Thursday, June 23, 2016

கலியுகம் பற்றி மகான் கோரக்கர்.....!!

யோகி பர மானந்த கலியின் தோற்றம்
உண்மை நிற சாதிமத பேதம் மெத்த
பாகிதமாய்ப் பிரபலங்கள் பெண்பால் விருத்திப்
பாருலகில் ஆண்மக்கள் குறைவுண்டாகும்
மோகித்தே முன்பின்னும் முறைமை கெட்ட
மூதரிய தாயினையே சேய்தான் சேர்ந்து
போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில்
பூவலகிற் கலியுனுட பான்மை கேளே – கோரக்கர்

உலகோருக்கு கலியுகத்தோற்றத்தின் உண்மையை கூறுகிறேன். நிற பேதங்களும் சாதி மத பேதங்களும் நிறைய உண்டாகும்.பெண் மக்களே நிறைய பிறப்பார்கள். ஆண் மக்கள் பெண் மக்களை விட குறைந்தே பிறப்பார்கள்.பெண்ணாசையால் முறைமை கெட்டு யாருடனும் யார் வேண்டுமானாலும் சேர்வார்கள் மூத்த பெண்களுடன் இளவயது ஆண்கள் சேர்வார்கள். இன்னும் இக்கலிகாலத்தில் நடக்கப்போகும் நிகழச்சிகளை சொல்கிறேன் கேளு.

கேளே நன்மனுக்கள் நூற்றுக் கொன்று
கெடியாகப் பிறந்திருத்தல் அரிதே யாகும்
நாளேமுன் கலியவனும் வளர்ந்து ஓங்க
நடுங்கிடுவர் மனிதர்களும் உயரங்கட்டை
வாளே முன் பின் வயது ஆண்டு நூறு
வயங்கிடுவேன் கலியுதிக்கு மிடத்தைத் தென்பா
சூளே மெய்ச் சும்பலப் பட்டன் வைணவ தத்தன்
கொல்லை புண்னை மரத்தின்கீழ்க் கலி செ னிப்பே – கோரக்கர்

இன்னும் சொல்கிறேன் கேளப்பா இப்பூமியில் நன் மக்கள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே மிகவும் அரிதாக இருக்கும்.நாளாக நாளாக கலியின் கொடுமைகள் ஓங்கி வளர்ந்து நிற்க்கும்.மனிதர்களின் உயரம் குறைந்து குட்டையாக ஆவார்கள். மனிதர்களின் ஆயுளும் குறைந்து 100 ஆகிவிடுமாம்.

கமபலப்பட்டம் எனும் ஊரில் வைணவ தத்தன் எனும் அந்தணரின் வீட்டின் கொல்லை புரத்தில் உள்ள புன்னை மரத்தின் கீழே தான் கலி புருஷன் தோன்றுவானாம்.

கலியும் பிறந்து 5000 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கும் என்பதையும் கூறுகிறார்.

கலியான ஆண்டு ஐயா யிரம்பின்
கருத்துடனே சாதி மத பேதம் ஒன்று
நலியாது சந்திரகலை ஐயாயிரம் மட்
டானதப்பால் ரவியோட்ட மதிக மாகிப்
பொலிவாகப் பூலோகந் திரண்டே நிற்கும்
பொய்யான அந்தணரின் கொட்டம் போகும்
வலியுடனே சத்தியத்தான் நிலையே யோங்கி
வழுவாது மனுக்கள் ஞானி யாமே. — கோரக்கர்

கலிகாலம் 5000 ஆண்டுகளுக்குப்பின் நல்ல எண்ணங்கள் உண்டாகி சாதி மதங்கள் எல்லம் ஒழிந்து மனிதகுலம் யாவும் ஒன்றே என்ற நிலை உருவாகும். சந்திரன் தேய்வதோ வளர்வதோ இன்றி முழு நிலவாகவே ஒளி வீசும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் சூரியன் வெப்பம் அதிகமாகி பகல் பொழுது அதிகரித்து இப்பூலோகம் முழுவதும் சூரிய ஒளி பொலிவாக திரண்டு நிற்கும். பொய்களை மெய்யாக்கும் மனிதர்களின் அகங்காரம் அழிந்துபோகும். தர்ம நெறிகளுடன் நன்மக்கள் வாழ்ந்து சித்தனாகவும் ஞானியாகவும் விளங்குவர்.

தான தரும தத்துவ யோகம் அதிகம் ஆகும்
தாரணியில் மாந்தர் பல வருண மாவர்
ஈனமின்றி யோக சக்கி ராதி பத்தியம்
இனமுடனே ஆண்டென் பத்தீ ராயிரம்
மோனமுடன் இருந்தாண்டு வசிப்பார் நாடு
முகமினிய நவரத் தின விளைவுண் டாகும்
போனகமாய்க் குளிகையிட்டுப் பறப்பார் விண்ணில்
பூரணமாய் ஆயுளுற்று வாழ்கு வாரே. — கோரக்கர்

இவ்வுலகில் தானங்களும் தர்மங்களும் சிறப்புடன் நடைபெறும் தத்தவ ஞானங்களும் விஞ்ஞானங்களும் யோகமும் நிறைந்து விளங்கும். இத்தரணியில் மாந்தர்கள் பல வர்ணமாக இருப்பர். ஏக சக்கிராதிபத்தியம் ஏற்பட்டு குறைவின்றி இருந்து எண்பத்திரண்டாயிரம் ஆண்டுகள் வரை நடக்கும். நவரத்தினங்கள் விளைந்து நாட்டில் செல்வங்கள். உண்டாகும்.குளிகையான கற்பங்களை உண்பார்ள். விண்ணில் பறப்பார்கள். பூரணமாய் ஆயுளுடன் வாழ்வார்கள்.

அந்தநாள் அக்காலம் நமது நாட்டில்
அநேகவிதப் பஞ்சங்கள் அவத்தை மெத்த
சந்தேக மில்லாமல் சாட்சி யப்போ
சாற்றிடுவே னாகாயந் தனிற் களாங்கம்
விந்தையுடன் நட்சத்திரம் ஒன்று தோன்றி
வெட்டவெளி பிரகாசம் வெகு வாஞ் சோதி
மந்தமின்றி வால் நீண்டு மதிமேல் நிற்கும்
மானிடர்கள் பிணிபலவால் மாள்வார் கதிரே.

கலியுகம் முற்றிடும் அந்த நாட்களில் நமது நாட்டில் அநேக விதமான பஞ்சங்களும் துன்பங்களும் பெருகி நடக்கும் அதற்கான அறிகுறிகளை சொல்கிறேன். ஆகாயத்தில் பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம். மிக அதிசயமான வால் நட்சத்திரம் தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும். அதிலிருந்து கிளம்பும் ஒளி வால் போல் நீண்டு சந்திரன் மேல் நிற்கும். சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வர்.

கதிரவணுங் கடும்பனியுங் காருங் கோடைக்
கற்பனைகள் மெத்தவுண்டு ஆகாயத்தில்
மதி தாழ்ந்து கரியினுட மண்டை போல
மகாரூப ரூப வெளி மதி மேற் காணும்
துதியாக நாழி இரு இருபத் தைந்தில்
தோற்றிடுமே மாத்திரைதான் மூன்று மட்டும்
சதியாக வடதேசம் தன்னி லோர்பால்
கடல்போங்கி நெருப்பு ரத்த மழையுடண் டங்கே.

கதிரவனிடமிருந்து கொடும் வெப்பமும் இரவில் கொடும் பனியும் கொட்டிதீற்கும். கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்கள் வானில் நடக்கும். சந்திரன் பூமிக்கு மிக தாழ்ந்து நிற்கும். யானை மண்டை ஓடு போல் மிக பெரிய உருவங்களும் அரூபங்களும் சந்திரன் மேல் தோன்றும். கால நேரங்கள் மாறி ஒரு நாள் பொழுது மூன்று மாத்திரை அளவே ஆகி எப்பொழுதும் இருள் சூழ்ந்து இருக்கும். வடதேசங்களில் கடல் பொங்கி அழிவுகள் ஏற்படும். மேலும் நெருப்பு வெடிகளால் ரத்த மழை கொட்டி நாடே சீரழியும்.

எங்கெங்கும் சாதுக்கள் ஏகக் கூட்டம்
ஏழைகளுக் குதவியாய் எய்தி நிற்பார்
பங்கமுடன் பாவி வெள்ளை பாத கன்றான்
பக்தர்களை சிறை கொள்வன் பட்ச மின்றி
மங்கி செக தீசனையே பூஜிப்பார் கூவி
மாநிலந்தான் பிரளயம்போல் மயங்கிக் காணும்
சங்கையுடன் சண்டாளர் சமரை நீத்துச்
சடுதியினில் வருவேவென் றறைந்து போனார்.

எங்கெங்கும் மக்கள் துன்புறுதலைக்கண்டு சாதுக்கள் கூட்டம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் மீது வெள்ளையர்கள் கோபம் கொண்டு பக்தர்களை சிறைக்கொள்வான். பக்தர்கள் செகதீசனை பூஜித்து கூவி அழைப்பார்கள். பிரளயம் காலம் போல் பூமி பிளந்து பூகம்பங்கள் ஏற்பட்டு மக்கள் மயங்கி மடிவார்கள். சந்தேகம்மின்றி இந்த சண்டாளப்போரை நீக்கி உலக மக்களை காக்க உடனே நான் வருவேன் என்று என்னிடத்தில் சொல்லி மறைந்து போனார் போகர்.

சந்திரரேகை 200 என்ற நூலில் போகரின் சீடரான கோரக்கர் இவ்வாறு கூறி இருக்கிறார்.
-----------------------------------------------------
https://www.facebook.com/Siddhars

https://www.facebook.com/Siththar.Masters

https://www.facebook.com/Thamil.Siththars

http://www.facebook.com/groups/siddhar.science/

தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.

No comments:

Post a Comment