Friday, June 17, 2016

வித்தியாசமாகச் சிந்தித்தவர்களே வெற்றிகளைக் குவித்திருக்கிறார்கள்.!!

!

மனம் எப்போதும் பழகியதை இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறது. வழக்கமாய்ச் சிந்திப்பது வசதியாய் இருக்கிறது. புதிய பிரச்னைகளுக்கும், பழைய சவால்களைச் சந்தித்தது போன்றே தீர்வு காண நினைக்கிறது உள்ளம். 
அறிவு என்பதும், மொழி என்பதும் பல நேரங்களில் வசதியாக இருந்தாலும், சில நேரங்களில் நம்மை வழுக்க வைத்துவிடுகின்றன. அப்போது சமயோசித புத்தி என்கிற ஊன்றுகோல் அவசியம்.
வித்தியாசமாகச் சிந்தித்தவர்களே வெற்றிகளைக் குவித்திருக் கிறார்கள். கற்றவற்றை மட்டுமே உபயோகிக்கத் தெரிந்தவர்களுக்கு தலைமைப் பொறுப்பைத் தருவது, உவர் நிலத்தில் விதை விதைப்பதைப் போன்று பயனற்றது.
நேர்க்கோட்டுச் சிந்தனையை முன்மொழிந்தது, மேற்கு. பக்கவாட்டுச் சிந்தனையைப் பகிர்ந்தளித்தது, கிழக்கு. தர்க்கம் என்பது ஒரு கோணத்தில் சிந்திப்பதால் உருவாவது. சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில் மூவரும் நேர்க்கோட்டுச் சிந்தனையே சிறந்தது என்று நூறு சதவிகிதம் நம்பினார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இரண்டும் இரண்டும் எப்போதும் நான்குதான்.  விவாதிப்பதாலும், பிரித்தறிவதாலும், செங்குத்தான சிந்தனையாலும் அத்தனைக் கேள்விகளுக்கும் விடை கண்டுவிட முடியும் என்பதில் அவர்கள் உறுதியாய் இருந்தார்கள். 
அண்மையில், மேற்கு விழித்துக்கொண்டது. தர்க்கத்துக்கு அகப் படாதவை நிறைய இருக்கின்றன என்பதை அது உணர்ந்து கொண்டது.

தர்க்கமே பெரிதென்று ஒருபோதும் இந்தியச் சிந்தனை மரபு நினைக்கவில்லை. தன்னை எதிர்கொண்டவர்களைத் தர்க்கத்தால் வென்றாலும், வாழ்வியல் உண்மை தர்க்கத்தைத் தாண்டியது என்று சாக்ரடீஸுக்கு முன்பே முன்வைத்தவர் புத்தர். அறிவால் அடுத்தவர் வலியை ஒருபோதும் உணர முடியாது என்பதில் அவருடைய அன்பு மார்க்கம் உருவானது. அதனால்தான் 'கடவுள் இருக்கிறாரா?' என்கிற ஒரே கேள்விக்கு, கேட்பவர்களைப் பொறுத்து வெவ்வேறு விதமாக அவர் விடையளித்தார். விடை வினாவில் இல்லை, விடுப்பவர்களிடமே இருக்கிறது என்பதை அறிந்தவர் அவர். அதனாலேயே விழிப்பு உணர்வு பெற்றவராக அவர் கருதப்படுகிறார். 
இந்திய இதிகாசங்கள் எத்தனையோ சவால்களுக்குச் சாதுர்யமாக விடை கண்டுபிடிக்கும் வழியை உணர்த்தியிருக்கின்றன. அவற்றை வாசிக்கும்போது, உருவகக் கதை முதல் நகைச்சுவை கதை வரை நீண்டு... செங்குத்தாகச் செல்வதால் மட்டும் விடை கிடைக்காது; வளைய வேண்டிய இடத்தில் வளைவதும், குனிய வேண்டிய இடத்தில் பதுங்குவதும், சவாலில் நீள அகலங்களைத் தாண்டி உள்ளுணர்வைச் செலுத்துவதும் அவசியம் எனக் கிழக்கத்திய மரபு உணர்த்துவதை அறிந்துகொள்ள முடியும். 
கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி...
அனுமன் சீதை இருக்கும் இடம் அறிந்துவர, கடல் தாவும் படலம். தனியரு நபராகப் புறப்பட்டுச் செல்லும் அனுமனின் வலிமையை அறிவதற்குத் தேவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு சுரசை என்பவளின் உதவியை நாடுகிறார்கள். சுரசை, அகன்று திறந்த வாயோடு அரக்கியின் உருவம் தரித்தாள். அனுமனை விழுங்க வழிமறித்து நின்றாள். வானத்தைத் தலை முட்டும்படி விசுவரூபம் எடுத்து நின்றாள். 
அனுமனோ, 'ராமனின் செயல் முடித்து வருவேன். அப்போது என்னை விழுங்கிக் கொள்!' என்று விண்ணப்பிக்கிறார்.  அவள் மறுக்கிறாள். உடனே அனுமன், 'சரி, உன் கோரமான பெரிய வாயின் வழியே புகுந்து செல்கிறேன். வல்லமை இருந்தால் என்னை விழுங்கு!' என்கிறார்.
சுரசை, அண்டங்கள் பல புகுந்தாலும் நிரம்பாத அளவுக்குத் தன் வாயை அகலத் திறந்தாள். அனுமனோ, எல்லாத் திசைகளிலும் பரவிய அவள் வாய் கடுகளவே எனும்படி, வானளாவ வளர்ந்து நின்றார். அதற்கேற்ப சுரசை, மேலும் தன் வாயை அகலப்படுத்தினாள். அடுத்த நொடியே, மிகச் சிறிய வண்டின் உருவம் எடுத்து, சுரசை எதிர்பார்க்காத நேரத்தில் அவள் வாயினுள் புகுந்து, அவள் சுவாசிக்கும் முன்னர் காதின் வழியே வெளிவந்தார். தேவர்கள் அசந்துபோனார்கள். 'இந்த அனுமன் எங்களைக் காப்பான்' எனப் பூமாரி பொழிந்தார்கள்.
நீண்டான் உடனே சுருங்கா நிமிர்வாள் எயிற்றின்
ஊண்தான் என உற்று ஓர்உயிர்ப்பு உயிராத முன்னா
மீண்டான் அதுகண்டனர் விண்உறைவோர்கள் எம்மை
ஆண்டான்வலன் என்று அலர் தூஉய்நெடிது ஆசி சொன்னார்
அனுமனின் இந்தப் பக்கவாட்டுச் சிந்தனை, பக்காவான சிந்தனை.
நம் முன்னோர், மரபுவழியில் மட்டும் சிந்தித்தல் பயன் தராது என்பதைக் கதைகள் வழியாகவும், கணக்குகள் வழியாகவும், கவிதைகள் வழியாகவும் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
ஆன்மிக இலக்கியங்கள் பக்தி செலுத்த மட்டுமல்ல; புத்தி மேம்படவும் தான் என்பது, அவற்றை வாசிக்கும்போது உன்னிப்பாய் உற்றுநோக்கினால் புலப்படும். 
புதிய முறையில் சிந்திப்பதை, நவீன சிந்தனையாளர்கள் 'பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்' என்று வரையறுத்தார்கள். 1970-களில் மேலாண்மை நிபுணர்கள், பயிற்சியாளர்களை ஒன்பது புள்ளிகள் கொடுத்து, அவற்றைக் கையெடுக்காமல் நான்கே கோடுகளில் இணைக்கும்படி சவால்விட்டார்கள். இதை, ஜான் அடேர் என்பவர் அறிமுகப்படுத்தியதாகக் குறிப்பிடுவார்கள். 

இந்த ஒன்பது புள்ளிகளுக்குள்ளேயே அதை இணைக்க முயல்பவர்கள் முடியாமல் தடுமாறு வார்கள். புள்ளிக்கு வெளியே செல்லும்போது தான் இதற்கான விடையை அறிய முடியும். 
நம் மனம் சதுரத்துக்கும், செவ்வகத்துக்கும் பழக்கப்பட்டது.  எனவே, அந்தப் பாதையிலேயே விடை கண்டுபிடிக்கப் பிரயத்தனப்படும்.  அதைத் தாண்டுகிறபோதுதான் இது சாத்தியம்! 
ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம், ''11 ஆப்பிள்களை 12 சிறுவர்களுக்கு எப்படிச் சரிசமமாகப் பிரித்துக் கொடுப்பீர்கள்?'' என்று கேட்டார். உடனே, மாணவர்கள் நோட்டுப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு, 11-ஐ 12-ஆல் வகுத்து விடை காண முயன்றார்கள். திணறினார்கள். அவர்களைப் பார்த்து, ''ஏன் அத்தனைச் சிரமப்படுகிறீர்கள்? 11 ஆப்பிள்களையும் பழரசமாக்கினால் 12 சமமான குவளைகளில் ஊற்றிப் பகிர்ந்து தரலாமே?'' என்று கேட்டுச் சிரித்தார் ஆசிரியர்.
'பெட்டிக்கு வெளியே சிந்திப்பது' என்பது இதுதான்! 
ஆப்பிள்களைப் பிரிப்பது என்றால், அவற்றின் வடிவத்திலேயே பிரித்துத் தரவேண்டும் என்று நினைக்கிறோம். அதைப் பழக்கூழாக உருவகப்படுத்திப் பார்க்க நமக்குத் தோன்றவில்லை. அதனால்தான் இந்தத் தொல்லை நமக்கு ஏற்படுகிறது.
இது, ஆப்பிள்களைப் பிரிப்பதில் மட்டுமல்ல; ஒரு நிறுவனத்தின் லாபத்தைப் பகிர்ந்து தருவதிலும் சிக்கலை உண்டாக்குகிறது.  நாட்டுக்கான ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டுவதிலும் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், நாம் மூலாதாரங்களை அப்படியே விநியோகிக்கும் வழிமுறைகளில் கவனத்தைச் செலுத்துகிறோமே தவிர, யாருக்கு என்ன தேவை என்பதை வசதியாக மறந்துபோகிறோம். 
சுஃபி மரபில் ஒரு கதை உண்டு.
ஒரு பெரியவர் வசம் 17 ஒட்டகங்கள் இருந்தன. 'பாதி ஒட்டகங்கள் முதல் மகனுக்கும், மூன்றில் ஒரு பங்கு 2-வது மகனுக்கும், ஒன்பதில் ஒரு பங்கு 3-வது மகனுக்கும் சொந்தம்' என விசித்திரமாக ஓர் உயில் எழுதிவைத்துவிட்டு இறந்துபோனார் அவர்.
பதினேழு ஒட்டகங்களைப் பாதியாகப் பிரிப்பது  எப்படி என்பதிலேயே குழப்பம் ஏற்பட்டது. ஊரில் இருக்கும் கணித மேதை களிடம் உயிலையும் ஒட்டகங்களையும் எடுத்துச் சென்றார்கள் பிள்ளைகள். அனைவருமே, 'வேறு வழியில்லை; கொன்றுதான் பிரிக்க முடியும்' என்று கருத்துச் சொன்னார்கள். அப்போது, பள்ளிப் படிப்பு அதிகம் படிக்காத, ஆனால் அனுபவப் படிப்பில் தேர்ந்த பெரியவர் ஒருவர், ''ஒட்டகங்களைக் கொல்லத் தேவையில்லை. நான் பிரித்துத் தருகிறேன்' என்றார். அவர் எப்படிப் பிரிக்கப் போகிறார் என்பதைப் பார்க்க, ஊரே ஒன்று திரண்டது.
அவர் தன்னிடமிருந்த ஒரு ஒட்டகத்தை அந்த 17 ஒட்டகங்க ளோடு சேர்த்து, எண்ணிக்கையைப் பதினெட்டு ஆக்கினார். முதல் மகனுக்குப் பாதியல்லவா? எனவே, ஒன்பதைக் கொடுத்தார்; இரண்டாம் மகனுக்கு மூன்றில் ஒரு பங்காக 6 ஒட்டகங்களைக் கொடுத்தார்; மூன்றாம் மகனுக்கு ஒன்பதில் ஒரு பங்கென இரண்டைக் கொடுத்தார். எஞ்சியிருந்த தனது ஒரு ஒட்டகத்தைத் திரும்ப எடுத்துக்கொண்டார்.
இதுதான் பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்!
இன்று நம் முன்னால் பல புதுப் புதுப் பிரச்னைகளும், சவால் களும் காத்திருக்கின்றன. புத்தகங்களை வாசித்தோ, முற்காலத்தில் தீர்த்துவைத்ததைப் போல வழக்கமான அணுகுமுறையில் தீர்வு காண முயன்றோ அவற்றைச் சரிசெய்துவிட முடியாது. முற்றிலும் புதியதொரு அணுகுமுறை தேவை!
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் இரண்டாம் தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் நேரடியாக ஏமாற்றங்களையும், அதிர்ச்சிகளையும் சந்திப்பதில்லை.  மனரீதியாகப் பெற்றோரின் கருவறைக்குள்ளேயே அவர்கள் பத்திரமாக இருக்க விரும்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் தயாரித்துவைத்த விடைகள் கிடைக்காதா என்று எதிர்பார்க்கிறார்கள். சந்திக்கிற மனிதர்கள் எல்லாம் கணினியைப் போல இயங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.  முதல் முறையிலேயே கணக்கின் விடையைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பது அவர்கள் அவா!
தேர்வு வேறு, வாழ்வு வேறு! புதிய புதிய சிக்கல்களோடு புலப்படுவது தான் வாழ்க்கை. இன்று பல நிறுவனங்களில் முன்னனுபவம் என்பது எதிர்மறையாகக் கருதப்படுகிறது.  அனுபவம் உள்ளவர்கள் ஆபத்துடன் வாழ முயலமாட்டார்கள்;  நிச்சயமற்ற தன்மையை அவர்கள் சந்திக்க பயப்படுவார்கள்;  ரிஸ்க் எடுப்பது அவர்களுக்குக் கடினம் என்பதால், இளைய தலைமுறையினரே அதிகம் தேவைப்படுகிறார்கள். 
இன்றைய இளைஞர்கள் தங்கள் அறிவைக் கூர்தீட்டிக்கொண்டு, விடைகாணும் பக்குவத்துடன் திகழ்வது அவசியம். இலக்கியங்களி லிருந்தும், இதிகாசங்களிலிருந்தும் இதை நாம் கற்றுக்கொள்ளலாம். சரித்திர நாயகர்களும் அவதார புருஷர்களும் செக்குமாடாகச் சிந்திக்காமல், கட்டவிழ்த்த காளையாகத் தங்களது சிந்தனைகளைத் தட்டிவிட்டதால் மட்டுமே மேலே... இன்னும் மேலே... உயரே... உச்சியிலே சிகரத்தை அடைந்து செம்மாந்திருந்தார்கள்! நம்மையும் அப்பாதையில் பயணப்படச் செய்வதற்காகவே இந்தத் தொடர்.
இத்தொடரில், மரபு வழி இலக்கியங்கள் வாயிலாகவும், கர்ணவழிக் கதைகள் மூலமாகவும், நவீன புதிர்களின் மூலமாகவும் தமிழக இளைஞர்களை மாறுபட்ட கோணத்தில் 'பெட்டிக்கு வெளியே' யோசிக்க வைப்பதே என் நோக்கம்.
வாருங்கள், மாற்றி யோசிப்போம். நம் மரபைப் போற்றி வாசிப்போம். மேலே... உயரே... உச்சியை எட்டுவோம்!

No comments:

Post a Comment