Thursday, January 4, 2024

MAHARISHI THOUGH AUGUST'25

*வாழ்க்கை மலர்கள்: ஆகஸ்ட் 26*

*சிவயோகம்*

பிற உயிர் உணரும் இன்ப துன்ப இயல்பினைக் கூர்ந்து உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நுட்பமும், அப்படி உணர்ந்து கொண்ட பிறகு அதற்கு இரங்கி உதவும் ஒரு திருப்பமும் மனிதனிடத்து வந்து விடுமேயானால், மனிதனுடைய மனதிலே அறவுணர்வு என்னும் தெய்வீக உணர்வு கிட்டும். பிறருடைய துன்பத்தை நீக்க வேண்டும் என்ற கருணையானது உள்ளத்திலே எழுகிறதல்லவா? அதுதான் உறவு. அந்த உறவை, உண்மையான உறவைப் பிறரோடு கொண்டபோது அதிலிருந்து சேவை மலர்கிறது.

அறிந்தது சிவம். காட்டுவது அன்பு. சிவம் என்ற ஒரு நிலையை அறிவு உணர்ந்தது; அது செயல்படும்போது அன்பாக மலர்ந்தது. அப்பொழுது அன்பு என்ன என்று பார்க்கும்போது “சிவத்தின் செயலே” எனத்தெரிய வரும். செயலிலே விளைவாக எப்பொழுதும் வந்து கொண்டிருப்பது சிவத்தின் தன்மை.

ஆகவே நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து மதித்து அனைவரோடும் உறவு கொண்டு கடமையாற்றி வந்தால், அதுவே சிவயோகம். எந்தப் பொருளிலேயும், சிவனைக் காணலாம். எந்த நிலையிலேயும், சிவனாகவே இருக்கலாம். சிவனோடு உறவாக இருக்கலாம்; உறைந்து இருக்கலாம். உடலால் வேறுபட்டு இருந்தாலும் உள்ளத்தால், அறிவால் இறைவனோடும், உயிர்களோடும் ஒன்றுபட்டு இருப்பதை உணரலாம். இந்த நிலைக்கு அறிவை உயர்த்த வல்லவை, தவமும் அகத்தாய்வும் தான்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam
    🔔 ▶️ www.youtube.com/SkyVethathiriyaGnanakkudil 🔔

No comments:

Post a Comment