Saturday, December 21, 2019

Maharishi thought Dec,21

*வாழ்க்கை மலர்கள்: டிசம்பர் 21*

*நல்மருந்துகள்*

எந்த இடத்தில் மனிதன் ஐவகைப் பற்றுக்களால் அறிவு குறுகி, மயங்கி, தன் பிறவி நோக்கத்தையும் வாழ்வின் நெறியையும், மறக்கின்றானோ அதே நேரத்தில் மனிதனிடம் அமைந்துள்ள அடித்தள அறிவாற்றலாகிய பேரறிவு, குறுகி நிற்கும் புற அறிவை நேரான வழிக்குத் திசை திருப்புகிறது. அப்போது விருப்பங்கள், செயல்கள் இவற்றில் தடைகள் விளைந்து வாழ்வில் மாற்றங்கள் தோன்றுகின்றன. இவையே துன்பமாக, சிக்கலாக, கருத்துப் பிணக்காகப் பெற்று புறமனம் குழப்பமடைகின்றது.

இத்துன்பங்களிலிருந்து புறமனத்தை மீட்கப் பேரறிவு, விரிந்த ஆற்றல் மூலமாகவும், மனிதர் மூலமாகவும் உதவிக் கொண்டே தான் இருக்கும். இந்த நிலையிலேனும் புறமன இயக்கத்திலேயே குறுகியுள்ள மனிதன் அவன் வாழ்வின் இயக்க களமான அருட்பேராற்றலை நினைவு கொள்ள வேண்டும். பேரறிவின் நிலைக்கு அந்நினைவு அழைத்துச் சென்று ஒன்ற வைத்துவிடும். இந்த வகையில் பேரறிவில் புற மனம் தோய்வு பெறும், மனித முயற்சியே யோகம் எனப்படுகிறது. எனவே, வாழ்வின் சிக்கல்களும், துன்பங்களும் பிறவியின் நோக்கத்திற்கு முரண்பட்ட செயல்களின் விளைவுகளேயாகும். அவை திசைமாறி நிற்கும் புறமனத்தை ஒழுங்குபடுத்தப் பேரறிவு அளிக்கும் நல் மருந்துகளே (Divine Treatments) ஆகும். இயற்கையின் இத்தகைய ஒழுங்கமைப்பை உணர்ந்து, அதனால் விளைந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டு திருத்தம் பெற மனிதன் முயன்றால் உய்வு நிச்சயம்.

யோகப் பயிற்சியின் மூலமாக மனிதன் பேரறிவாக, விழிப்போடு இயங்கவும், வாழ்க்கையில் சிக்கல்கள், துன்பங்கள் விளையாமல் காக்கவும் வந்த பின் முறையாகப் போக்கவும் ஆற்றலைப் பெறுகிறான். இதன் மூலம் பிறவி நோக்கத்திற்கு முரண்படாது அவன் பயணம் இனியதாக அமையும். இத்தகைய பெருமை வாய்ந்த யோகப் பயிற்சியில் மிகவும் மதிப்புடைய எளியமுறைக் குண்டலினி யோகத்தைப் பயின்றுவரும் பேறு பெற்ற உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

No comments:

Post a Comment