Saturday, March 19, 2016

பாயசம், சர்க்கரைப் பொங்கல்

டிப்ஸ்..டிப்ஸ்...

பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றைப் பரிமாறுவதற்கு முன், ஒரு வாழைப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி பதார்த்தத்தில் சேர்த்துப் பரிமாறினால். சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

அரிசி வைத்துள்ள பாத்திரம் அல்லது டப்பாவினுள் சிறிது கல் உப்பு, கிராம்பைப் போட்டு மூடி வைத்தால்... வண்டு வராமலும், மட்கிய வாசனை வராமலும் இருக்கும்.

உங்கள் வீட்டு பிரஷர் குக்கரில் வெயிட் பொருத்தியதும், மூடியின் கீழிருந்து தண்ணீரோ... ஆவியோ வெளியேறுகிறதா? உடனே உஷாராகி அதைக் கவனிக்க வேண்டும். வெயிட்டை மெதுவாகத் தூக்கிவிட்டு, சத்தம் வருகிறதா என்று பாருங்கள். இல்லையெனில், வெயிட் மற்றும் மூடியைக் கழற்றிவிட்டு மீண்டும் மூடி, வெயிட்டைப் போடுங்கள். பிரச்னை தீர்ந்துவிடும். அப்படியும் சரியாகவில்லையெனில் 'கேஸ்கெட்'டைதான் மாற்ற வேண்டும்.

தினமும் சமைக்கும் முன், ஃப்ரிட்ஜில் உள்ள எல்லா காய்களையும் வெளியே எடுத்து வையுங்கள். தேவையானதை எடுத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை மேஜையின்மீது உலர வைத்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஃபிரிட்ஜில் எடுத்து வையுங்கள். இதனால், காய்கள் அழுகாமல், நாள்பட இருக்கும்.

குலோப் ஜாமூன் பொரித்த எண்ணெயிலேயே, கத்தரிக்கோலால் சீராக நறுக்கிய பிரெட் துண்டுகளையும் பொரியுங்கள். குலோப்ஜாமுன் பறிமாறும் கிண்ணங்களில் இந்த பிரெட் துண்டுகளைப் போட்டு, அதன்மேல் ஜாமூன்களை வைத்துக் கொடுத்தால், ஜீராவின் இனிப்போடு மிகவும் ருசியாக இருக்கும். ஜீராவும் வீணாகாது.

இட்லிக்கு மாவு, தேவையான அளவுக்கு இல்லையா? கவலையை விடுங்கள்... ரவா இட்லி கைகொடுக்கும். வீட்டிலிருக்கும் இட்லி மாவு அளவுக்கு, ரவையை எடுத்து சில நிமிடங்கள் வறுத்து, இட்லி மாவில் சேருங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரித் துண்டுகளைப் போட்டு தாளித்து மாவுடன் சேருங்கள். கூடவே உப்பு, தண்ணீர் (அ) மோர் சேர்த்துக் கலக்கி, இட்லியாக வார்க்கலாம்.

தோசை மாவு அரைக்கும்போது, தோல் நீக்கிய மூன்று உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, மாவுடன் சேர்த்து அரைத்து தோசை வாருங்கள். ரொம்ப டேஸ்டாக இருக்கும். உருளைக்கிழங்கை தனியாக அரைத்து மாவுடன் கலந்தும் சேர்க்கலாம்.

இட்லி மாவில் சிறிது சோள மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைக்கவும். காலிஃப்ளவர் துண்டுகளை கரைத்த மாவில் முக்கி எடுத்து, எண்ணெயில் பொரித்தால், நொடியில் கோபி மஞ்சூரியன் ரெடி.

கேஸ் அடுப்பில் குடிக்க அல்லது குளிக்க வெந்நீர் வைக்கும்போது, தண்ணீர் பானையில் ஒரு டம்ளர் அல்லது கிண்ணத்தைப் போட்டுக் கொதிக்க வைத்தால் வேகமாக சூடாவதுடன், பொங்கி வழிந்து அடுப்பு அணைந்து போகாமலும் இருக்கும்.

வெங்காய பக்கோடா செய்யப் போகிறீர்களா...  மாவில் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து விடாதீர்கள். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றுடன் உப்பு சேர்த்துப் பிசிறி, ஐந்து நிமிடங்கள் அப்படியே வையுங்கள். அதிலேயே நீர்ப்பசை அதிகரித்திருக்கும். இப்போது கடலை மாவு கலந்து பிசையுங்கள் (தேவைப்பட்டால் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசையலாம்). இப்போது பக்கோடா பொரித்தால்... நீண்ட நேரம் நமத்துப் போகாமல் கரகரப்பாக இருக்கும்.

பழைய சி.டி-கள் உபயோகமில்லாமல் இருந்தால், அவற்றின் மீது வளையல்களை ஒன்றன் மேல் ஒன்றாக ஃபெவிக்கால் கொண்டு ஒட்டி, பேனா ஸ்டாண்டுகளாகவோ, ஸ்பூன் ஸ்டாண்டுகளாகவோ உபயோகிக்கலாம். வாயகன்ற பி.வி.சி. பைப்பை சி.டி. மேல் ஒட்டியும் இப்படி ஸ்டாண்ட் தயாரிக்கலாம். பைப் மீது ஃபேப்ரிக் பெயின்ட் கொண்டு டிசைன் வரைந்தால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பூ, முகத்துக்கு உபயோகப்படுத்தும் க்ரீம், பல் துலக்கும் பேஸ்ட், ஷேவிங் க்ரீம் போன்றவற்றை, ஒவ்வொரு முறையும் உபயோகித்தபின் அந்த டியூபை நன்கு மூடி, தலைகீழாக வைக்கவும். அடுத்த முறை திறக்கும்போது சட்டென்று பசை வெளியே வரும். கடைசி சொட்டு வரை வீணாகாமல் உபயோகிக்கவும் முடியும்.

பருப்பு வடை, பூர்ண கொழுக்கட்டை, குலோப்ஜாமுன், கட்லெட், பிடிகொழுக்கட்டை போன்றவற்றைத் தயாரிக்கும்போது... முதலிலேயே எல்லா மாவையும் உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் ரெடியாக வைத்துக் கொண்டால், கைகளில் ஒட்டிக் கொள்ளாமல், டக்டக்கென்று செய்து முடிக்கலாம்.

குழந்தைகள் சற்றே வித்தியாசமான மொறுமொறு ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அடை மாவை தோசைக்கல்லின் மீது சிறுசிறு வட்டங்களாக ஊற்றி, ஒவ்வொன்றின் மீதும் கொஞ்சம் கார்ன் ஃப்ளேக்ஸைப் போட்டு, தோசைத் திருப்பியால் அழுத்தி விடுங்கள். எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேகவிட்டால்... மொறுமொறு ஸ்நாக்ஸ் ரெடி. தக்காளி சாஸ¨டன் பரிமாறினால் குழந்தைகள் ஒரு பிடிபிடிப்பார்கள்.

மின்வெட்டு சமயத்தில், இன்வெர்ட்டர் /ஜெனரேட்டர் இல்லாத வீடுகளில் வியர்வை மழைதான். இதிலிருந்து ஓரளவு தப்பிக்க ஒரு வழி... நீங்கள் அதிகம் புழங்கும் அறையில், மின்வெட்டு தொடங்குவதற்கு அரை மணி முன்பாக பேன் அல்லது ஏ.சி-யை ஓட விடுங்கள். மின்வெட்டு துவங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக டவல் போன்ற சில துணிகளை நனைத்து, ஹேங்கரில் போட்டு ஜன்னல் கம்பிகளில் தொங்க விடுங்கள். மின்சாரம் நின்றபிறகும் ஜிலுஜிலுவென்றே இருக்கும்.

தேங்காய் சாதம், புளி சாதம் செய்வதுபோல... இஞ்சி சாதம் செய்யலாம். தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை, பச்சை மிளகாயுடன் சிறிது எண்ணெயில் வதக்கி, உப்புடன் மிக்ஸியில் அரைத்து, தாளித்த சாதத்துடன் கலந்துவிட்டால், அஜீரணக் கோளாறுகளை நீக்கும் சுவையான இஞ்சி சாதம் தயார்!

திருமணம், பண்டிகை நாட்களில் இனிப்பு வகைகள் நிறைய மீந்து விடும். அவற்றுடன் கோதுமை மாவைக் கலந்து இனிப்புச் சப்பாத்தியாக இட்டுக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மீந்துவிட்ட பாயசத்திலும் கோதுமை மாவைச் சேர்த்து சப்பாத்தி தயாரிக்கலாம் (தேவைப்பட்டால், பாயசத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம்).

உப்புமா, வெண்பொங்கல் போன்றவை சமைத்த கொஞ்ச நேரத்திலேயே கெட்டியாகி, பரிமாறும்போது படுத்தி எடுக்கும். அரைக்கரண்டி சூடான பாலை அதில் ஊற்றிக் கிளறிவிட்டால்... நன்கு இளகிவிடும். சுவையும் மாறாது. கெட்டியாகிவிடும் கேசரிக்கும் இதே வைத்தியம் கைகொடுக்கும்!

வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கும் மூக்குக் கண்ணாடிக் கூடுகளின் மீது கார்ட்டூன் ஸ்டிக்கர்களை ஒட்டி, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பென்சில் பெட்டியாகக் கொடுக்கலாம்.

நினைத்ததும் சப்பாத்தி தயாரிக்க ஒரு ஐடியா... கடைகளில் விற்கும் பிளாஸ்டிக் ஷீட்டை வாங்கி, சதுரம் சதுரமாக வெட்டி ஒரு ஓரத்தில் ஸ்டேப்ளர் போட்டோ... அல்லது தைத்தோ புத்தகம் போல தயாரித்துக் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும்போது சப்பாத்தியைத் தேய்த்து, பக்கத்துக்கு ஒன்றாக பிளாஸ்டி ஷீட் புத்தகத்தில் அடுக்கி, ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது, சில நிமிடங்களுக்கு முன்பாக வெளியே எடுத்து மளமளவென்று சப்பாத்தியை சுட்டு எடுத்துவிடலாம். அடுத்த முறை பயன்படுத்தும் முன்பாக, பிளாஸ்டிக் ஷீட் பக்கங்களைத் துடைத்துவிட்டால் போதும்.

மாத்திரைகள் அடங்கிய அட்டைகளின் மீது, அவற்றின் விலை மற்றும் காலாவதியாகும் நாள் முதலியன அச்சிடப்பட்டிருக்கும். உபயோகிக்கத் தொடங்கும்போது இந்த விவரங்கள் கிழிந்துவிடாமல், பார்த்துக் கொள்வது நல்லது. அப்போதுதான், அடுத்த முறை மருத்துவர் பரிந்துரை செய்யும்போது, ஏற்கெனவே வாங்கிய மாத்திரைகள் கைவசம் இருந்தால் பயமில்லாமல் அவற்றையே உபயோகிக்கலாம்.

அவசரமாக பிரெட் டோஸ்ட் செய்யும்போது, ஃப்ரிட்ஜிலிருக்கும் கட்டி வெண்ணெய் கைகொடுக்காது. கேரட் துருவியால் வெண்ணெயைத் துருவினால்... வேலை சுலபமாக முடிந்துவிடும். துருவும்போதே அதை பிரெட் மீது பரவலாக விழச் செய்து, உடனே டோஸ்ட் செய்து, ஜாம் தடவி சாப்பிடலாம்.

பூண்டில் ஒரு பல் கெட்டுப் போனாலும், ஒவ்வொன்றாக எல்லாமே அழுக ஆரம்பிக்கும். எனவே, பூண்டு வாங்கியதும், அவற்றை உதிர்த்து காற்றாட சேமித்து வைத்தால், வெகு நாட்கள் வரை கெடாது.

முள்ளங்கி வாங்கும்போது மேலே இலைகளுடன் வாங்குங்கள். அந்த இலைகளைப் பொடியாக நறுக்கி, ஒன்றிரண்டு நிமிடங்கள் எண்ணெயில் வதக்கி தயிர்ப்பச்சடி செய்தால் மிகவும்  ருசியாக இருக்கும். சப்பாதிக்கு நல்ல சைட் டிஷ்.

வீட்டின் சுவரில் உலக வரைபடம், உள்நாட்டு வரைபடம், உள்ளூர் வரைபடம் என்று மாட்டி வையுங்கள். குழந்தைகளின் பாடங்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் விரும்பிப் பார்க்கும் கிரிக்கெட் டென்னிஸ், ஒலிம்பிக் போன்ற விளையாட்டுக்கள் நடைபெறும் இடங்கள், உறவினர்கள் வசிக்கும் நாடுகள், ஊர்கள், உலக நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் என்று எல்லாவற்றையும் உடனுக்குடன் பார்க்க வைத்தால், பொது அறிவை வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு வசதியாக இருக்கும்.

அலுவலக ஆவணங்கள், வருமானவரி, வீட்டுவரி போன்றவற்றுக்கான ரசீதுகள், பொருட்களின் வாரன்ட்டி / கியாரன்ட்டி கார்டுகள் என முக்கியமான காகிதங்களை, பெரிய சைஸ் ஜிப் லாக் பைகளில் தனித்தனியாக போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அவையெல்லாம் கிழியாமல், கசங்காமல், பூச்சி அரிக்காமல், கறைபடாமல் இருக்கும் என்பதோடு, தேவைப்பட்டபோது எளிதாக வெளியே எடுப்பதற்கும் உதவியாக இருக்கும்.

வீட்டிலுள்ள குப்பைத்தொட்டி பழசாகிவிட்டதா? கவலை வேண்டாம். பரிசுப் பொருட்களைச் சுற்றிக் கொடுக்கும் வண்ண கிஃப்ட் பேப்பர்களை மேலே ஓட்டி விட்டால், குப்பைத் தொட்டிக்கும் அழகு வந்துவிடும்.

No comments:

Post a Comment