மௌனம்
இந்த நிலைக்கு அடிப்படையான முதல் நிலை சுவாசத்தை கட்டுபடுத்துதல். சுவாசத்தைக் கட்டுப்படுத்துதல் என்றால் அதை ஒளிரச் செய்தல் தான் கட்டுப்படுத்துதல்.
1. சுவாசம்:
முதலில் சுவாசத்தை மௌன நிலைக்கு கொண்டு செல்வது. மூன்று சுவாசங்களை ஒரு சுவாசமாக்குவது. அப்பொழுது எண்ணங்கள் கட்டுப்படும்.
2. எண்ணம்:
எண்ணங்களில் மௌனம் என்றால் தேவையற்ற விஷயங்களை சிந்திக்காமல் இருத்தல், இது எண்ணங்களின் மௌனம்.
3. மனம்:
மனதின் மௌனம் இப்பொழுது மனமானது சுவாசத்தின் வழி செல்லாமல், எண்ணங்களை சிந்திக்காமல், உணர்வு என்று சொல்லப்பட்ட அக்னித்தன்மையை உணர்ந்திருப்பது தான் மனதின் மௌனமாகும்.
நம் உடலில் மூன்று அக்னி உள்ளது. அது மூன்றும் ஒன்றாக இணைந்து ஜோதியாகிறது. இது தான் மனதின் மௌனமாகும்.
இப்பொழுது உடலில் உள்ள புலன்கள்.....
4.கண்:
கண்ணின் மூலம் செய்யப்படும் அப்பியாசங்களால் கண் மௌன நிலை அடைகிறது. எப்படியென்றால் கண் இந்த உலக விஷயங்களை பார்க்கும்போது நல்லது, கெட்டதைப் பிரித்து பார்க்கிறது. பார்த்தவுடனே ஒரு விஷயத்தை நம்பாமல், தீர்க்கமாக ஆராய்ந்து முடிவெடுக்கும். தேவையற்ற விஷயங்களை பார்க்காமல் இருக்கும்.
5. வாய்:
வாய் என்றால் நாக்கினுடைய தன்மையாகும். நாக்குக்கு சில பயிற்சிகள் செய்யும் போது வாய் மௌனநிலை அடைகிறது. அப்போது தேவையற்ற விஷயங்களை பேசாமலும், தேவையற்ற உணவுகளை எடுக்காமலும், நல்ல விஷயங்களை பேசுதல் வாயின் மௌனமாகும்.
6. மூக்கு:
மூக்கு பயிற்சி செய்யும் போது, சுவாசக் கலைகள் ஒளித்தன்மை அடைகிறது. வாசனையான உணவு வகைகளுக்கும் அடிமையாகாமல் கட்டுப்படுத்தும்.
7. காது:
காது சில அப்பியாசங்கள் செய்யும் போது தேவையற்ற விஷயங்களை கேட்பதும், அதனால் மனம் மகிழ்வதும் இருக்காது. புகழ்ச்சி, பிறருடைய தீங்கு, அறிவுரை இவற்றையெல்லாம் கேட்டு மனம் இன்புறாது.
8. மெய்:
புலன்கள் வழியாக செய்யப்படும் அப்பியாசங்களும், ஆதாரங்கள் மூலமாக எட்டு அவஸ்தைகளில் இருந்து நீக்கி இறைத்தன்மையை உணர வைப்பது தான் உடலுக்கு மௌனம ஆகும். உடலில் செய்யப்படும் பயிற்சிகளால் ஜோதி உற்பத்தியாகி உடல் உறுப்புகளில் மௌனம் ஏற்படுகிறது. உடலில் மிருதுவான தன்மை ஏற்படுவதால் கடுமையான வேலைகளிலும், விஷயங்களிலும் ஈடுபடாமல் இருத்தல், பணம், செல்வாக்கு, புகழ்ச்சிக்கான வளர்ச்சிக்கு உடல் ஈடுபடாமல் இருத்தல்.
9. இருதயம்:
இருதயத்தின் துடிப்பை பயிற்சியின் மூலமாக, சாதாரண நிலையில் சீராகவும், பயிற்சி நிலையில் குறைந்தும் காணப்படும். ஏனென்றால் அது மௌன நிலை அடைகிறது. பயம், கவலை, சந்தோஷம் போன்ற நேரங்களிலும் அதன் துடிப்பு சீராக இருக்கும். இது மௌனத்தின் நிலையாகும்.
10. கல்லீரல், நுரையீரல் கணையம், மற்றும் பல உறுப்புகள்:
இவை அனைத்தும் கூட பயிற்சியின் மூலம் மௌனம் அடைகிறது. எப்படியென்றால் இந்த உறுப்புகள் ஒளிநிலையை அடைவதால் அதிலிருந்து வெளிப்படும் கழிவுகள் மற்றும் மற்ற விஷயங்களை குறைத்துக் கொள்ளும் நிலை ஏற்படும். இதனால் இவற்றின் வாழ்நாள் நீடிக்கும். இதுவே உடல் உறுப்புகளுக்கு மௌனமாகும்.
11. வயிறு:
சாதாரண நேரங்களைவிட, பயிற்சியின் போது பசியிருக்காது. இப்படி பழகி வரும்போது பயிற்சியினால் வயிற்றிலிருக்கும் அக்னித்தன்மை ஜோதியாக மாறும். அப்போது பயிற்சி நேரங்களில் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் பசி குறைவாக காணப்படும். இதுவே வயிற்றுக்கு மௌனமாகும்.
12. தோல்:
வெப்பம், குளிர்,தொடு உணர்ச்சி போன்ற விஷயங்கள் பயிற்சியின் மூலம் ஜோதியை தோல் பெறுவதன் மூலம் இவை நீங்குகிறது. இதுவே தோலின் மௌனமாகும்.
13. நாடி, நரம்புகள்:
நாடி நரம்புகள் மேன்மை அடைந்தும், சீராக இயங்கியும் காணப்படும். பயிற்சி காலங்களில் நாடி நரம்புகளின் இயக்கம் மௌனத்திற்கு உட்படுகிறது
நாடி நரம்புகளின பயிற்சியின் மூலம் தசநாடிகளும் ஒளிநிலை அடைந்து மௌனம் அடைகிறது. அப்போது இவற்றின் மூலம் இயங்கும் உடல் உறுப்புகள் அனைத்தும் மௌனம் அடைகிறது.
14. குறி, குதம்:
இவற்றின் இயக்கமும் உணவு எடுக்காததால் மௌனத்திற்கு உட்படுகிறது.
15. கை, கால்கள்:
உடல் உறுப்புகள் அனைத்தும் மௌனத்திற்கு உட்படுவதால் கை, கால்கள் தனக்கு தேவையான விஷயங்கள் மட்டுமே செய்யும். நடை, பேசும்போது, கையால் காட்டும் சைகை அனைத்திலும் மேன்மையான நிலை ஏற்படும். இவையே அவற்றிற்கு மௌனமாகும்.
16. மூளை;
உறுப்புகள் அனைத்தும் செயல்படச் செய்யும் மூளையும், அப்பியாசத்தின் மூலம் மௌன நிலையை அடைகிறது. உடல் உறுப்புக்கள் மௌனமாக இருப்பதால் மூளையும் மௌனம் அடைகிறது.
17. குணங்கள்:
நமக்கு மூன்று குணங்கள் இருக்கின்றது. அப்பியாசத்தின் மூலம், மூளை மௌனம் அடைந்ததும், இந்த முக்குணங்கள் நிர்குணமாகிறது.
இதுதான் குணத்தின் மௌன நிலையாகும்.
18. சூட்சம தேகம்:
உடல் உறுப்புக்கள் அனைத்தும் மௌனம் அடைவதன் மூலம், நம் வினைகளும் எரித்து சாம்பலாக்கபட்டு மௌனம் அடைகிறது. இதன்மூலம் நம் உடலிலுள்ள சூட்சமதேகம் வளர்ச்சி அடைகிறது . சூட்சம தேகமானது வெளியே செல்லாமல், உடலுக்குள்ளேயே இருந்து பேராற்றலை கிரகிக்கிறது. அப்படி பேராற்றலை கிரகித்து சூட்சம தேகத்தில் உள்ள புலன்களும் மௌனம் அடைகிறது. இதுவே சூட்சம தேகத்தின் மௌனமாகும்.
சூட்சம தேகம் மௌனம் அடைவதின் மூலம் பேராற்றல் நன்கு கிரகிக்கப்பட்டு ஆன்மா பரமாத்மாவை அடைகிறது. இதுவே உண்மையான மௌனமாகிறது.
No comments:
Post a Comment