ரிப்பன் பக்கோடா ரெடி மிக்ஸ்
தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து டப்பாவில் எடுத்து வைக்கவும். இதுதான் ரிப்பன் பக்கோடா ரெடி மிக்ஸ்.
ரிப்பன் பக்கோடா தேவைப்படும்போது தேவையான அளவு இந்த ரெடி மிக்ஸ் எடுத்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும். சூடான எண்ணெய் தயாராக இருக்கட்டும். பிசைந்த மாவை நாடா அச்சில் போட்டு நேரடியாக எண்ணெய் மேல் சுற்றி பிழியவும். வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.
பயத்தலாடு ரெடி மிக்ஸ்
தேவையானவை: பயத்தம்பருப்பு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றே கால் கப், முந்திரித் துண்டுகள் (வறுத்தது) - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: வெறும் கடாயில் பயத்தம்பருப்பை வாசனை வரும் வரை... சிவக்க (அ) பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பயத்தம்பருப்பு, சர்க்கரை இரண்டையும் பொடி செய்யவும், வறுத்த முந்திரித் துண்டுகள், ஏலக்காய்த்தூள், பயத்தம்பருப்பு ஆகியவற்றை பொடியில் சேர்த்து நன்கு கலந்தால்... பயத்தலாடு ரெடி மிக்ஸ் தயார்.
தேவையான போது, நெய்யை சூடாக்கி, தேவையான அளவு ரவா லட்டு மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். கலவை சூடாக இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
இட்லி தோசை மிளகாய்ப் பொடி
தேவையானவை: மிளகாய் வற்றல் - 10 (விருப்பப்பட்டால் அதிகம் சேர்க்கலாம்), கடலைப்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப், பெருங்காயம் - ஒரு சிறு துண்டு, எள் - கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல், பெருங்காயத்தை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். எள்ளை தனியாக (பொரியும் வரை) வறுக்கவும். வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து, டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
ரவா இட்லி ரெடி மிக்ஸ்
தேவையானவை: ரவை - ஒரு கப், லெமன் சால்ட் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 5, மிளகாய் வற்றல் - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் ரவையை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், முந்திரிப் பருப்பு துண்டுகள், கறிவேப்பிலையை சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு வறுத்து எடுக்கவும். இதனுடன் வறுத்த ரவை, உப்புச் சேர்த்துக் கலக்கவும். இதில் லெமன் சால்ட் கலந்து மூடி வைக்கவும். இதுதான் ரவா இட்லி மிக்ஸ்.
ரவா இட்லி தேவைப்படும்போது... தேவையான அளவு புளிப்பு தயிர், ரவா இட்லி மிக்ஸ் சேர்த்துக் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு வழக்கம் போல இட்லி தயாரிக்கவும்.
http://vasukimahal.blogspot.in/
No comments:
Post a Comment