Thursday, April 4, 2019

Maharishi thoughts. (4.4.19)

              *ஏப்ரல்  04 / 04 /2019  வியாழன்*

                      *இன்றைய சிந்தனை*
                         
                       *வருமுன் காப்போம்*

🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

*"உடலில் ஏற்கெனவே இருக்கக்கூடிய நோய்களைப் போக்கிக் கொள்வது என்பது ஒருமுறை. அதைச் சிகிச்சை (Cure) என்று சொல்வார்கள். நோயைத் தீர்த்துக் கொள்வதற்கும் மேலான சிறந்த ஒருமுறை என்னவென்றால் நோய் வராமலே தடுத்துக் கொள்வது (Prevention) என்பதாகும். அவ்வாறு தடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு விழிப்பு, அதற்குரிய செயல், ஒழுங்கு முறைகள் இவற்றைக் கைக் கொண்டால் நோய் வந்த பிறகு தீர்த்துக் கொள்வதை விடத் தடுத்து கொள்வது சுலபமானது எனத் தெரியவரும்.*

*மருத்துவத்துறை விஞ்ஞானிகள் முயற்சி கூடப் பெரும்பாலும் வந்த நோயைத் தீர்த்துக் கொள்வது என்பதோடு நிற்கிறது. அதுவே என்ன ஆகும் என்று பார்ப்போமானால் ஓரு நோய் குறிப்பிட்ட இடத்தில் வந்ததென்றால் அந்த நோய் அந்த இடத்தை மட்டும் சேர்ந்ததாக இராது. வேறு ஏதோ ஒரு இடத்திலே, உறுப்பிலே அது ஆரம்பித்திருக்கலாம். உதாரணமாக அஜீரணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்; அதனாலே தலைவலி இருக்கும். அந்த தலைவலிக்குத் தைலம் போட்டுவிட்டால் அஜீரணம் போகுமா? போகாது.*

*அதுபோல நோய் ஒரு இடத்தில் இருக்கும்; அதனுடைய அறிகுறி அல்லது வெளித் தோற்றம் (Symptoms) வேறு இடத்தில் இருக்கும். சிகிச்சை முறையிலே என்ன செய்கிறோம் என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட உறுப்பின் இயக்கத்தை ஒட்டி அந்த நோயைப் போக்க முயற்சி செய்கிறோம். மருந்தின் மூலமாக அந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம், அந்த வால்வு இயக்கங்கள் ஊக்கிவிடப்படுகின்றன. ஆனால் உடல் முழுவதும் அந்தப் பாகம் நீங்கலாக மற்றப் பாகங்கள் நன்றாக இருக்கின்றனவோ இல்லையோ அவையும் அந்த மருந்தாலே ஊக்கப்படுத்தப் பெறுகின்றன. சரியாக, திட்டமாக, அளவோடு, நன்றாக ஓடக்கூடிய குதிரைக்கு, ஒரு 'சவுக்கடி' கொடுத்தால் என்ன ஆகும். அந்த மாதிரி அந்த பாகங்களிலுள்ள இயக்கம் Accelerate ஆகும், Aggravate ஆகும். விளைவு தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகலாம். அந்த ஒரு இடத்தில் ஏற்பட்ட நோய் போகும்; மற்ற இடத்தில் நோய் வரும். எனவே தான் சொன்னேன் - சிகிச்சை (Cure) என்பதைவிட நோய் வராமல் காப்பது தான் நல்லது என்று."*

               

         *அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*

      *வேதாத்திரி பதிப்பகம் 22 வது பதிப்பு நவம்பர்: 2018 ன் படி வெளியிடப் படுகின்றது.*

No comments:

Post a Comment