Saturday, April 4, 2020

Maharishi thought April 4

*வாழ்க்கை மலர்கள்: ஏப்ரல் 4*

*ஓர் உலக ஆட்சி*

அரசியல் தலைவர்களாலோ, மதத் தலைவர்களாலோ பொருள்துறைத் தலைவர்களாலோ உலகில் அமைதி ஏற்படுத்திட முடியாது. ஏனெனில் இவர்கள் தனித்தன்மையில் எவ்வளவுதான் உயர்நோக்கம் உடையவர்களாக இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட வகையில் வாழ்க்கை நலத்தில் எல்லை கட்டிக் குழுவினர்கள் அளித்துள்ள பதவி, பணம், இவற்றிக்குக் கட்டுப்பட்டவர்கள்.

ஆகவே, ஆன்மீகத் துறையில் உலக மக்கள் அனைவரையும் பொறுப்புடன் இணைத்து நலம் காக்க ஆன்மீக நோக்குடைய ஒரு இயக்கம் தான் நேர்-நிறை உணர்வோடு உலக அமைதிக்கு வழிகாட்ட முடியும்.

நான் கொடுக்கும் திட்டமோ, மிகவும் எளிது; புரிந்து கொள்ளவும் செயல்படுத்தவும் இயல்பானது. ஐக்கிய நாடுகள் சபைக்குப் போதிய அதிகாரமளித்து உலக நாடுகள் ஒன்றிணைந்து உலகிலுள்ள எல்லா ஆட்சி எல்லைகளையும் பாதுகாக்கும் பொறுப்பைக் கூட்டாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்போதுள்ள எல்லைத் தகராறுகளை ஐ.நா. சபை ஏற்படுத்தும் நீதி மன்றத்தின் மூலம் எல்லா நாடுகளும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளக் கூடிய திட்டமும், செயலும் நாம் கொடுக்கும் திட்டத்தின் சாரமாகும்.

தனித்தனியே எந்நாட்டுக்கும் ராணுவம் தேவைப்படாது. இன்றுள்ள ராணுவ அமைப்புச் செலவையும், போர் வீர்ர்களின் சேவையையும், பின் தங்கிய நாடு, பின் தங்கிய மக்கள் இவர்கள் முன்னுக்கு வரவேண்டிய சேவைகளில் ஐ.நா. சபை மூலம் ஈடுபடுத்தி விடலாம்.

ராணுவத்தின் செலவும் ஆற்றலும் மக்கள் நல சேவைக்குத் திருப்பி விடப்பட்டால் 15 ஆண்டுக் காலத்திற்குள்ளாக உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் சமமான பொருளாதார வசதியோடும், அன்பு வளம் பெற்ற உள்ளங்களோடும் அமைதியாக வாழமுடியும்.

உலகெங்கும் ஊர் வாரியாக, நகர் வாரியாக, நாடுகள் வாரியாக இந்தத் திட்டத்தைப் பற்றிச் சிந்திக்கவும், எந்தப் பிரிவினருக்கும் இழப்பில்லாத வகையில் உலக அமைதி ஏற்படத் தக்கவாறு முடிவெடுத்துப் பின்பற்றலாம்.

இந்தப் பெருநோக்கச் சேவையாற்ற வாக்கு, பொருள், ஆற்றல் என்ற எவ்வகையாலும் உலகுக்குத் தொண்டு செய்ய வாருங்கள்; கூடுங்கள்; நலம் கண்டு மகிழுங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

No comments:

Post a Comment