Saturday, December 14, 2019

Maharishi thought December"15*குரு தானாக வருவார்*

*வாழ்க்கை மலர்கள்: டிசம்பர் 15*

*குரு தானாக வருவார்*

நாம் அறிவு வளர்ச்சி பெற்று சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கின்ற வரையிலே, இந்த ஐந்து புலன்களிலேயே இயங்கி நாம் எதைப் பார்க்கின்றோமோ அதனுடைய பதிவு அதிலே ஏற்படக்கூடிய இன்ப துன்ப விளைவுகள், அவற்றினுடைய பதிவுகள், அவற்றை ஒட்டி எழும் செயல்கள், அந்தப் பதிவுகளால் மீண்டும் மீண்டும், மேலும் மேலும், வரும் வினைப்பதிவுகள் போன்றவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஆகையினால் அந்த மெய்ப்பொருளாக உள்ள ஆதி நிலையானது அறிவுக்குப் பிடிபடவில்லை. நாம் எங்கிருந்து வந்தோம், எதற்காகப் பிறந்திருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்பது நினைவுக்கே வரவில்லை. சூதாட்டத்தில் இறக்கிவிட்ட ஒருவனுக்கு, அந்த மயக்கத்திலே செயல்பட்டுக் கொண்டு இருக்கக்கூடிய ஒருவனுக்கு, எப்படிக் குடும்பத்தைப் பற்றியோ, லாப நஷ்டத்தைப் பற்றியோ எண்ணம் வராதோ, அதுபோல இந்த இன்ப துன்பம் என்ற ஒரு சூதாட்டத்திலே நம்மைப் பற்றிய நினைப்பே எழுவதில்லை.

இந்த இடத்திலே தான் குருவினுடைய பார்வை, குருவினுடய நினைவு, குருவினுடய சொல் ஒரு மனிதனுக்குத் தேவையாக இருக்கிறது. இங்கே ஒரு கேள்வி? குரு என்றால் யார்? குரு ஏன்றால் அவர் தன்னை அறிந்தவர். அவருடைய உதவி இவனுக்குக் கிடைப்பதற்கு இங்கே அவன் ஒரு நிமிடமாகிலும் சிந்தித்து இருக்க வேண்டும்; தேடி இருக்க வேண்டும். “நான் பிறந்து வந்துள்ளேனே, என்னைப்பற்றி எதுவுமே தெரியவில்லையே, தெரிந்து கொள்ள வேண்டும்” என்று இவனாக நினைத்திருந்தாலும் சரி, இவனுடைய பெற்றோர்கள் நினைத்திருந்தாலும் சரி, அந்த எண்ணம் நிறைவேறாமல் தொடர்ந்து வந்து இருந்தாலும் சரி, அது கட்டாயம் அதற்குரிய ஒரு குருவைத் தேடிக் கொடுத்து விடும்.

வெளியிலே இருந்து வந்த ஒரு உருவத்தை குரு என்று சொல்வதை விட, ஒரு மனிதனுடைய கர்மா, அவனுடைய action, அவனுடைய சிந்தனை, அவனுடைய தெளிவு, அவனுடைய அறிவு வேகம் அவனுக்கு உயர்வு நாட்டத்தைக் கொடுத்து விடுகிறது; அதுவே குருவையும் கொண்டு வந்து கொடுத்து விடும் காலத்தாலே, அந்தக் குருவினுடைய பார்வை, சொல் இவைகள் எல்லாம் சாதகனுடைய உள்ளுணர்வைத் தூண்டி விடுகின்றன.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

No comments:

Post a Comment