Tuesday, November 26, 2019

Maharishi thought Nov"26

*வாழ்க்கை மலர்கள் - நவம்பர் 26*

*தன்னிறைவுக்கான வழி*

மேல் நாட்டிலே கூட இந்தியாவை ஏழை நாடு, என்று கூறுவதுண்டு. உண்மையிலேயே இந்த நாடு ஏழை நாடு அன்று. இந்த நாட்டிலே என்ன குறைவு? இதைத்தான் நான் உங்களிடம் கேட்கின்றேன். இயற்கை வளத்திலே குறைவா, மக்களிடைய அறிவிலே குறைவா, அல்லது ஞானத்திலே தான் இந்நாடு குறைந்து விட்டதா? எவ்விதக் குறைபாடும் இல்லை.

இன்று இந்திய நாட்டிலே படித்துப் பட்டம் பெற்ற விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் சிறந்து விளங்குகின்றார்கள். பல நாடுகளை இவர்கள் வளப்படுத்துகின்றார்கள். இத்தகைய முறையிலே இன்று எல்லா நாடுகளுக்கும் விஞ்ஞானிகளை ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கிறது என்றால் இது தவறன்று. நான் நேரடியாகச் சென்று பார்த்ததைத்தான் கூறுகிறேன். இந்த முறையிலே இந்நாட்டிலே விஞ்ஞான அறிவானது அந்த அளவிற்குத் ததும்பி இருப்பதைக் காண்கின்றோம்.

இவ்வாறு இருந்தும் என்ன குறைபாடு என்று கூறினால், அரசியல் முறையிலே இருக்கக்கூடிய ஊழல்கள் தான் இதற்கு காரணம். ஒழுங்கான அரசியலை நம்மால் அமைத்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் அன்னிய நாட்டு ஆட்சியிலே பட்ட பண்பாடானது அப்படியே தொக்கி நிற்கின்றது. இன்னும் நமக்கேற்ற முறையிலே நாம் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளவில்லை.

வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், வாழ்வாங்கு வாழ வேண்டுமானால், ஒவ்வொரு மனிதனுக்கும் ஐந்து துறைகளிலே அறிவு வேண்டும். அவை

(i) அறிவு
(ii) சுகாதாரம்
(iii) பொருளாதாரம்
(iv) அரசியல்
(v) விஞ்ஞானம்

ஆகிய ஐந்தும் வாழ்க்கைத் தத்துவங்கள். வாழ்க்கைக்கு இந்த ஐந்தும் தேவை. ஒவ்வொரு மனிதனும் இந்த ஐந்திலேயும் நிறைவு பெற வேண்டும். சிறு குழந்தை முதற்கொண்டு 15, 20 ஆண்டுகள் வரையிலே இந்த ஐந்து துறைகளிலும் அறிவு பெற வேண்டும். அதன் பின்பு வாழ்க்கையிலே புகுந்தால் தன்னிறைவாக இருக்கும். யாரிடமும் ஒன்றும்  கேட்க வேண்டியதே இல்லை. எல்லாவற்றையும் அவரவரே உணர்ந்து திருந்தி அவர்கள் செயல்பாடுகளைச் செய்வதற்கு நல்ல வாய்ப்பிருக்கும்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

No comments:

Post a Comment