வார்த்தைகளின் வலிமை!
உலகம் விசித்திரமானதோ இல்லையோ... ஆனால் இந்த உடலானது மிகவும் விநோதமானது. உடலில் பல பாகங்கள் இருக்கின்றன என்பதும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இயங்குகின்றன என்பதும் நாம் அறிந்ததுதான்! ஆனால் உடல் எனும் மிகப்பெரிய மாளிகையின் சாவி எது தெரியுமா? மனம்தான்!
ஆமாம்... உடலின் அத்தனைத் தேவைகளையும் மனம்தான் நமக்குச் சொல்கிறது. நம் மனமானது, யோசிப்பதிலும் செயல்படுவதிலும் சுறுசுறுப்பாக இருந்தால், உடலுக்கு ஓய்வு என்பதே அவசியமாக இருக்காது. அதேநேரம் மிகுந்த குழப்பங்களும் அதீத பயமும் கொண்டு மனமானது பதைபதைத்திருந்தால், சட்டென்று மனதின் அயர்ச்சி, உடலின் அயர்ச்சியாக மாறிவிடும்.
''ச்சே... ச்சே... ஆபீஸ்ல பத்துநாளா செம வேலை. குடும்பத்துலயும் சின்னச் சின்னதா சில பிரச்னைகள். தவிர, பசங்களோட படிப்புலயும் அவங்களோட வயசு வளர்ச்சியிலயும் தனிக்கவனம் செலுத்த வேண்டியிருக்கு. சொந்த ஊர்ல பூர்வீக நிலத்துல உள்ள பிரச்னைக்காக கிராமத்துக்கு வேற போகணும். என்ன பண்ணப் போறேன்னே தெரியலை'' என்று அலுப்பும் சலிப்புமாகப் பேசுகிறவர்களைக் கவனித்திருக்கிறீர்களா?
இவர்களைப் போல பல அன்பர்கள், என்னிடம் வந்து பரபரவென தங்கள் பக்கமுள்ள பிரச்னைகளை தடதடவெனச் சொல்வார்கள்.
''வாழ்க்கைல ஆபீஸ்லயும் குடும்பத்துலயுமா சின்னச் சின்னச் சிக்கல்கள் வரும்போது, அப்படியே தலைமுடியைப் பிய்ச்சுக்கலாமான்னு இருக்கும். மண்டையே வெடிச்சுடுற மாதிரி ஒரு வேதனை, வலி, அழுத்தம் இருக்கும். நெஞ்சுக்கூட்டுல படபடப்பு அதிகமாயிரும். முகத்துல வாட்டமாவும் மனசுல குழப்பமாவும் இருக்கும். எந்த வேலையும் செய்யத் தோணாது. பேசாம, சுருண்டு படுத்துக்கலாம்னு தோணும். உடம்பெல்லாம் அடிச்சுப் போட்டது போல தளர்ந்து போயிரும்'' என்று மிகப்பெரிய பட்டியலே போடுகிற அன்பர்கள் இருக்கிறார்கள்.
உடல் சுறுசுறுப்புடன் இருந்தால் மனம் மலர்ச்சியுடன் இருக்கும் என்றும் சொல்லமுடியாது. ஆனால் மனமானது மந்தகாசமாக மலர்ந்திருந்தால், உடலும் மனதுக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ளும்; மலர்ச்சியாக இருக்கும். கிட்டத்தட்ட, மனதின் பிம்பமாகவே உடல் மாறியிருக்கும்.
மனதை அமைதிப்படுத்தி, குழப்பங்களில் இருந்து விடுவித்து, மெள்ள தூக்கம் போலும் தவத்துக்கு வருவதற்கு உடலும் ஒத்துழைக்கத் துவங்கிவிடும். மல்லாந்து படுத்துக் கொண்டு, கைகளையும் கால்களையும் தளர்ச்சியாக வைத்துக் கொண்டு, கண்கள் மூடி மனதைக் கூர்ந்து கவனிக்க முதலில் பழகவேண்டும். 'ம்... அப்படியே ஆகட்டும்' என்பது போல, மனம் தன் பாஷையில் சொல்லும். அதைக் கவனித்த பிறகு மொத்த உடலும் மனதின் சொல்லுக்குக் கட்டுப்படும். தலையில் துவங்கி பாதம் வரைக்குமாக, மெல்லியதான ஒரு அமைதி பரவி, ஒருவித நிதானத்தைக் கொடுத்திருக்கும். இந்த நிதானத்தைப் பழகிவிட்டால், தியானம் நட்பாகி விடும்.
தியான நிலைக்கு வருவதைக் கைகொள்வதில்தான் நம் வெற்றிக்கான சூத்திரம் இருக்கிறது.
முதலில் விரிப்பு ஒன்றில், மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள். கால்களை லேசாக விரித்தபடி வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல கைகளையும் உடலுக்குத் தள்ளியபடி வைத்திருங்கள். கைகளில் எந்த முத்திரையும் காட்ட வேண்டிய அவசியமில்லை. கண்களை மூடிக் கொண்டு, உள்ளங்கால்களில் இருந்து நம் சிந்தனையை மெள்ள ஓடவிடுவோம்.
வார்த்தையாக இல்லாமல், நாக்கு அசைத்துச் சொல்லாமல், ஒரு மந்திரம் போல, இந்த வார்த்தைகளை மனசுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.
'என் பாதங்களைத் தளர்த்திக் கொள்கிறேன். பாதங்களில், ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிர் ஓட்டம் ஆகியவை சீராக நடைபெறுகின்றன. என் பாதங்கள், போதுமான அளவு பலமும் வலிமையும் பெறுகின்றன. பாதங்கள், ஓய்வு பெறட்டும்... பாதங்கள் ஓய்வு பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஓய்வு... ஓய்வு... ஓய்வு...'' என்று மெல்லிய குரலில், மனதின் அடி ஆழத்தில் இருந்து, நாக்கு அசைக்காமல், ஓசை வராமல், உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள்.
அடுத்த நிமிடம்... 'கால்கள் (கெண்டைக் கால்) இரண்டையும் இப்போது தளர்த்திக் கொள்கிறேன்' என்று சொல்லுங்கள். சொல்லும் போதே உடலின் அந்தப் பகுதியைக் கூர்ந்து மனதால் கவனியுங்கள். மனமானது கால்களைக் கூர்ந்து கவனிக்க... அங்கே நம் கைகளால் கால்களைப் பிடித்துவிட்டால் கிடைக்கிற நிறைவையும் நிம்மதியையும் விட கூடுதலான சுகத்தை, வலிகளில் இருந்து விடுதலையை உணர்வீர்கள்.
மந்திரத்தை சாதாரண வார்த்தைகளைப் போல உச்சரித்தால் அந்த மந்திரத்துக்கு உரிய பலமும் பலனும் நமக்குக் கிடைக்காது. அதுவே, சாதாரண சொற்களை, மந்திரத்துக்கு இணையாக சரியாக உச்சரித்தால்... மந்திரம் தருகிற பலனை, பலத்தை, அந்தச் சாதாரண சொற்களே நமக்குத் தந்துவிடும்.
இதையடுத்து, முழங்கால்களைப் பாருங்கள். கூர்ந்து கவனியுங்கள். கண்கள் மூடியிருந்தாலும் கைகளால் தொடாது போனாலும் முழங்கால்களின் வடிவத்தையும் அதில் ஏதேனும் வலிகளோ வேதனைகளோ இருப்பின் அவற்றையும் நம்மால் உணரமுடியும். 'என் முழங்கால்கள் இரண்டையும் இப்போது தளர்த்திக் கொள்கிறேன்' என்று சொல்லுங்கள்.
மனித வாழ்க்கையில், வார்த்தைகளுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. நல்ல சொற்களைப் பேசுவதும் கேட்பதும் மிக உன்னதமான சுகத்தை, சுபிட்சத்தை நமக்குத் தரும் என்பது சத்தியம். கூடுமானவரைக்கும், அமங்கலமான சொற்களைச் சொல்லக்கூடாது என்று முன்னோர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
அந்த அமங்கலச் சொற்களைச் சொல்லும்போதே, அந்த இடத்தின் நல்ல அதிர்வுகள் காணாமல் போய்விடும். சூட்சும ரூபமாக இருக்கிற அமங்கல வார்த்தைகளின் ஆதிக்கம், அங்கே மெள்ள மெள்ள குடிகொள்ளும். ஒருகட்டத்தில், நம்மிடம் இருந்தோ நம் வீட்டாரிடம் இருந்தோ வருகிற அமங்கலச் சொற்கள் அதிகரிக்க அதிகரிக்க... அந்த வீட்டில் ஒருபோதும் மங்கல காரியங்கள் நிகழாது போகும். அங்கே... எத்தனை புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டாலும் செல்லுபடியாகாது.
'இந்த ஜென்மம் எடுத்ததே வேஸ்ட். பிறந்ததில் இருந்தே பிரச்னை, பிரச்னை, பிரச்னைதான்! பாழாப் போன இந்த ஜென்மத்தை எடுக்காமலேயே இருந்திருக்கலாம். என்ன இழவு வாழ்க்கைங்க இது!' என்று ஒரு சலிப்புடன், ஒரு வேதனையில் வார்த்தைகளாகச் சொல்லிப் புலம்புவோம். ஒரு கட்டத்தில், இப்படிப் புலம்புவதில் சுகம் காணத் துவங்கி, நெகட்டிவ் எனப்படும் எதிர்மறை வார்த்தைகளையே சதாசர்வகாலமும் சொல்லிக் கொண்டே இருப்போம். அந்த எதிர்மறைச் சொற்களுக்கு இருக்கிற வலிமையை நாம் அறிவதே இல்லை.
அதேநேரம், பாஸிட்டிவ் என்கிற நேர்மறைச் சிந்தனைகளுக்கு இருக்கிற சக்தி, கணக்கில் அடங்காதது. கிட்டத்தட்ட நூறு யானை பலம் கொண்டது. அமாவாசை நாளில் வானில் சுடர் வரும் என்று நம்பிக்கையாகச் சொல்லி, அந்த நம்பிக்கைக்காக, அந்த பக்திக்காக, அந்த உண்மைக்காக... வானில் சுடர் வந்த கதை நாம் அறிந்ததுதானே?!
நேர்மறை வார்த்தைகளைச் சொல்லப் பழகுங்கள், அன்பர்களே!
No comments:
Post a Comment