Tuesday, March 15, 2016

ஈசனை ஏன் லிங்கமாக வழிபடவேண்டும்

ஈசனை ஏன் லிங்கமாக வழிபடவேண்டும் ?

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது.

மகேசுவ மூர்த்தங்கள் என்று இருபத்து ஐந்து வடிவங்களும், உருவத்திருமேனிகள் என்று அறுபத்து நான்கு வடிவங்களும் குறிப்பிடப்படுகின்றன. சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதைவிட லிங்க வழிபாடு செய்வதே சிறந்தது என வியாசர் மகாபாரதத்தில் கூறி இருக்கிறார்.

பெயர் வர காரணம் ? ஏன் லிங்க வடிவம்?

லிங்கம்=லிங்+கம்
லிங்=லியதே=எல்லாப் பொருளும் அங்கு லயிப்பது, ஒன்றுபடுவது!
கம்=கமயதே=எல்லாப் பொருளும் அங்கிருந்தே எழுவது!
இப்படி ஒடுங்கி-எழுவது தான் சிவலிங்க சொரூபம்!

நடுகல்லுக்கு அக்காலப் பெயர் 'ஆலங்கம்' என்பது. சிவலிங்கம் நடுகல்லைப் போன்ற தோற்றம் கொண்டுள்ளதால், ஆலங்கம் என்று அழைக்கப்பட்டு,(சிவம் + ஆலங்கம்) -> சிவாலங்கம். இது மருவித்தான் 'சிவலிங்கம்' என்ற மாற்று கருத்தும் உண்டு.

வடிவற்ற நிலையிலிருந்த சக்தி ஒரு வடிவெடுக்கும்போது, அது முதலில் பெறுவது லிங்க வடிவம்தான். அதீத சக்தியைப் பூட்டிவைக்க மிக உன்னதமான வடிவம் லிங்கம்தான்.

உருவமே இல்லாத, குறியீடே இல்லாத, ஏதோ ஒரு சக்தி நிலை = அருவம்!
உருவமும் உண்டு, அருவமும் உண்டு! (அ) உருவமும் இல்லை, அருவமும் இல்லை.
அது தான் = அருவுருவம்!

சிவலிங்கம் என்பது அருவுருவம்!

இறைவன் உருவமாய் இருக்கலாம்! ஆனால் உருவம் மட்டுமே இறைவன் இல்லை!
இறைவன் அருவமாய் இருக்கலாம்! ஆனால் அருவம் மட்டுமே இறைவன் இல்லை!

இதை நாம் உணர்ந்து கொள்ளத்தான் உருவமும் இல்லாத, அருவமும் இல்லாத....அருவுருவம்.

`லிங்கம்' என்னும் சொல்லுக்கு எல்லாம் தோன்றி மறையும் மூலம் எனவும் `மங்கலத்தைத் தரும் பரம்பொருள்' எனவும், `அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும் மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மை கொண்டது' என்றும் சிவாகமங்கள் விளக்குகின்றன.

ஆலயங்களில் ஸ்தாபித்த லிங்கம் அசலம், இல்லங்களில் வைத்துப் பூஜிக்கும் லிங்கம் சலம்.

ஈசன் கருணைப் பெருக்கால் தோன்றியது சுயம்புலிங்கம்.
சிவ வடிவங்கள் மொத்தம் 64 ஆகும். அவை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என மூன்று வகைக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
போக வடிவம் என்பது உமாமகேஸ்வரர், சந்திரசேகரர், ரிஷபாரூடர் முதலானவற்றை குறிக்கும்.

தேவர்கள் சிவலிங்க வழிபாடு செய்வதற்காகவே விசுவ கர்மாவிடம் பற்பல சாந்தித்யங்களோடு கூடிய சிவலிங்கங்களைப் பெற்றனர். அவை :

1. இந்திரன் ..... பத்மராக லிங்கம்
2. குபேரன் ..... ஸ்வர்ண லிங்கம்
3. எமதர்மன் ..... கோமேதக லிங்கம்
4. வருணன் ..... நீல லிங்கம்
5. விஷ்ணு ..... இந்திர நீல லிங்கம்
6. பிரம்மன் ..... ஸ்வர்ண லிங்கம்
7. அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் ..... வெள்ளி லிங்கம்
8. வாயுதேவன்..... பித்தளை லிங்கம்
9. அசுவினி தேவர்கள் ..... மண் லிங்கம்
10. மகா லட்சுமி ..... ஸ்படிக லிங்கம்
11. சோம ராஜன் ..... முத்து லிங்கம்
12. சாதுர்யர்கள் ..... வஜ்ஜிர லிங்கம்
13. பிராம்மணர்கள் ..... மண் லிங்கம்
14. மயன் ..... சந்தன லிங்கம்
15. அனந்தன் முதலான நாகராஜர்கள் .... பவள லிங்கம்
16. தைத்தியர்கள், அரக்கர்கள் ..... பசுஞ்சாண லிங்கம்
17. பைசாசங்கள் ..... இரும்பு லிங்கம்
18. பார்வதி .... வெண்ணெய் லிங்கம்
19. நிருதி ..... தேவதாரு மர லிங்கம்
20. யோகிகள் ..... விபூதி லிங்கம்
21. சாயா தேவி ..... மாவு லிங்கம்
22. சரஸ்வதி ..... ரத்தின லிங்கம்
23. யட்சர்கள் ..... தயிர் லிங்கம்
24.எமதர்மன் - கோமேதக லிங்கம்
25.சந்திரன் - முத்து லிங்கம்
26.நாகர்கள் - பவள லிங்கம்
27.ருத்திரர்கள் - திருவெண்ணீற்று லிங்கம்

சிவலிங்க தத்துவம்

லிங்கம் வானத்தைக்குறிக்கும்.
ஆவிடை பூமியைக்குறிக்கும் குறிக்கும்.
விண்ணுக்கும் மண்ணுக்குமாகா சிவபெருமான் எழுந்தருளியதை இது குறிக்கின்றது.

இதில் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது.

ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும்,
நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.

ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்த பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும்.

ஆவுடையார் என்று அழைக்கப்பெறும் பாகமானது சக்தி பாகம் ஆகும்.

• ருத்ர பாகம்
• விஷ்ணு பாகம்
• பிரம்ம பாகம்
• சக்தி பாகம்

சிவனின் ஐந்து முகங்கள் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம். தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து லிங்கங்களை தோற்றுவித்தார்.  இவை பஞ்ச லிங்கங்கள் எனவும் அறியப்படுகின்றன.

1. சிவ சதாக்கியம்
2. அமூர்த்தி சதாக்கியம்
3. மூர்த்தி சதாக்கியம்
4. கர்த்திரு சதாக்கியம்
5. கன்ம சதாக்கியம்

இவற்றில் கன்ம சதாக்கியமாகிய பீடமும், லிங்கங்க வடிவமும் இணைந்து வழிபட்டோரால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவையாவன,

1. சுயம்பு லிங்கம் - தானாய் தோன்றிய லிங்கம்.
2. தேவி லிங்கம் - தேவி சக்தியால் வழிபடபட்ட லிங்கம்.
3. காண லிங்கம் - சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட லிங்கம்.
4. தைவிக லிங்கம் - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட லிங்கம்.
5. ஆரிட லிங்கம் - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.
6. இராட்சத லிங்கம் - இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
7. அசுர லிங்கம் - அசுரர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
8. மானுட லிங்கம் - மனிதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.

இவை தவிர பரார்த்த லிங்கம். சூக்கும லிங்கம்,ஆன்மார்தத லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், ஆகாச லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம் என எண்ணற்ற லிங்கங்கள் உள்ளன.

இஷ்ட லிங்கம்

மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு
தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.

ஷணிக லிங்கம்

நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம்எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

1. புற்றுமண் லிங்கம் ..... மோட்சம் தரும்
2. ஆற்றுமண் லிங்கம் ..... பூமிலாபம் தரும்
3. பச்சரிசி லிங்கம் ..... பொன், பொருள் தரும்
4. அன்ன லிங்கம் ..... அன்ன விருத்தி தரும்
5. பசுவின் சாண லிங்கம் ..... நோய்கள் தீரும்
6.வெண்ணெய் லிங்கம் ..... மன மகிழ்ச்சி தரும்
7. ருத்ராட்ச லிங்கம் ..... அகண்ட அறிவைத் தரும்
8. விபூதி லிங்கம் ..... அனைத்து செல்வமும் தரும்
9. சந்தன லிங்கம் ..... அனைத்து இன்பமும் தரும்
10. மலர் லிங்கம் ..... ஆயுளை அதிகமாக்கும்
11. தர்ப்பைப்புல் லிங்கம் ..... பிறவியிலா நிலை தரும்
12. சர்க்கரை லிங்கம் ..... விரும்பிய இன்பம் தரும்
13. மாவு லிங்கம் ..... உடல் வன்மை தரும்
14. பழ லிங்கம் ..... சுகத்தைத் தரும்
15. தயிர் லிங்கம் ..... நல்ல குணத்தைத் தரும்
16. தண்ணீர் லிங்கம் ..... எல்லா மேன்மைகளும் தரும்

சைவ ஆகம சாஸ்திரங்களில் லிங்க வழிபாடு மிகவும் முக்கியமானது. முப்பத்திரண்டு வகையான புனிதமான பொருட்களால் லிங்கங்கள் செய்யப்படுகின்றன. அவை செய்யப்படும் பொருளுக்கேற்ப அருள் வழங்கும் தன்மையவை என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஆனால் இந்த முப்பத்திரண்டு வகையிலும் சேராமல் சுயம்புவாக அதாவது இயற்கையாக கிடைக்கக்கூடியதுதான் ஸ்படிக லிங்கம்.

ஆதிசங்கரர் கைலாய மலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் சிவபெருமான் அவருக்குக் காட்சி அளித்து, ஐந்து ஸ்படிக லிங்கங்களை அளித்து அவற்றை பூஜிக்கும் முறை பற்றியும் விளக்கமாக கூறியருளினார்.

அவை முக்தி லிங்கம், வர லிங்கம், மோட்ச லிங்கம், போக லிங்கம், யோகலிங்கம் எனப் பெயர் கொண்டவை. அந்தப் பஞ்ச லிங்கங்களை ஆதிசங்கரர் ஐந்து தலங்களில் பிரதிஷ்டை செய்தார்.

முக்தி லிங்கம் - கேதார்நாத், வரலிங்கம் - நீலகண்ட ஷேத்திரம் (நேபாள்),
மோட்ச லிங்கம்-சிதம்பரம், போகலிங்கம் -சிருங்கேரி,
யோகலிங்கம் - காஞ்சி.
சிதம்பரம்  ஸ்படிக லிங்கம் சந்திர மவுலீஸ்வரராக வழிபடப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் இருக்கிறது.
முன்னால் இருந்த ஸ்படிக லிங்கத்தில் கீறல்கள் விழுந்ததால் அதற்குப் பதிலாக, இமயமலையிலிருந்து 6 இன்ச் உயர லிங்கம் எடுத்து வரப்பட்டு 2011-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது
ராமேஸ்வரம் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. இது விபீஷணனால் இங்கே கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்கள்.
இவை தவிர திருவெண்காடு எனப்படும் ஸ்வேதாரண்யத்திலும், காலஹாஸ்தி,நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலிலும் ஸ்படிக லிங்கம் வழிபடப்படுகிறது. இக்கோயில்கள் தவிர வேறு சில இடங்களிலும் ஸ்படிக லிங்கங்கள் உள்ளன.

மிகப்பெரிய லிங்கம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் ஆகும். இது 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது.

No comments:

Post a Comment