Monday, March 21, 2016

ருத்ராட்ச முகங்களும் – சிறப்புகளும்  !

!!

சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்று சிவபெருமானின் முக்கண்கள். ஈசன் தவத்தில் இருந்தபோது அவன் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரே ருத்ராட்ச மரமாக தோன்றியது. சிப்பிக்குள் முத்தாக தோன்றும் மழைதுளியை போல, சிவபெருமானின் முத்து முத்தான கண்ணீரால் தோன்றியதே ருத்ராட்சம். ருத்ராட்சத்தை அணிபவர்கள் ருத்ரனின் அம்சம். ருத்ராட்சத்தை அணிந்தவர்களின் கண்களில் துன்ப கண்ணீர் வருவதில்லை. ஆபத்துகளில் இருந்து நம்மை தடுத்து காப்பதால் இறைவனை நினைத்து நம் கண்களில் வருவது ஆனந்த கண்ணீர்தான். துன்பம் தூர ஒடி விடும். ருத்ராட்சத்தை அணிந்து ருத்ர அம்சமாக இருப்பவர்களின் அருகில் எந்த தீய சக்தியும் நெருங்காது. சூரியனை கண்டு இருள் விலகுவதை போல, ருத்ராட்சத்தை கண்டு துஷ்ட சக்திகள் விலகுகிறது.

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? என்று சிலருக்கு சந்தேகம் இருக்கும். தாராளமாக பெண்கள் ருத்ராட்சத்தை அணியலாம் என்கிறது புராணம். ஆனால் சில நாட்களில் மட்டும் பெண்கள் ருத்ராட்சம் அணிவதை தவிர்க்க வேண்டும். ருத்ராட்சம் அணிந்தால் மேன்மை ஏற்படும். எந்தெந்த முக ருத்ராட்சம் அணிந்தால் என்ன பலன்? என்பதை பார்க்கலாம்.

ருத்ராட்சத்தின் முகத்தை எப்படி கண்டுபிடிப்பது?

சாத்துக்குடி உரித்தால் அதன் மேல் உள்ள கோடுகளைக் கொண்டு அதில் எத்தனை சுளை இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது போல, ருத்ராட்சத்தின் மேலே உள்ள கோடுகளைக் கொண்டு அந்த ருத்ராட்சம் எத்தனை முகம் கொண்டது என அறியலாம்.ருத்ராட்ச

ஒரு முக ருத்ராட்சம்

சிவபெருமானின் முகம். பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும். சூரியனின ஆசி கிடைக்கும். அரசாங்கத்தில் உயர்ந்த அந்தஸ்து அமையும்.

இரண்டு முக ருத்ராட்சம்

தேவதேவி ஸ்வரூபம். இது பாவங்களை அத்தனையும் அடியோடு போக்கும். தேவியின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். இரண்டு என்பது சந்திரனுக்குரிய எண்ணாக இருப்பதால், அறிவு திறன், மதிநுட்பம் மேம்படுத்தும். முகம் பொலிவு பெறும். அம்பிகையின் அருள் நிச்சயம்

மூன்று முக ருத்ராட்சம்

அக்னி ஸ்வரூபம். தோஷங்களையும், பாவங்களையும் நெருங்கவிடாமல் அதை எரித்துவிடும் ஆற்றல் கொண்டது. மூன்றாம் எண் குருபகவானின் எண் என்பதால் சுபநிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடைபெற வழி பிறக்கும். கல்வி சிறப்பு தரும். வித்தைகள் கைக்கூடும்.

நான்குமுக ருத்ராட்சம்

பிரம்மதேவனின் வடிவம். வேதங்கள், புராணங்கள் கற்ற புண்ணிய பலன்களை இரட்டிப்பாக்கும். இது இராகு பகவானின எண் என்பதால், நல்ல செல்வ வளத்தையும், ஜாதகத்தில் இராகு பகவானின் தோஷம் இருந்தாலும் தீரும். நாகதேவதைகளின் அருள் கிடைக்கும்.

ஜந்து முக ருத்ராட்சம்

சிவபெருமானின் அம்சமாகவே கருதப்படுகிறது. இதற்கு பெயர் காலக்னி. உணவால் ஏற்படும் தோஷத்தை போக்கும். அத்துடன் ஐந்தாம் எண் புதனின் எண்ணாக இருப்பதால், தடைபடும் கல்வி தொடரும். நல்ல ஞானத்தை பெறுவார்கள். கலைதுறையில் முன்னேற வழி பிறக்கும். பலரின் உதவிகள் கிடைக்கும். செயல்கள் வெற்றி அடையும்

ஆறுமுக ருத்ராட்சம்

முருகப்பெருமானின் அம்சம். முருகப்பெருமானின் ஆசியை பெறுவார்கள். விரோதிகள் வீழ்வார்கள். எதிலும் வெற்றி கிட்டும். சொந்த வீடு – மனை வாங்குகிற சிறப்பை தரும். ஆறாம் எண் சுக்கிரனை குறிப்பதால் எதிர்பாரத அதிர்ஷ்டத்தை தரும். ஸ்ரீமகாலஷ்மி யோகம் அமையும்..

ஏழுமுக ருத்ராட்சம்

மன்மத ஸ்வரூபம். தெரிந்தோ தெரியாமல் செய்த முன் ஜென்ம பாவத்தை போக்கும். பாவங்கள் நீங்கினாலே யோகங்கள் தேடி வரும்தானே. இது கேது எண்ணாக இருப்பதால் உடல் பிணி நீங்கும். கல்விதடை அகலும். ஞானம் பிறக்கும்

எட்டு முக ருத்ராட்சம்

விநாயகபெருமானின் சொரூபம். சனிஸ்வரால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றி பெற வழி கிடைக்கும். விநாயகர் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும். எட்டாம் எண் சனி பகவானின் எண்ணாக இருப்பதால், எட்டு முக ருத்ராட்சத்தை அணிந்தவர்களுக்கு தொல்லை தந்தால், தொல்லை தந்தவர்களை சனி பிடிக்கும். எட்டு முக ருத்ராட்சம் அணிந்தவர்ளுக்கு சனிஸ்வர பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். ஆனால் நியாய – தர்மபடி நடக்க வேண்டும்.

ஒன்பது முக ருத்ராட்சம்

பைரவ வடிவம். நூறு பிரம்மஹந்தி தோஷத்தை போக்கும் ஆற்றல் கொண்டது. சிவபெருமானின வாகனம் என்பதால் சிவபெருமானின் ஆசியும், முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும். செவ்வாய் பகவானுக்குரிய எண்ணாக இருப்பதால், தைரியம் ஏற்படும். பணவரவு பெருகும். இன்னல் இல்லாத வாழ்க்கை அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தோஷங்கள் பாவங்கள் தீரும். போலீஸ் – இராணுவத்தில் உயர் பதவி கிடைக்கும்.

பத்து முக ருத்ராட்சம்

விஷ்ணு சொரூபமாக அமைகிறது. இதனால் ஜாதக தோஷங்கள் நீங்கும். தோல் வியாதி தீரும். கண்திருஷ்டி – செய்வினை பாதிப்புகள் நீங்கும். பத்தாம் எண் சூரியனை குறிப்பதால், அரசாங்க பணிகள் கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகள் சாதகமாக இருக்கும். கண் நோய் குணமாகும்.

பதினோரு முக ருத்ராட்சம்

ஏகாதச ருத்திர வடிவம். ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்தால் என்ன பலனோ, அந்த பலனை கொடுக்கும். கோடி பசு தானம் செய்த புண்ணியமும் கிட்டும். இந்த பதினோரு எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாக இருப்பதால் அறிவு தெளிவு பெறும். இதை தலையில் சிறிது நேரம் வைத்திருந்தால், புத்தி நன்றாக வேலை செய்யும்.

பன்னிரண்டு முக ருத்ராட்சம்

துவாதச ஆதித்த ஸ்வரூபம். இது பயத்தை போக்கி மன தைரியத்தை கொடுக்கும். புண்ணிய பலனை அள்ளி தரும். பன்னிரெண்டாம் எண் குரு பகவானின் ஆதிக்கம் கொண்டதால், ஆற்றலும், செல்வ வளமும் தந்திடும். திருமண தடை விலகும்.

பதின்மூன்று முக ருத்ராட்சம்

முருகப்பெருமானை பூஜித்தால் என்ன பலனோ அந்த பலனை எளிதாக கொடுக்கும். பெற்றொருக்கு அறியாமல் செய்த பாவத்தை போக்கும். பெற்றொர் மேல் அன்பு ஏற்படும். பதிமூன்றாம் எண் இராகுபகவானை குறிப்பதால் திடீர் யோகத்தையும் ஏற்படுத்தும்

பதினான்கு முக ருத்ராட்சம்

சிவபெருமானாகவே கருதப்படுவார்கள். அதிர்ஷ்டம் தேடி வரும். செல்வந்தர்களாக திகழ்வார்கள். இன்னும் பல நல்ல பலன்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு சுபிக்ஷத்தை தரும் ஆற்றல் கொண்டது. இதில் ஒன்று முக ருத்ராட்சமும், பதினான்கு முக ருத்திராட்சமும் கிடைப்பது அரிது

ருத்ராட்சத்தை எப்படி அணிய வேண்டும்?

ருத்ராட்சத்தை சிகப்பு கயிற்றில் கட்டி கழுத்தில் அணியலாம். அல்லது தங்க சங்கிலியிலும் – வெள்ளி சங்கிலியிலும் கழுத்தில் அணியலாம். ஆனால் கறுப்பு கயிற்றில் கட்டக் கூடாது

ருத்ராட்சத்தின் மேல் பக்க முகம் பிரம்மா. கீழ்ப்புறம் விஷ்ணு. நடுப்பகுதி ருத்திரன் என்கிறது சாஸ்திரம். அதனால் ருத்ராட்சம் அணிந்தால் முப்பெரும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும்.

ருத்ராட்சத்தை நன்றாக கவனித்து தரம் உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும். முள் இல்லாதவையாக இருக்க வேண்டும். பூச்சி அரித்தவையாக இருக்கக் கூடாது. பிளவும் இருக்கக் கூடாது

முதன் முறையாக ருத்ராட்சம் அணிபவர்கள், சிவபெருமானின் பாதத்தில் வைத்து ஆசி பெற்று அணிந்தால் நன்மை.

ருத்ராட்சம் அணிந்து பூஜை செய்தால் இன்னும் கைமேல் பலன் கிடைக்கும்.

நெல்லிகாய் அளவு கொண்ட ருத்ராட்சம் மிகவும் உயர்ந்த பலனை தரும்.

இலந்தை பழ அளவு ருத்ராட்சம் மத்திமம்.

கடலை அளவுள்ள ருத்ராட்சம் அதமம்.

ருத்ராட்சத்தால் சிவலிங்கத்தை அலங்கரித்தால், அவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிட்டும். பித்ருதோஷம் நீங்கும். தலைமுறை தலைமுறைக்கு இன்னல் இல்லா வாழ்க்கை அமையும்.

சிவன் தந்த ருத்ராட்ச்தை அணிபவர்கள் ருத்ர சொரூபமாகவே மாறி விடுகிறார்கள். வேலனுக்கு வேலாயுதம் போல, எந்த ஆபத்தான சமயத்திலும் நம்மை காக்கும்.
-நிரஞ்சனா

No comments:

Post a Comment