*வாழ்க்கை மலர்கள் - நவம்பர் : 30*
*மனிதன் என்ற உயர் மதிப்போடு பொது நிலையில் ஆராய்ச்சிசெய்*
நியாய அநியாயம் ஆராய்ந்து, நேர்மையுடன் வாழ்ந்து, அதிக காலத்தைக் கழித்த அன்பரே! வாதி, பிரதிவாதி, வழக்கறிஞன், நீதிபதி இந்நான்கு வகையினிலும் நீயாகவே இருக்கும் வழக்கு ஒன்று உண்டு. அது எது?
எந்த விதமான எண்ணம், சொல், செயலானாலும் அதன் விளைவாகத் தனக்கோ, பிறர்க்கோ, அன்றோ, பின்னோ, அறிவுக்கோ, உடலுக்கோ, துன்பம் விளைந்தால், அது செய்யத் தகாத காரியம் அல்லவா?
சமூக வாழ்வில் பலவித இன்னல்களைத் தரும், சாதி, மதம், தேசம், மொழி, இனபேதங்கள், தனி உடமைப் பற்று என்றவைகளை மனிதன் கொள்வது குற்றமல்லவா? இவ்விதக் குற்றங்களிலிருந்து நீ விடுபட்டவனா?
இவைகளால் மனிதனுக்கு விளையும் துன்பங்களை நீயும் ஏற்க வேண்டி, இவைகளை எல்லாம் ஏற்று அனுபவித்து, வருவதால் நீ வாதியாகவும்,
இத்தகைய குற்றங்களில் ஒன்றையோ, பலவற்றையோ, நீயும் செய்து வருவதால் பிரதிவாதியாகவும்,
இந்தக் குற்றங்களுக்கு யார் யார், எந்தந்த அளவில் பொறுப்பாளிகள் என்று ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பில், நீ வழக்கறிஞனாகவும்,
இந்தக் குற்றங்களின் விளைவறிந்து இந்தக் குற்றங்களைப் போக்கவும், எழாமல் செய்யும் வழி வகுத்துச் செயலாற்ற வேண்டிய பொறுப்பில், நீ நீதிபதியாகவும் இருக்கிறாய்.
அறிவின் அடிப்படையில் – ஆரம்பத்தில் – நீ ஆதியாகவும், அறிவின் உயர்வில் முடிவாகவும், ஆகவே ஆதி – அந்தம் என்ற இரு நிலைகளிலும் உள்ள நீ, உன் உச்சஸ்தானமாகிய எங்கும் நிறைந்துள்ள அகண்டாகார நிலையில் அமர்ந்து தீர்மானம் செய்ய வேண்டும்.
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
www.facebook.com/vethathiri.gnanam
No comments:
Post a Comment