Thursday, March 10, 2016

ஸ்ரீரங்கம் தல வரலாறு !!!

ஸ்ரீரங்கம் தல வரலாறு !!!

திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.

ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாட்டு.

பஞ்சரங்க தலங்கள்

கோவில் அமைவிடம்

ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீரங்கப்பட்டணம்
திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில் திருவரங்கம்
சாரங்கபாணி திருக்கோவில் கும்பகோணம்
திருஆப்பக்கூடத்தான் பெருமாள் திருக்கோவில் திருப்பேர்நகர் என்ற கோவிலடி (திருச்சி)
பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் மயிலாடுதுறை

கோயில் ஒழுகு

கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.

கோயில் அமைப்பு

இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.

திருச்சுற்றுகள்

இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.

மதில் சுற்றுகள் ஏழு உலகங்கள்
மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று பூலோகம்
திரிவிக்ரம சோழன் சுற்று புவர்லோகம்
அகளங்கனென்னும் கிளிச்சோழன் சுற்று ஸுவர்லோகம்
திருமங்கை மன்னன் சுற்று மஹர்லோகம்
குலசேகரன் சுற்று ஜநோலோகம்
ராஜ மஹெந்திர சோழன் சுற்று தபோலோகம்
தர்ம வர்ம சோழன் சுற்று ஸத்யலோகம்

நவ தீர்த்தம்

சந்திர புஷ்கரணி
வில்வ தீர்த்தம்
சம்பு தீர்த்தம்
பகுள தீர்த்தம்
பலாச தீர்த்தம்
அசுவ தீர்த்தம்
ஆம்ர தீர்த்தம்
கதம்ப தீர்த்தம்
புன்னாக தீர்த்தம்

தெற்கு ராஜகோபுரம்

கோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம், அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

ராஜகோபுரம் கட்டுமானம்
கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள்:

1.7 கோடி செங்கற்கள்
20,000 டன் மணல்
1,000 டன் கருங்கல்
12 ஆயிரம் டன் சிமெண்ட்
130 டன் இரும்பு கம்பிகள்
8,000 டன் வர்ண பூச்சு
ராஜகோபுரத்தின் மொத்த எடை ஒரு இலட்சத்து 28 ஆயிரம் டன்கள்

http://www.newstig.com/devotional/news/6425/Srirankam-Temple-History

2 comments:

  1. வரலாற்றுப்பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. நன்றி

    ReplyDelete
  2. வரலாற்றுப்பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. நன்றி

    ReplyDelete