Thursday, August 9, 2018

அருட்தந்தையின் பயிற்சிபற்றி அன்றைய முதல்வர் திரு கருணாநிதி...

.............................
.அவர்கள்
.உடற்பயிற்சி, மூச்சு பயிற்சியால் நீண்ட ஆயுளோடு வாழலாம்:

உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சியால் நீண்ட ஆயுளோடு வாழலாம் என்று வேதாத்ரி மகரிசி தபால்தலை வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி
அவர்கள் கூறினார்.

தத்துவஞானி வேதாத்ரி மகரிசியின் நூற்றாண்டு மற்றும் சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தபால் தலையின் படத்தை திறந்து வைத்தும், விழா மலரை வெளியிட்டும் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுவாக, மகரிசியினுடைய விழா - மாமுனிவருடைய விழா - அருள்தந்தையினுடைய விழா - அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுகின்ற விழாவில்; அவர் எதற்காக பணியாற்றினார்? எதற்காக பாடுபட்டார்? எதற்காக தன்னுடைய அறிவு, ஆற்றல், உழைப்பு இவற்றையெல்லாம் செலவிட்டார் என்பதைப்பற்றி நான் சொல்லி நீங்கள் புதிதாக எதையும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.

முன்னிலை உரையாற்றிய மகாலிங்கம் குறிப்பிட்டதைப்போல, ராமலிங்க அடிகளாருடைய வழியொற்றி, தானும் வாழ்ந்து, மற்றவர்களும் வாழ வேண்டும் என்று விரும்பிய மாமுனிவர்தான் வேதாத்திரி மகரிசி அவர்களாவார்.

அவர்களுடைய அறிவாற்றலைப் போன்றும், மக்கள் பணியை மதித்து, அவர் வழியில் நடைபோடவும் எண்ணியுள்ள - எண்ணி நடந்து கொண்டிருக்கின்ற இந்த மாமன்றத்தின் சார்பில், இந்த இனிய விழாவை - எழுச்சி மிகுந்த விழாவை நடத்தியதற்காக நான் என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவருடைய நூற்றாண்டு விழா இது என்பதற்கு பதிலாக, நூற்றாண்டுகளில் பெரியவர்களை, தியாகிகளை, விடுதலை வீரர்களை, மொழிக் காவலர்களை, சான்றோர்களை, ஆன்றோர்களை நினைத்து, பூஜித்து, அவர்களைப் பாராட்டுவதன்மூலம், அந்தப் பாராட்டும், மதிப்பும், மரியாதையும், அவர்களைப் போய்ச் சேருவது மாத்திரமல்ல; அதுபோன்ற பாராட்டுகளைப் பெற வேண்டுமென்ற உணர்வையும், ஆர்வத்தையும், ஊக்கத்தையும் இளைய தலைமுறை பெற வேண்டும் என்ற அந்த எண்ணத்தோடுதான், இத்தகைய பாராட்டுகள் - அஞ்சல் தலை வெளியீடுகள் - உருவப் படத்திறப்பு விழாக்கள் - இவைகளெல்லாம் நடைபெறுகின்றன.

நான் இந்த மாமுனிவரைப் பற்றி உங்களுக்கு புதிதாக எதையும் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால், இவர் எப்படி இந்த அளவிற்கு உயர்ந்தார், சிறந்து விளங்குகிறார் என்பதற்கு நான் கண்டுபிடித்த உண்மை - பல முனிவர்கள், ரிசிகள், மகான்கள் - அடக்கமான பிறகு - அதாவது, அவர்கள் உயிர் துறந்து, அடக்கம் செய்யப்பட்ட பிறகு, மக்களால் போற்றப்படுவார்கள்.

ஆனால், இந்த மாமுனிவர் "அடக்கமாக" இருந்தே, மக்களிடத்திலே புகழ்பெற்றவர். பலருக்கு இவர் யார் என்ற விளம்பரங்கள் எல்லாம் இல்லாமலே, கோவை மாவட்டத்தைச் சார்ந்த அல்லது அந்த மாவட்டத்திற்கு அருகிலே உள்ள சில மாவட்டத்து மக்களால் மாத்திரம் அறியப்பட்டவர் என்று பூகோள ரீதியாகச் சொன்னாலும்கூட, அவர் வெளிநாடுகளிலே ஒளிவிட்டவர். அயல் நாடுகளில் அவருடைய ஆற்றலை உணர்ந்தவர்கள் பலருண்டு.

இந்த ஆற்றல் - "உனக்கு என்ன வேண்டும், கேள் - உடனே தருகிறேன்" என்று சொல்லி, அந்த நடிப்பின் மூலமாக தனக்கும், தெய்வத்திற்கும் தொடர்பு உண்டு என்பதைப்போல, காட்டிக்கொள்கின்றவர்களுடைய - அத்தகைய அபூர்வ வித்தைகளைக் கண்டு மக்கள் அவர்பால் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளவில்லை.

மக்கள் - சாதாரண, பாமர மக்கள் என்று இவர் உணர்ந்து - அவர்கள் பாமர மக்களாக இருக்கின்ற காரணத்தினால், இதற்கு பொருள் தெரியாத வேளையில், "நீ அறிவது இதுதான்; நீ அறிந்து கொண்டிருப்பது இதுதான்;" என்று அந்த பாமரத் தன்மையை உடைத்தெறிந்து விளக்குகின்ற - பகுத்தறிவு ஆயுதத்தை அவர் பெற்றிருந்த காரணத்தினாலேதான், இன்றைக்கு போற்றப்படுகிறார்.

அவருடைய எண்ணங்கள், கருத்துகள், உபதேசங்கள், அறிவுரைகள் அனைத்தும் பாராட்டப்படுகின்றன.

இன்றைக்கு சொல்கின்ற இந்த கருத்துகளை - சித்தர்கள் சொல்லியிருக்கின்றார்கள். "கடவுள் எங்கேயிருக்கிறார்" என்று கேட்டு, சச்சரவு செய்துகொள்கின்றவர்கள் "இல்லை" என்பவர்கள், "உண்டு" என்பவர்கள் - இருவருக்கும் இடையே நடைபெறுகின்ற போர்கள் - குழப்பங்கள்- இதற்கெல்லாம் விடிவு காணுகின்ற வகையிலேதான், சித்தர்களிலே சிறப்பு வாய்ந்த சித்தரான சிவ வாக்கியர் ஒன்றைச் சொன்னார்.

"நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே,
சுற்றி வந்து மொனமொனன்னு சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ?..."

என்று இதுவரையிலே அந்தப் பாட்டை நிறுத்திவிட்டால், "சிவ வாக்கியர் சரியான நாத்திகர்தான் போலும்" என்று எண்ணத்தோன்றும். ஆனால், அவர் அதோடு நிறுத்தாமல், கடைசி வரியிலே சொல்கிறார்; "நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்.." என்று குறிப்பிடுகிறார்.

அதாவது, கடவுள் நம்முடைய உள்ளத்திலே இருக்கிற நேரத்தில், அந்தக் கல்லா பேசப் போகிறது? என்று கடவுள் உள்ளத்திலே உறைந்திருக்கிறார் என்பதையும், "கடவுள் வேறு; மனிதன் வேறு அல்ல" என்பதையும், "மனிதன் அந்தக் கடவுளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்" என்பதையும், "கடவுள் பெயரைச் சொல்லி மனிதன் சமுதாயத்தை ஏமாற்றக் கூடாது" என்பதையும், "சமுதாயம்; கடவுள் பெயரால் கெட்டுவிடக் கூடாது" என்பதையும் எண்ணிய காரணத்தால்தான், நம்முடைய ராமலிங்க அடிகளாரானாலும், அவர் வழியில் நின்று வழிமொழிந்த வேதாத்திரி மகரிசியானாலும் - அத்தனை பேரும் அந்தக் கடமையை உணர்ந்து மக்களிடத்திலே பொய்யும், புளுகும், புராணக் கதைகளும், இவைகளெல்லாம் உருவாக்கியிருக்கின்ற சலனத்திலிருந்து அவர்களை மீட்டு, நல்வழிப்படுத்துகின்ற வகையிலே அறிவுரைகளை வழங்கியிருக்கின்றார்கள்.

அப்படிப்பட்ட அறிவுரைகளில் ஒன்றிரண்டைச் சொல்ல வேண்டுமேயானால், தனி மனிதனிடத்திலே ஒழுக்கம், கடமையுணர்வு, ஈகை, தேவை போன்ற உயர்ந்த நற்பண்புகளை - அதற்கு தேவையான கல்வியையும், முயற்சியையும் - வாழ்க்கை கல்வியாக நாம் பயில வேண்டும் என்ற அந்த கருத்தைத்தான் நம்முடைய மாமுனிவர் போன்றவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள்.

ஏதோ, முனிவர்கள், ரிசிகள் இவர்களெல்லாம் நம்மைவிட உயர்ந்தவர்கள் - நாம் அவர்களைப் போல இவைகளையெல்லாம் செய்ய முடியாது என்று விட்டுவிடக் கூடாது.

மிக அழகாக ஒரு கருத்து - மனிதருடைய ஆயுள் நீள்வதற்கு மகாலிங்கம் பேசியபோது அந்தக் கருத்தினைக் குறிப்பிட்டார். அது நூலிலே எழுதப்பட்டிருக்கிறது.

"மூச்சு விடும்போது, அதை நீண்ட மூச்சாக விடாமல், குறுகிய மூச்சாக விட்டு, நீண்ட காலம் வாழ்க" என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம்? நீண்ட மூச்சாக விடக்கூடாது என்றால், அப்படி மூச்சு விடும்போது, சுவாசப் பையிலே ஏற்படுகின்ற மாற்றம், அதற்கு ஏற்படுகின்ற ஓய்வின்மை, சுவாசப்பைக்கு ஏற்படுகின்ற தொந்தரவு - இவைகள் அதிகமானால், அது மனிதனுடைய ஆயுளுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கருதுவீர்களேயானால், "குறுகிய மூச்சு விடு" என்று சொல்கிறார். அந்த மூச்சு - அதுவே பயிற்சியாகப் பெற்று, இன்றைக்கு இவ்வளவு நேரத்திற்கு மூச்சு விடலாம்; நாளைய பயிற்சியில் இன்னும் கொஞ்சம் அதிகமாக மேலும் மூச்சை அடக்கி விடலாம்' என்று ஒவ்வொரு நாளும் அந்த மூச்சை அடக்கி, அடக்கி, எவ்வளவு தொலைவிற்கு மூச்சை விட்டால், நம்முடைய உடல் நலத்திற்கு ஏற்றதோ, அந்தளவிற்கு விடலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்த நூலிலே அதை நான் படித்துப் பார்த்தேன்.

இதை எனக்கும் என்னுடைய பயிற்சி ஆசிரியர் சொல்லிக் கொடுக்க வந்தார். எனக்கும் "தேசிகாச்சாரி" என்ற ஒரு குருநாதர் இருக்கிறார். அவர் மகரிசி அல்ல. ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று நூற்றுக்கணக்கான மாணவர்களைப் பெற்றவர். மிக எளிமையான குடும்பத்திலே வாழ்கின்ற ஒருவர்.

அவர் எனக்கு இந்தப் பயிற்சியைத் தொடங்கியபோது, முதலில், புரியாத பாஷையில் - எனக்கு புரியாத பாஷையில், சமஸ்கிருத பாஷையில், சில மந்திரங்களைச் சொன்னார். நான் அவை மந்திரம் என்று கருதிக்கொண்டேன். ஆனால், அவை உண்மையில் மந்திரமல்ல. அது, சூரியனுக்கு வணக்கம் செலுத்துதல். முதன்முதலாக சூரியனுக்கு வணக்கம் செலுத்திவிட்டுத்தான் இந்தப் பயிற்சியைத் தொடங்க வேண்டுமென்று சொன்னார். முதல் நாள் சொன்ன, அந்த வடமொழிச் சொற்கள் என் மனதிலே நுழைய மறுத்தன. காரணம், தமிழ், தமிழ் என்று அப்படியே பேசிப் பழகி, பழகி - அப்படிப்பட்ட ஒரு தடம் உருவாகிவிட்ட காரணத்தால், அங்கே வடமொழிச் சொற்கள் புரியவில்லை.

"நீங்கள் சொல்கின்ற இந்த வடமொழிச் சொல்லுக்கு, ஏன் தமிழிலே சொன்னால் என்ன?" என்று அவரை கேட்டேன். "இருந்தால் சொல்லுங்கள்" என்றார். நான் "இருக்கிறது" என்று சொன்னேன்.

சிலப்பதிகாரத்தில், சூரிய நமஸ்காரம் இருக்கிறது. "ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்" என்றும், "கதிரவனைப் போற்றுதும், கதிரவனைப் போற்றுதும்" என்றும், சிலப்பதிகாரத்திலேயே பாடல் இருக்கிறது.

எனவே, அதையே நான் சொல்லலாமா?" என்று கேட்டபோது, அவர் கொஞ்சமும் தயங்காமல், தாராளமாகச் சொல்லுங்கள்; "எங்களுக்கு வேண்டியது சிந்தனை ஒரேயிடத்திலே குவியவேண்டும்; அது அங்கிங்கு அலையக் கூடாது. ஒரு குறிப்பை ஒரு தாளிலே எழுதி வைத்துக் கொண்டு, அந்தக் குறிப்பை சுவற்றிலே ஒட்டி வைத்துவிட்டு, அதையே பார்த்துக் கொண்டு, உங்களுடைய கண்களை வேறு பக்கம் திருப்பாமல், அந்தக் கண்கள் எப்படித் திரும்பாமல் இருக்கிறதோ, அதே போலவே நினைவும் ஒரே நிலையாக இருந்து நீங்கள் அதைச் சொல்லலாம்" என்று சொன்னார்.

நான் "ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்" என்று சொன்னேன். நன்றாக இருக்கிறது என்று அவர் சொன்னார். அவருக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது. அதனால் இது தமிழ் என்று சொன்னேன்.

அதற்கு பிறகு இன்று வரையில், எனக்கு அந்தப் பயிற்சியின்போது, தொடக்கத்தில், "ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்" என்றுதான் தொடங்குகிறது. இது மொழியல்ல; மனம்தான் மொழியைவிட நம்முடைய மனம் ஓய்வு பெற்று, ஓரிடத்திலே ஒரே குறியாக இருந்து அது அலையாமல், நிலையாக இருந்தால் அந்த மனத்தினுடைய உறுதியும், நிலைத்த தன்மையும் நமக்கு வெற்றிகளைத் தரும் என்பதற்கு அடையாளமாகத்தான் அந்தப் பாடப் பயிற்சிகூட, அந்த மூச்சு பயிற்சி கூட நமக்குப் பயன்படுகிறது.

இதிலே நான் சொல்வதெல்லாம், இந்தப் பயிற்சியினுடைய அரிச்சுவடிதான் இதிலே ஆணித்தரமாக - இதிலே பெரிய பெரிய மகான்களாக - பெரிய பெரிய ஸ்காலர்களாக உள்ளவர்களெல்லாம் சேர்ந்து, அப்படிப்பட்டவர்கள் எல்லாம் இங்கேயிருக்கிறீர்கள் என்பதும், இங்கு நான் என்னுடைய அரிச்சுவடி பாடத்தைச் சொல்லிக் கொடுப்பதில் பயனில்லை என்பதும் எனக்கு தெரியும்.

இருந்தாலும், இது அரிச்சுவடி என்று அலட்சியப்படுத்தாமல், நம்முடைய பயிற்சியைத் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால், ஒவ்வொரு நாளும் இந்தப் பயிற்சியிலே நாம் ஈடுபட்டால், அது மெத்தப் பயனை விளைவிக்கிறது என்பதை என்னுடைய சொந்த விசயத்திலே நான் பார்த்து, அதிலே வெற்றி அடைந்திருக்கின்றேன்.

நீங்களும் நான் சொன்னவற்றை மனதிலே பதிய வைத்து, உடற்பயிற்சி, குறிப்பாக மூச்சுப் பயிற்சி, இவற்றிலே கவனம் செலுத்தி, நீண்ட ஆயுளோடு வாழ்ந்தால்தான் நம்முடைய நாட்டிற்குத் தொடர்ந்து நீண்ட காலம் பாடுபட முடியும், பாடுபட வேண்டும் என்பதை எடுத்துரைத்து, அதற்கு வேதாத்திரி மாமுனிவர் போன்றவர்கள், எடுத்துச் சொல்லியிருக்கின்ற கருத்துக்களையெல்லாம், நூல் வடிவிலே வழங்கியிருக்கின்றார்கள்.

இவற்றையெல்லாம் படித்துத் தேர்ந்து, பயன்பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment