Sunday, June 12, 2016

Cigarette smoking

கேள்வி - ஒரு எண்ணத்திற்கும், அதைத் தொடர்ந்து எழும் அடுத்த எண்ணத்திற்குமான இடைவெளியை அதிகப்படுத்த வேண்டும் என்கிறார்களே, உண்மையில் அது சாத்தியமா ?

இராம் மனோகர் - உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர் சிகரெட் புகைக்கிறார். அவர் உங்களிடம் வந்து சிகரெட் புகைப்பதை நிறுத்த வேண்டும், ஏதாவது உபாயம் இருந்தால் சொல் என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம. உடனே நீங்கள் என்ன சொல்வீர்கள் ? உடனடியாக நிறுத்த முடியவில்லை என்றால், படிப் படியாக தினமும் ஒவ்வொரு சிகரெட்டாகக் குறைத்துக் கொண்டே வந்தால் நிறுத்தி விடலாம் என்றுதானே சொல்வீர்கள் ? அது போன்ற முயற்சிதான் இதுவும். ஆனால், இந்த யுக்தியானது ஆழ்ந்த தியானத்தின் பொழுது கடைபிடிக்கக் கூடியதாகும். ஏதாவது புத்தகத்தைப் படித்து விட்டோ அல்லது பிறருக்கு தியானத்தின் மீது ஆர்வமூட்டுவதற்காக யாரோ சொல்வதைக் கேட்டு விட்டோ அவர் உங்களிடம் சொல்லியிருப்பார். நான் அது பொய் என்று சொல்ல வரவில்லை. ஆனால், சாதாரண நிலையில் அல்லது ஆரம்ப நிலையில் சாதகர் அந்த யுக்தியை கடைபிடிக்க முடியாது. ஏனெனில் எண்ணங்கள் எழுவதையே நாம் உணர்வதில்லையே !! எண்ணங்கள் சொற்களாகவோ, செயலாகவோ மலரும் பொழுதுதான் நம் உணர்வுக்கே வருகிறது.

சில நேரம் நாம் அமைதியான சூழலில் எந்தவித சிந்தனையும் இல்லாமல் இருக்கும் பொழுதுதான் எண்ணம் எழுவதை நாம் உணர முடிகிறது. நாம் யாரிடத்திலாவது தியானம் செய்வது எப்படி என்று கேட்டாலோ அல்லது தியானம் கற்றுக் கொள்ளச் சென்றாலோ முதலில் கண்களை மூடி அமர்ந்து கொண்டு வெறுமனே எண்ணங்களை உற்று உற்றுப் பாருங்கள் என்று சொல்வது இதற்காகத்தான்.  வள்ளுவர் எண்ணித் துணிக கருமம் என்று சொல்கிற படி நாம் யாராவது செய்கிறோமா ? இல்லையே ? நாம் நமது பழக்கம் மற்றும் அனுபவத்தின் வழியில்தான் செயல்படுகிறோமேயன்றி, சிந்தித்துச் செயல்படுவது இல்லை. நாம் பேசுவதற்கு முன்பும், செயல்படுவதற்கு முன்பும் அவற்றிற்கு மூலமான எண்ணத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு முதலில் பழகிக் கொள்ள வேண்டும். சமயோஜிதம், விவேகம் போன்ற உயர்ந்த பக்குவங்களைப் பெற வேண்டுமென்றால் முதலில் நாம் நம் எண்ணங்களை பகுத்து ஆராய்து பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் நம் மனமானது புற விஷயங்களில் ஓடுவதை நிறுத்தி உள்முகமாகத் திருப்பி எண்ணங்களை நோக்கிச் செலுத்த வேண்டும்.

நம் மனமானது இயல்பாகவே ஒன்றிலிருந்து ஒன்று என்று மாறிக் கொண்டே இருக்கக் கூடியது. அதே நிலை தியான முயற்சியின் பொழுதும், உயர்ந்த மன ஒருமைப்பாட்டின் பொழுதும் கூடத் தொடரும். ஆனால், மன ஒருமைப்பாட்டின் பொழுது ஏற்படும் மனதின் அத்தகைய மாற்றம் வேறு வகையானது. அதைப் பரிணாமம் என்று யோக சாஸ்திரம் சொல்கிறது. மன ஒருமைப்பாட்டின் போது ஏற்படும் மாற்றங்கள் மூன்று. அவை சமாதிப் பரிணாமம், ஏகாக்ரதா பரிணாமம், நிரோத பரிணாமம் என்பவையாம். அதாவது தாரணை முயற்சியின் பொழுது நம் மனமானது குவிந்த நிலைக்கும், பலவாறாகச் சிதறிய நிலைக்கும் இடையே ஊசலாடுவதைக் காணலாம். சில நிமிடங்கள் குவியும், சட்டென்று சிதறி ஓடும். அதுவே மன ஒருமைப்பாடு ஆற்றல் அதிகமாக அதிகமாகச் சிதறி ஓடுகின்ற பாங்கு குறைந்து கொண்டே வரும். தியான முயற்சியின் பொழுது நடப்பது இதுவே. இதையே சமாதிப் பரிணாமம் என்பார்கள். அதாவது சமாதி நிலையை அடைவதற்கான ஒரு கடினமான முயற்சி. இந்த முயற்சி கைகூடும் பொழுது, சிதறி ஓடும் நிலை முற்றிலுமாகக் குறைந்து மனம் ஒரே ஒரு எண்ணத்தில் மட்டும் நிலை பெற்று நிற்கும். அது ஒரு தெய்வ வடிவத்தின் மீதோ அல்லது ஒரு மந்திரத்தின் மீதோ அல்லது ஒரு சின்னத்தின் மீதோ ஏதோ ஒரு விஷயத்தைக் குறித்த எண்ணத்தில் மட்டும் நிலை பெற்று நிற்கும்.

நிற்கும் என்றால் அப்படியே ஸ்தம்பித்து நின்று விடும் என்று எண்ணி விடக் கூடாது. துரிதமாக ஒரே எண்ண அலை மட்டும் மீண்டும் மீண்டும் எழவும் விழவுமாக இருக்கும். இது மிக வேகமாக நடைபெறுவதால் நம்மால் இதை உணர முடியாது. இப்படித் துரிதமாகத் தொடர்ந்து வருகின்ற ஒரே விஷயத்தைப் பற்றிய எண்ண அலையின் எழுச்சியும், வீழ்ச்சியும் சரிசமமாக இருந்தால் அது ஏகாக்ரதா பரிணாமம் எனப்படும். இது தியானத்தின் மிக உயர்ந்த நிலையாகும். இப்படி சாதாரணமாக எழுவது, விழுவதுமான எண்ண  அலைகளுக்கு இடையே இடைவெளி உண்டு. அந்த இடைப்பட்ட நேரத்தில் மனம் வெறுமையாக இருக்கும். நேரம் குறைவாக இருப்பதால் இந்த வெறுமையை நாம் உணர்வதில்லை. அதுவே தியானத்தின் மிக உயர்ந்த நிலைகளில் நாம் இந்த இடைவெளியை உணர முடியும். அப்பொழுது பிற எல்லா எண்ணங்களும் மறைந்து போய் நான் என்கிற உணர்வு மட்டும் இருக்கும். தான் தானாகத் தன்னிலை பெற்று இருப்பதை சற்று இடைவெளியுடன் கூடிய அலை போல, நான் நான் என்று உணர முடியும். அப்பொழுதுதான் நம்மால் இரண்டு நான்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகரிக்க முடியும். நாம் என்னதான் எண்ணங்களை இல்லாமல் செய்து விட்டாலும் சம்ஸ்காரங்கள் உள்ளே இருந்து கொண்டுதானே இருக்கின்றன. அவை மனதின் ஆழங்களில் மாறிக் கொண்டேதான் இருக்கும். என்றாலும் நம் தியானத்தின் வலிமையால் வெளிக் கிளம்பாமல் அவை அமுக்கப்பட்டு விடுகின்றன. இதையே நிரோத பரிணாமம் என்பார்கள்.

எனவே முதலில் எண்ணங்களைக் கூர்ந்து கவனித்து வாருங்கள். எண்ணங்கள் எழுவதையும், விழுவதையும் உணருங்கள். மற்றவை தானாகவே நிகழும்.

No comments:

Post a Comment