Wednesday, March 16, 2016

வர்மக்கலை இளக்குமுறை ரகசியம்”

“வர்மக்கலை இளக்குமுறை ரகசியம்”

             வர்மத்தில் அடிப்பட்டவரை, ஆடைகளை தளர்த்தி காற்றாட வைப்பதுடன் – வர்மத்தைலத்தை உட்கொள்ளவும் – காது மூக்கில் நசியமும் செய்வதோடு, உடல் முற்றும் தைலம் தடவியும் – வர்மத் தானங்களான தசவாயு, அமுதம், ஏற்றிறக்கம் கொள்ளுமிடம், உறுப்பு, பொருத்தசைவு, விரல்கள் போன்ற இடங்களில் சூடு பெறத் தேய்த்து, தடவி அசைத்து, திருப்பி, வலித்து தூக்கி, உதறிவிட்டு, கால் கவளி அடங்களில் விரலால் சற்று அழுத்திப் பிடிக்க நோயாளியின் மயக்கம் (சன்னி) நீங்கி, சுய உணர்வு திரும்பும்.

            இங்கனமே, வர்ம அடிப்பட்டுக் கிடப்பவரை தூக்கியிருத்தி கால்களை நீட்டி, தொடைகளை நெருக்கி வைத்து, இடது கையை நெஞ்சுடன் சேர்த்துவைத்து இருத்திக்கொண்டு, வலது கையை பிடரியிலிருந்து கீழ் நோக்கி இறக்கி, பிட்டிவரை மும்முறை தடவி விட்டு – நடுமுதுகின் நாலுவிரல் மேலிருந்து நாங்கணாப் பொறுத்து என்ற மூலம் வரை, கால்முட்டியினால் மும்முறை தடவி இறக்கிக் கொள்ளவும். இப்படித் தடவுகையில் அடிப்பட்டவரது தோள்களைப் பற்றியிருப்பதுடன் – கால் பெருவிரலால் மூலத்தில் ஒரு தட்டும் (இருத்து) விட வேண்டும்.

           மேலும், வர்ம அடிப்பட்டவரது பின்புறம் நின்று, கைகளால் முதுகை மும்முறையும் தடவி இளக்கி, மார்பின் நேர் மறுபுறம் இரு பக்கமும் பெருவிரலால் ஒரு இருத்து (தட்டு) விட்டு, மேலும்முதுகை மும்முறை தடவி இளக்கிக்கொண்டு, பிட்டிக்குக்கீழ் இடது கையை வைத்து இருத்திக்கொண்டு ஒரு தட்டும், நடுக் குறுக்கில் ஒரு தட்டும் – மூலத்திற்கு மேல் பிட்டி பொருத்தில் ஒரு தட்டும் மெதுவாக கொடுத்து, பிடரி முதல் மூலம்வரை இறக்கித் தடவவும். பிறகு தொடையின் மேற்புறம் பிட்டி முதல் மூட்டுவரை கை பெருவிரலால் இருத்தி நாலைந்து தேய்ப்பு தேய்த்துவிட்டு, நடுத்தொடையின் பெருவிரலால் ஒரு இருத்திவிட்டு, உள்ளங்கை மேற்புறத்தினால் மேலேயிருந்து முட்டுவரை இருத்தி, இருமுறை தேய்த்து விடவும். இப்படி இரு தொடையிலும் செய்த பிறகு – மூட்டு முதல் கரண்டைவரை முழங்காலில் மும்முறை உருவிவிட்டு, படத்தைப் பிடித்து அசைத்து, உப்புக் குத்தியையும் – விரல்களையும் இழுத்துவிட்டு, உள்ளங்காலில் கையினால் படத்திற்கு மூன்று இறுத்துக் கொடுக்கவும். பிறகு உச்சியில் இருமுறை தட்டு, பிடரி முதல் மூலம் வரை தடவி, இடுப்பை அசைத்து குலுக்கியும், தோளைப்பிடித்து அசைத்து விடவும்.

        மேற்கூறிய பொது இளக்கு முறைகளினால் பெரும்பாலான வர்மப்பிடிப்புகள் நீங்கிவிடும்.
 
                                   நன்றி.

              வர்மக்கலை ஆசான்
          எஸ்.கோபாலகிருஷ்ணன்.
          தீத்திப்பாளையம், கோயம்புத்தூர்.
          +9894285755

No comments:

Post a Comment