#
மரணத்தை தவிர்த்த மாயை வாழ்க்கைக்குள் எங்கேயுமில்லை.வாழ்வின் உச்சநிலையும் வாழ்வின் மலர்ச்சியுமே மரணம்.மரணத்தை தேடி நிற்கும் யாசகன் தான் வாழ்க்கை.ஒவ்வொரு நாள் காலையிலிருந்தும் மரணம் உன்னை தொடர ஆரம்பிக்கிறது.மரணம் என்னும் மாயையை விரும்பாத ஒருவனால் வாழ்க்கைக்குள் முழுமையாக விழ முடியாது.வாழ்வு வளரும் தன்மையானது மரணம் மலரும் தன்மையானது.பயணமும் முடிவும் வெவ்வேறானதல்ல.பயணத்தின் இறுதி மரணம்.
இறைச்சலின் உச்சபட்ச ஒலிதான் மரணம்.அப்போது ஒரு புதுபார்வை உண்டாகிறது.அதற்கடுத்து நீ மரணத்தை மறுக்கமாட்டாய்.அந்த மாயைக்குள் நுழைய நீ முழுதுமாக தயாராகிவிடுகிறாய்.ஆனந்தத்துடனும் ஆழ்ந்த சிந்தனையுடனும் தியானத்துடனும் மரணத்துக்குள் நுழைந்துவிடுகிறாய்.மரணம் வெவ்வேறு வழிகளில் வருகிறது.நீ சாவது ஒருவகையான மரணம் மட்டுமே.இன்னும் பல மரணங்கள் உண்டு..உன் அன்னை இறந்தால் நீயும் தான் இறக்கிறாய்.ஏனெனில் அன்னையின் ஒரு பகுதிதான் நீ.அந்த பகுதி அப்போது இறந்துவிடுகிறது.உன தந்தை இறந்தால் உன் சகோதரன் உன் சகோதரி உன் நண்பன் என யார் இறந்தாலும் உன்னுடைய ஒரு பகுதி இறக்கத்தான் செய்கிறது.உன் விரோதி இறக்கும்போது ஒரு பெரும்பகுதி உன்னுள் இறந்துவிடுகிறது.ஒவ்வொருவரின் மரணத்தின் முடிவிலும் நீ வேறுவிதமாக மாறிவிடுகிறாய்.
நீ பிறந்தவுடன் குழந்தையாக இருக்கிறாய்.பின்பு இளைஞனாக மாறுகிறாய், பின்பு முதுமையை அடைகிறாய்.ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் நீ இறந்துகொண்டுதான் இருக்கிறாய்.குழந்தை பருவத்தை நீ கடக்கும்போது அதற்கான கதவு மூடப்படுகிறது.நீ இறந்து இளைஞனாக மாறுகிறாய்.இன்னும்போனால் ஒவ்வொரு கனத்திலும் உன்னுடைய ஒருபகுதி மாற்றமடைந்து வேறொரு பகுதி நுழைவதை உணர்வாய்.அப்போது ஒவ்வொரு கனமும் மரணம் உன்னை கடந்து தான் செல்கிறது.அந்த மரணங்கள் எந்த தடயமுமில்லாமல் உன்னை கடந்து சென்றுவிடுகின்றன.
மற்றொரு நுண்ணிய மரணமொன்றுண்டு.அது தான் காதல்.காதல் என்பது தூய்மையான மரணம்.யாரவது மரணமடைய விரும்பினால் அவர்கள் காதலில் விழலாம்.எல்லோரும் காதலை விவாதிக்கிறார்கள் புத்துணர்வு கொள்கிறார்கள்.ஆனால் பெரும்பாலோர் காதலில் இறங்க பயப்படுகிறார்கள் .ஏனென்றால் காதல் என்பது மரணம்.காதல் அச்சம் கொள்ளவைக்கிறது.காதலிக்கும் இருவரில் ஒருவருக்குள் இன்னொருவர் இறந்து தான் ஆகவேண்டும்.அது தான் காதல்.மற்றதெல்லாம் ஒரு விளையாட்டு தான்.இந்த விளையாட்டு காதலெல்லாம் பேச்சளவில் தான் இருக்கும்.உண்மையாக காதலிப்பதற்கு பயப்படுவதன் காரணம் மரணிக்க தயாராக இல்லாதது தான் காரணம்.ஒருவன் தன் இணைக்குள் மரணிக்காமல் காதலில் இறங்கமுடியாது.
தியானம் என்பது மற்றொரு மரணமாகும்.உனக்குள் நீ மரணிக்கும் நிகழ்வாகும்.இதுவரை படித்திருப்பாய், கேள்விப்பட்டிருப்பாய்.ஆனால் நீயாக தியானத்திற்குள் நுழையும்போது உன்னை நீ முற்றிலுமாக இழந்துவிடுகிறாய்.விழிப்புணர்வு இல்லாமல் செய்யும் தியானமானது ஒருவரை ஆழமான நிறந்தர மரணத்தில் தள்ளிவிடுவதும் உண்டு.நீ ஒரு குருவிடம் சரணாகதியடையும்போது மற்றொரு மரணம் நிகழ்கிறது.அது உன் அகங்காரத்தின் மரணம்.ஒரு கட்டத்தில் உன் அகங்காரம் மறைந்தே போய்விடுகிறது. மேற்கண்ட மரணங்களை தன்னுள் கொண்டது தான் வாழ்க்கை.
மனிதர்களின் மரணங்கள் மட்டும் உன்னுள் மரணத்தை தோற்றுவிப்பதில்லை.உன் செல்ல நாய் மரங்கள் செல்லபிரானிகள் ஒரு அழகிய பறவை என எவை மரணித்தாலும் உனக்குள் மரணம் நிகழ்ந்துவிடுகிறது.பிரபஞ்சத்தில் மரணம் நிகழ்வதும் மீண்டும் உயிர்கள் தோற்றுவிக்கப்படுவதும் தொடர்ச்சியான நிகழ்வுகளாகும்.மரணம் என்பது பிரபஞ்ச மாயையாகும்.வாழ்க்கையை நன்றாக வாழ்பவன் மரணத்தை ஏற்றுகொள்கிறான்.வாழ்வை நிராகரிப்பவனே மரணத்தை கண்டு அச்சம் கொள்கிறான்.ஒவ்வொருவரின் வாழ்வும் மரணத்தின் அருகிலே தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.மரணத்தை கண்டு பயப்படுபவன் வாழ்வை புறந்தள்ளுகிறான்.தானும் ஓரங்கட்டப்படுகிறான்.அடர்ந்த கானகத்திற்குள் நுழையும் வீரனைப் போல் வாழ்க்கைக்குள் தைரியமாக நுழைபவன் மரணத்தை ஒவ்வொரு வினாடியும் எதிர்கொள்ள தயங்காமல் வாழ்வில் வெற்றிபெருகிறான்.
No comments:
Post a Comment