Monday, June 6, 2016

குழந்தை மருத்துவம் - குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல்...!!!

               ஒவ்வொரு தாய்மார்களும் கருவில் குழந்தையை எப்படி பாதுகாத்தனரோ அதுபோல் வளர்ப்பதிலும் பாதுகாப்பான நடவடிக்கை அவசியத் தேவையாகும்.  ஏனெனில் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும், ஒருதாய் சரியாக அறிந்து வைத்திருந்தால்தான் ஒரு குழந்தையை அவள் ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க முடியும்.

பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் வர மலச்சிக்கலும் ஒரு காரணம். 

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அடிக்கடி உண்டாகிறது.  அதுவும் மத்திய தர குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அதிகம் உண்டாவதாக குழந்தைகள் நல ஆய்வு தெரிவிக்கிறது.  யூனிசெப் (Unicef) நிறுவனம் வளரும் நாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு 62 சதவீதம் மலச்சிக்கல்தான் காரணம் எனக் கூறுகிறது.  மேலும் உணவு முறையே இதற்கு முக்கிய காரணம் எனவும் கூறுகிறது.

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது என்பதை அறிவது கடினமான செயலாகும்.  ஏனெனில் குழந்தைகளுக்கு மலம் கட்டிப்படுவதும், வயிற்றுப்போக்கு உண்டாவதும் சகஜம்தான். 

குழந்தை ஏதாவது வேண்டாத பொருளை  விழுங்கிவிட்டாலும், விரல் சூப்பும் போது அல்லது கைகளை வாயில் வைக்கும்போது கிருமிகள் உட்சென்று மேற்கண்ட வற்றை ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் அதிகபட்சம் ஒரு வயது வரைதான் படுக்கையிலேயே சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதுண்டு.  அதன் பின்  தாய் காலையில் குழந்தை எழுந்தவுடன் பால் கொடுத்து தரையில் அமர்ந்து தன் கால்களை நீட்டி குழந்தையின் கால்களை தன் கால்களின்மேல் அகட்டி உட்காரவைத்து மலம் கழிக்கச் செய்வதுண்டு.

இதனால் நாளடைவில் குழந்தை காலை எழுந்தவுடன் பால் அருந்தி பின் மலம் கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளும்.

இன்றைய காலகட்டத்தில் டயபர் துணி வகைகள் வந்துவிட்டதால் அவை அணிவித்தவுடன் மலம், சிறுநீர் கழிப்பது முறையாக இல்லாமல் போய்விடுகிறது.  இதனால் குழந்தை சில சூழ்நிலைகளில் மலத்தை அடக்குவதால்  மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் உணவுமுறை மாற்றத்தாலும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் உண்டாகிறது.

குழந்தைகளுக்கு எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளைக் கொடுக்க வேண்டும்.   கொதிக்கவைத்து ஆறவைத்த வெந்நீர் அதிகம் அருந்தச் செய்ய வேண்டும்.  உணவில் மாற்றமோ, உணவு கொடுக்கும் முறையில் மாற்றமோ உண்டானால், அது குழந்தைக்கு மலச்சிக்கலை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அவசியம் தேவையாகும்.  இது குறைந்தால் குழந்தைக்கு மலச்சிக்கல் உண்டாகும். எனவே நார்ச்சத்து மிகுந்த நீர்ச்சத்து நிறைந்த கீரை வகைகள், பழங்கள், காய்ககளை நன்றாக வேகவைத்து கொடுக்க வேண்டும்.  அதுபோல் நீராவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்றவை எளிதில் ஜீரணமாகி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

உணவை அவசர அவசரமாக கொடுக்காமல் நிதானமாக அமைதியாக ஊட்டவேண்டும். 

குழந்தைகள் உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்கும். எனவே, உணவை நன்றாக மசித்துக் கொடுக்க வேண்டும்.  இதனால் உணவு எளிதில் சீரணமாகும். 

அதுபோல் அதிகளவு சாக்லேட், மற்றும் நொறுக்குத் தீனிகளை அடிக்கடி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.  இவை உணவை செரிமானமாகாமல்  தடுத்து மலச்சிக்கலை உண்டாக்கும். 

சில சமயங்களில் குழந்தைக்கு சளி, இருமலுக்கு மருந்துகொடுத்தால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.  இச்சமயங்களில் நல்ல நார்ச்சத்து மிகுந்த உணவுகளைக் கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.

அதுபோல் குழந்தைகளுக்கு 2 வயதுக்கு மேல் அருந்தக் கொடுக்கும் பாலில் அதிகம் நீர் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் பொதுவாக உணவை சில நிமிடங்கள் வரை வாயிலேயே வைத்துக்கொண்டு விளையாடும்.  பின்தான் அதனை விழுங்கும்.  இதனால் உணவை அதிகமாக குழந்தை வாயில் வைக்கக்கூடாது.  வாயில் உள்ள உணவை விழுங்கிய பிறகே உணவை வாயில் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மனதில் பயம் இருந்தால் கூட மலச்சிக்கல் உருவாகும்.  எனவே, பயத்தை வருவிக்கும் தொலைக்காட்சி மற்றும் தேவையற்ற வெளிக்காட்சிகள் என குழந்தைகளை பார்க்கச் செய்யக்கூடாது.

No comments:

Post a Comment