர் இன்பச் சோலையாக மாறிவிடும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி

No comments:

Post a Comment