சிசேரியன் பிரசவங்களின் சிக்கலுக்கு சிறப்பான தீர்வுகள் !
'சென்னையைப் பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளைவிட, இப்போது சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கிறது!'
- அதிர்ச்சி தர வேண்டிய இச்செய்தி, 'அப்படியா..?' என்கிற சம்பிரதாய விசாரணையுடன் அடுத்த வேலையை நோக்கி நகர வைக்கிறது. அந்தளவுக்கு சிசேரியன் பிரசவத்துக்குப் பழகிவிட்டார்கள் மக்கள்!
''முன்பெல்லாம் பதினைந்து, இருபது சதவிகித சிசேரியன் கேஸ்களை அட்டெண்ட் பண்ணிட்டு இருந்த நாங்க, இப்ப ஐம்பது சதவிகித கேஸ்களை அட்டெண்ட் பண்றோம்'' என்று சிசேரியனின் 'விஸ்வரூபம்' பேசும் சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவ நிலையத்தின் முண்னாள் இயக்குநர் டாக்டர் மோகனாம்பாள்,
''சிசேரியன் பிரசவங்கள் அதிகரிச்சு இருக்குனு சொல்ற அதேநேரத்துல, பிரசவ சிக்கல்களால ஏற்படுற தாய், சேய் இறப்பு சதவிகிதம் இப்போ ரொம்பவே குறைஞ்சுருக்கு. அதேபோல, சிரமமான பிரசவங்களால ஃபோர்செப்ஸ் போட்டு குழந்தையை எடுக்கறது, சிலசமயம் குழந்தையோட மூளைவளர்ச்சி பாதிப்படைய காரணமா ஆயிடும். இப்போ, அதுமாதிரியான குழந்தைகளின் சதவிகிதமும் குறைஞ்சுருக்கு. இதுக்கெல்லாம் சிசேரியன் மருத்துவ சிகிச்சைக்குதான் நன்றி சொல்லணும்'' என்றும் நெகிழ்கிறார்.
'பிரசவம் என்பதே, பிற உயிரினங்களைப் போல, இயல்பாகத்தான் நடக்க வேண்டும். அப்படியிருக்க... எதற்காக அது சிசேரியனாக மாறவேண்டும்?' என்பதைப் பற்றி பேசிய டாக்டர்,
''தாய்க்கு நீர்வற்றிப் போறது, குழந்தை பெருசா இருப்பது, அம்மாவோட இடுப்பு எலும்பு விரிவடையாம இருப்பது, கர்ப்பவாய் திறக்காமல் இருப்பது, அம்மாவின் வயது 35-க்கும் மேல் இருப்பது, டயாபடீஸ், பி.பி. இருப்பது... இதுபோன்ற காரணங்களில் ஏதாவது ஒன்றினால், சுகப்பிரசவ வாய்ப்பு ஆபத்தாகும். அப்படிப்பட்ட சமயங்கள்லதான் சிசேரியன் மூலமா குழந்தை பத்திரமா வெளியில எடுக்கப்படுது'' என்று காரணங்களை விளக்கினார்.
தொடர்ந்து பேசிய டாக்டர் மோகனாம்பாள், ''மருத்துவக் காரணங்கள் தவிர, வேறு சில காரணங்களும் இப்போ சிசேரி யனைத் தீர்மானிக்குது. சில மருத்துவர்கள், சிரத்தை எடுத்து சுகப்பிரசவம் பார்க்கறதுக்கு... சுலபமா சிசேரியன் பண்ணிடலாம்னு நினைக்கறாங்க. அதில் கிடைக்கிற பணமும் அவங்களோட இந்த போக்குக்குக் காரணம். கூடவே, இப்போ எல்லாம் பிரசவ நேரத்துல பெண்ணோட அம்மா, மாமியார், கணவர்னு யாராவது ஒருத்தரை லேபர் வார்டுக்குள்ள விடலாம்னு அரசாங்கமே சொல்லுது. அப்படி வர்றவங்க அந்தப் பொண்ணோட பிரசவ வேதனையைப் பார்க்க முடியாம, 'ஐயோ வேண்டாம்... சிசேரியனே பண்ணிடுங்க...'னு டாக்டர்களை வற்புறுத்துறது பல இடங்கள்ல நடக்குது. இப்படி குடும்பத்தினரோட வேண்டுகோள், வற்புறுத்தலால சுகப்பிரசவமா நிகழவேண்டியது... சிசேரியன் ஆயிடுற ஹிஸ்டரி நிறைய'' என்றார் கவலையுடன்.
'பிரசவ வலி என்பதை, இன்றைய பெண்கள் எதிர்கொள்ள மறுக்கிறார்கள்' என்றொரு குற்றச்சாட்டு இங்கே பரவியிருப்பது பற்றி மகப்பேறு மருத்துவர் கீதாஹரிப்பிரியாவிடம் கேட்டபோது... ''பிரசவ வலி என்பது உச்சகட்ட வலி. என்றாலும், அது பொறுத்துக் கொள்ளக்கூடிய வலிதான். இல்லைனா நம்ம பாட்டிகளும், அம்மாக்களும் எப்படி இத்தனை குழந்தைகள் பெத்திருக்க முடியும்..? கர்ப்ப காலத்துல இருந்தே பெண்களுக்கு, 'அது பீரியட்ஸ் நேரத்தில் அனுபவிக்கிற வலியைப் போலவே கொஞ்சம் பெரிய வலி...'னு பிரசவவலி குறித்த அச்சத்தை அகற்றி, 'அதிகபட்சம் 12 மணி நேர வலியைப் பொறுத்துக்கிட்டா... ஒரே நாள்ல எழுந்து நடந்துடலாம், சிசேரியன்னா... மூணு மாசத்துக்கு ஓய்வு எடுக்கறதோட, அறுவை சிகிச்சையோட பின்விளைவுகளையும் அனுபவிக்கணும்'னு அதைப் பத்தின விழிப்பு உணர்வை ஏற்படுத்தணும். இப்போ பிரசவங்கள் நவீனமாயிடுச்சு. சுகப்பிரசவத்துக்கே வலியைக் குறைக்க முதுகுல ஒரு ஊசி போடப்படுது. அதனால, சீரான உடல் நிலையோட, 'நம்மால் முடியும்' என்ற மனவலிமையை வளர்த்துக்கிட்டா, சுகப்பிரசவம் சாத்தியம்!'' என்று எளிதாக புரிய வைத்தார்.
''கர்ப்ப காலத்துல இருந்தே உணவுல சில வரைமுறைகளைக் கடைப்பிடிச்சா, தாய் - சேய் நலம் சீரா இருக்கிறதோட, அது சுகப்பிரசவத்துக்கும் வழி வகுக்கும்!'' என்று சொல்லும் கடலூர், மூலிகை வைத்தியர், அன்னமேரி பாட்டி... அந்த உணவுகளில் சிலவற்றை பட்டியலிட்டார் இப்படி -
''ஆரம்ப மாதங்கள்ல வாய்வு அதிகம் உள்ள பதார்த்தங்களான வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் எல்லாம் சாப்பிடக் கூடாது. கர்ப்பமான நாள் முதல், பிரசவமாகுற வரைக்கும்... முருங்கை இலை, சின்ன வெங்காயம், சீரகம் எல்லாத்தையும் சேர்த்து சூப் வெச்சு சாப்பிட்டு வந்தா... சுகப்பிரசவமாகும். மூணாவது மாசம் முதல், பிரசவமாகற வரைக்கும் வெந்தயக்கஞ்சி சாப்பிடறது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். வெந்தயம் ஒரு ஸ்பூன், அரிசி ரெண்டு ஸ்பூன் உடைச்சுப் போட்டு கஞ்சியா காய்ச்சி... பால் சேர்த்து, மூணு நாளைக்கு ஒரு தடவை சாப்பிடலாம்.
5-வது மாசத்துல இருந்து எலுமிச்சை அளவு வெண்ணெயை, ஒரு டம்ளர் கொதிநீர்ல கலந்து காலை அல்லது மதிய வேளையில சாப்பிடலாம். 7-வது மாசத்துக்குப் பிறகு, வடகத்தை பொரிச்சி, அதில ஒரு டம்ளர் தண்ணிவிட்டு கொதிக்க வெச்சு அரை டம்ளரானதும் குடிக்கலாம். இதை வாரத்தில 2 நாள் செஞ்சுட்டு வந்தா சுகப்பிரசவமாகும்.
கர்ப்ப காலங்கள்ல சிலருக்கு கை - கால் வீக்கம் வரும். இதுக்கு நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள்ஸ்பூன் பெருஞ் சீரகத்தை சட்டியில போட்டு வறுத்து வெடிச்சதும் தண்ணிவிட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். பத்து குப்பைமேனி இலையை மென்னு சாப்பிடலாம்... இதெல்லாம் வீக்கத்தை வடிச்சுடும். இந்த நேரத்துல கருஞ்சீரகம், அன்னாசிப்பழம், வெல்லம் சாப்பிடக் கூடாது. அது கருவைக் கலைக்கலாம்.
பிரசவ நாள் நெருங்கினதும் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அது சாதாரண வலியா இருக்கலாம். அஞ்சு வெத்திலை, ஒரு ஸ்பூன் ஓமம், 3 பூண்டு எடுத்து, ஓமத்தை வறுத்து அது வெடிச்சதும் நசுக்கிய பூண்டு, பிய்த்துப்போட்ட வெத்திலை எல்லாத்தையும் போட்டு ஒண்ணரை டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வெச்சி, முக்கா டம்ளரானதும் எலுமிச்சை அளவு வெண்ணெய் இல்லைனா பனைவெல்லத்தை சேர்த்துக் குடிச்சா... சாதாரண வலியா இருந்தா நின்னுடும். வலி தொடர்ந்தா, ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய நேரம் வந்தாச்சு!'' என்று அழகாகப் பேசி முடித்தார் அன்னமேரி பாட்டி!
நீங்களே தீர்மானியுங்கள்... ஒரு நாள் வலியைப் பொறுப்பதா, அல்லது வாழ்நாள் முழுக்க வலி சுமப்பதா என்று!
நாள் பார்த்து... நட்சத்திரம் பார்த்து..!
டாக்டர் மோகனாம்பாள் பேசும்போது, ''பரணி நட்சத்திரத்துல பொறந்தா... தரணி ஆள்வாங்க... அமாவாசையில பொறந்தா திருடன் ஆகிடுவாங்க... இப்படி பல நம்பிக்கைகள் இன்னமும் நம்ம மக்கள்கிட்ட நிறைஞ்சுதான் இருக்கு. இதனால, டெலிவரி தேதியைச் சொன்னதுமே... ஜோசியர்கிட்ட போய்... நல்ல நேரத்தைக் குறிச்சுட்டு வந்துடறாங்க. 'ஜோசியர் சொன்ன நேரத்துல குழந்தை பிறக்கிற மாதிரி இருந்தா ஓ.கே! இல்லைனா... கண்டிப்பா சிசேரியன் பண்ணிடுங்க டாக்டர்'னு கறாரா கேக்க ஆரம்பிச்சுடறாங்க. கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டல்லயெல்லாம் இது நடக்காது. பிரைவேட் ஹாஸ்பிட்டல்கள் பலதுலயும் பணம் வருதேனு இதுக்கு சம்மதிச்சுடறாங்க'' என்றதோடு, நிஜக்கதை ஒன்றையும் சொன்னார். அது -
''எனக்கு தெரிஞ்ச ஒரு வி.ஐ.பி ஜோடி செயற்கை முறையில கருத்தரிச்சாங்க. 'குழந்தைக்கு கிட்னி பிராப்ளம் இருக்குது. பிறந்த பிறகு, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை பண்ணிக்கலாம்'னு 'னு ஸ்கேன் பார்த்துட்டு டாக்டர் சொல்லியிருக்காங்க. ஆனா, 'நல்ல நாள்ல குழந்தை பிறந்துட்டா... அதுக்கு எந்த பிரச்னையும் இருக்காது'னு ரொம்பவே நம்பிக்கை அந்த ஜோடிக்கு. அப்ப பார்த்து விநாயகர் சதுர்த்தி வரவே, சிசேரியன் பண்ண சொல்லி கேட்டிருக்காங்க. அந்த டாக்டர் மறுக்கவே... வேற ஒரு டாக்டரை பிடிச்சு சிசேரியன் பண்ணிட்டாங்க. ஆனா, ஸ்கேன்ல தப்பா சொல்லியிருக்காங்க. அந்தக் குழந்தைக்கு உண்மையிலயே கிட்னி பிரச்னை ஏதும் இல்லை.''
No comments:
Post a Comment