Saturday, March 30, 2019

திருக்குறள் - களவு

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.

பொருள்: களவின் மூலம் உண்டாகிய செல்வம் நிறைய அளவு கடந்து ஆவது போலத் தோன்றிப், பின்னால் அழியும்.

இது பள்ளிகளில் நாம் படித்தது.

அதாவது தீய வழியில் சேர்த்த செல்வம் நிலைத்து நிற்காது என்பதாகப் பொருள் சொல்லப் பட்டது.

வள்ளுவராவது அவ்வளவு லேசா எழுதுவதாவது.

கொஞ்சம் குறளை மாற்றிப் போடுவோம்

களவினால் ஆகிய ஆகம் ஆவது போல் அளவிறந்து கெடும்

அஃதாவது, களவினால் ஆகிய ஆக்கம் முதலில் ஆவது போலத் தோன்றினாலும் பின் அளவு இன்றிக் கெடும்.

தீய வழியில் வந்த செல்வம் முதலில் பெரிதாக வளர்வது போலத் தோன்றினாலும், அது போகும் போது அந்த செல்வம் மட்டும் அல்ல போவது அதற்கு முன் சேர்த்து வைத்த செல்வத்தையும், நல்ல பெயரையும், புகழையும் சேர்த்து கொண்டு போய் விடும்

அது மட்டும் அல்ல, மீண்டும் செல்வம் வரும் வழியையும் அது அடைத்து  விடும்.

மேலும், பாவத்தையும் பழியையும் களவு செய்தவன் மேல் சுமத்தி விட்டு போகும்.

இந்தப் பிறவியில் வறுமையும், பழியும் சேர்க்கும்

மறு பிறவிக்கான வீடு பேறு அடைய முடியாமல் பாவத்தை சேர்த்து வைக்கும்.

அதனால், களவினால் ஆகிய ஆக்கம் அளவற்ற கெடுதலை செய்யும்.

இன்னொரு பொருள் என்ன வென்றால்.....

நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க நாள் பல ஆகும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் செல்வம் சேரும்.

ஆனால், களவின் மூலம் சேரும் செல்வம் மிக வேகமாக வளரும். குறுகிய காலத்தில் மிகுந்த செல்வம் சேரும், களவின் மூலம்.

களவினால் ஆகிய ஆகம் ஆவது போல் அளவிறந்து கெடும்

வள்ளுவர் சொல்கிறார், அது எந்த வேகத்தில் வந்ததோ (ஆவது போல்) அதை விட வேகமாகக் கெடும்.

எப்படி ஆகியதோ அதே போல் கெடும். சொல்லப் போனால், "ஆவது போல் கெடும்" என்று சொல்லி இருந்தால் எப்படி ஆனதோ அதே போல் கெடும் என்று அர்த்தம் கொள்ளலாம் .

வள்ளுவர் ஒரு படி மேலே போய் "ஆவது போல் அளவிறந்து கெடும்" என்கிறார்

இதை எல்லாம் சின்ன வயதில், பிள்ளைகளுக்கு சொல்லிக்  கொடுத்தால் அவர்கள் மனதில்  பசு மரத்து ஆணி போல் பதியும். அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள். நல்ல சமுதாயம் வரும்.

சரியாகச் சொல்லிக் கொடுக்காமல், பாடநூல்களை அரசியல்வாதிகள் கையில் கொடுத்து, பல தலைமுறைகளை இந்த மாதிரி உயர்ந்த கருத்துகள் சென்று அடைய விடாமல் தடுத்து விட்டோம்.

இப்படி ஒரு பொக்கிஷத்தை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது ?

அரு. லெட்சுமணன் கோவை / சென்னை

No comments:

Post a Comment