Wednesday, October 30, 2019

Maharishi thought October-30

*வேதாத்திரிய மெய்விளக்கம்   30-10-2019   உலக அமைதி நாள் 30-10-0034*

*யோகப்பயிற்சிகள் மூலமும் தத்துவ விளக்கங்களைக் கொண்டும்*
*சிந்தித்தால் இறையாற்றலே அறிவு - அறிவேதான் தெய்வம்!*

வேதாத்திரி மகரிசி அவர்கள் ஒருமுறை பெரியார் பிறந்த ஈரோட்டில் “கடவுளைக் காணலாம்” என்ற தலைப்பில் உரையாற்ற இருந்தார்.
அப்போது திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் மகரிசியிடம் வந்தார்.

“ஐயா, இது பெரியார் பிறந்த மண். இங்கு இத்தனை ஆண்டு காலமாக கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொல்லி எங்களை எல்லாம் பக்குவப் படுத்தி விட்டுப் போயிருக்கிறார்.

பெரியார் கருத்தைப் போன்றே தங்கள் கருத்தும் இருக்கும் என்று
கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் இதே இடத்தில் வந்து
கடவுளைக் காணலாம் என்று பேசி எங்களைக் குழப்புகிறீர்களே” என்றார்.

அதற்கு மகரிசி அவர்கள், *“அன்பரே, அவர் சொல்லியதைத்தான் நான் சொல்கிறேன்.*

எல்லையற்ற இறைநிலையை எல்லை கட்டி ஒரு இடத்தில்
ஒரு உருவத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை அவர் எதிர்த்தார்.

அதனால் பெருகும் ஊழலை, அறியாமையை, வியாபாரத்தை
அவர் எதிர்த்தார். மனிதனை மதி என்றார்.

நானும் அதைத்தான் சொல்கிறேன். இறையாற்றல் (Static state, Unified force, The Source of all the Forces) எங்கும் நிறைந்த பரம்பொருள்.

இறையாற்றல் தான் அணு முதல் அண்டமாகி ஓரறிவு முதல் ஆறறிவாகப் பரிணமித்து மனிதனாகவும் வந்துள்ளது.

அவனுள் இறையாற்றலே அறிவாகவும் இருக்கிறது.

இதை யோகப் பயிற்சியின் (Meditation) மூலமும் தத்துவ விளக்கங்களையும் கொண்டு சிந்தித்து அறியச் சொல்கிறேன்.

கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவது போல மக்கள் மனதைப் பண்படுத்தி சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார்.

அதில் "சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன்.
இதில் வேறுபாடு இல்லை” என்றார்.

*கடவுள் *

கட +  உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்,
   கருத்தறியான் ஊன்றி இதைக் காணவில்லை
கட + உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி
   கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்;
கட + உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டி
   கடவுள் என்றே சொல்லிச் சொல்லி வழக்கமாச்சு;
கட +  உள் என்று மனிதன் ஓர் குறிப்புத்தந்தான்
   கடவுள் எங்கே? என்று பலர் தேடுகின்றார்!

(ஞானக்களஞ்சியம் கவி: 1121)

*உண்மை நிலையறிய ஒத்தவழி*

கும்பிடுதல் பொருட்கள் பல கொடுத்தல் இவை இரண்டிற்கே
   குரு தெய்வ நாட்டமுடன் கூடி அலையும் உலகீர்!
வம்புகளை வளர்க் கின்றீர்! வாழ்வைப் பாழாக்கு கின்றீர்!
   வாரீர்! அறிவை அறிந்தவ் வழி ஒழுகி உயர்வடைவீர்!

(ஞானக்களஞ்சியம் கவி: 1342)

*கடவுள் தன்மை*

கண்காது மூக்கு வைத்துக் கதைகள் சொல்லிக்
    கருத்துக்குக் கடவுள்தனைச் சிறுமை யாக்கி,
புண்பட்ட நெஞ்சங்கள் மேலும் புண்ணாய்ப்
   போகும் வழியறியாது தவித்து, வாழ்வில்
கண்கலங்கி நிற்போர்க்கும், கடவுள் தன்மை
   கர்மத்தின் விளைவாக எழுந்தியங்கும்
உண்மையினை விளக்குவதே இக்காலத் திற்கு
   ஒத்த உயிர்த் தொண்டாகும், உணர்வோம்! செய்வோம்!

(ஞானக்களஞ்சியம் கவி: 1832)

*சுய சரித்திரம்*

அறிவதனை பக்தி நெறியில் இணைத்து
   ஆழ்ந் தொடுங்கி ஒழுக்கத்தால் உயர்ந்தபோது
அறிவாலே மெய்ப் பொருளை உணரவென்ற
   ஆர்வத்தோ டறிவறிய வேட்பும் ஓங்க
அறிவுதனை அகத்தவத்தால் நிலைக்கச் செய்தேன்
   ஆதிநிலை மெய்ப்பொருளாய் அதன் இயக்கம்
அறிவாக உணர்ந்து விட்டேன். அப்பேரின்ப
   அனுபவத்தை உலகோர்க்குத் தூண்டு கின்றேன்.

(ஞானக்களஞ்சியம் கவி: 747)

*வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*

*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*

No comments:

Post a Comment