?
இந்த ஐயப்பாடு ஆரம்ப காலத்தில் எனக்கும் இருந்தது. பிறகு நான் சிதம்பரம் சென்று சில காலம் வசித்து வந்த பொழுது அங்கு என்னுடன் பழகிய சில கடவுள் மறுப்புக் கொள்கையுடைய நண்பர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், சூடம் வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டார் என்றும் பலவாறாகச் சொல்லி என்னை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தினார்கள். அவ்வேளையில் வள்ளல் பெருமானைப் பற்றி இராஜாஜி அவர்கள் எழுதிய நூல் ஒன்று கிட்டியது என் பாக்கியமே. அதில் வெள்ளைக் காரனே நீண்ட விசாரணையை மேற்கொண்டு ''வள்ளலார் சூக்குமமாக மறைந்தது உண்மைதான்'' என்று எழுதி வைத்து விட்டுப் போயிருப்பதை விளக்கிச் சுட்டிக் காட்டியிருந்தார். மேலும் அந்நூலைப் படித்த பிறகு பல்வேறு விளக்கங்கள் கிடைத்தன. இது நடந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாளையங்கோட்டையிலேயே இதற்கான விடை எனக்குக் கிடைத்தது வள்ளலாரின் அருளேயன்றி வேறில்லை. எனக்குப் பல குருமார்கள் உண்டு. அதில் மிக அருகில் இருப்பவர் ஒரு இஸ்லாமியப் பெரியவராவார். பாளை தெற்கு பஜாரில் பள்ளி, கல்லூரிகளுக்குத் தேவையான பொருடைகளை விற்பனை செய்து வருகிறார். அவர் தன்னுடைய இளம் வயதில் சங்கரன் கோவிலில் பல சித்தர்களை கண்ணுற்று அவர்களால் ஈர்க்கப் பெற்று பல்வேறு யோகங்களைப் பயிற்றுவிக்கப்பட்டவர். தற்செயலாகப் பேனா வாங்கப் போன என்னை அடையாளம் கண்டு கொண்டு ஈர்த்து நயன தீட்சை அளித்தவர். இன்றளவும் வாசியோகம் கடைபிடிப்பவர்.
ஒரு நாள் தன் இளம் வயதில் சித்தர்களோடான நிகழ்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, ''தான் என்றோ சூக்குமமாக மறைந்திருப்பேன் என்றும், தன் குருநாதர்கள் தடுத்து இல்லறத்தை கடைபிடிக்க உத்தரவிட்டதாகவும், இனி என் கடமைகள் எல்லாம் நிறைவடைந்த நிலையில் இன்னும் சில காலங்களில் தானும் சில சீடர்களை உருவாக்கி விட்டு சூக்குமமாக மறைந்து விடுவேன்'' என்றும் சொன்னார். உடனே நான் கேட்டேன், '' அவ்வாறு சூக்குமமாகக் காற்றில் கலப்பது சாத்தியமா?'' என்று. அவர் சொன்னார், காற்றில் மட்டுமல்ல பஞ்ச பூதங்களாலான நம் ஸ்தூல தேகத்தை பஞ்ச பூதங்களோடும் கலந்து சூக்குமமாகி நிற்பது என்று திருத்திச் சொல்லி பலவாறாக விளக்கியருளினார். இது குறித்து தாயுமானவ சுவாமிகளும் ''சித்த நிருவிகற்பஞ் சேர்ந்தார் உடல்தீபம் வைத்த கர்ப்பூரம் போல் வயங்கும் பராபரமே.'' என்கிறார். மேலும், ''தன்மயமாய் நின்ற நிலை தானே தானாகி நின்றால் நின் மயமாய் எல்லாம் நிகழும் பராபரமே.'' என்கிறார். ''உள்ளங் குழைய வுடல்குழைய வுள்ளிருந்த கள்ளங் குழைய என்று காண்பேன் பராபரமே.'' என்றும் கேட்கிறார். இந்தப் பராபரக் கண்ணியைப் படிக்கும் பொழுதுதான் வள்ளலார் பஞ்சபூதங்களில் தன் ஸதூல தேகத்தை ஐக்கியப்படுத்திக் கொண்டது உண்மைதான், அது சாத்தியந்தான் என்பது எனக்குப் புரிந்தது.
அதாவது நம் சித்த விருத்தியே பிரபஞ்ச வாழ்வு. சித்தத்தின் ஒடுக்கம் பிரபஞ்ச மறைப்பாகும். இதை எப்படி நம்புவது ? நம் ஜாக்கிரதை மற்றும் சுஷூப்தி நிலைகளே இதற்கு நல்ல உதாரணமாக அமைகின்றன. இந்த சித்தமானது விழிப்பு நிலையிலும், கனவு நிலையிலும் சங்கல்ப, விகல்ப சொரூபமாய் திகழ்கிறது. ஆசைகளால் எழும் எண்ணம் மற்றும் உணர்ச்சிகளைச் சங்கல்பம் என்பார்கள். ஆசையே கொள்ளதிருக்கின்ற பொழுதும், முன்பு கொண்ட ஆசைகளின் பதிவுகளில் இருந்து தாமாகவே கிளர்ந்து எழும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை விகல்பம் என்பார்கள். இந்த சங்கல்பம் குறைகின்ற அளவு விகல்பமும் குறைந்துபட்டுப் போகின்றது. முற்றிலுமாக சங்கல்பத்தை நிறுத்தி விட்டால்..............., விகல்பத்திற்கும் முடிவு வந்து விடுகின்றது. இந்த விகல்பமற்ற சித்தத்தின் தூய நிலையையே நிர் விகல்பம் என்கிறார்கள். இந்த நிர்விகல்ப நிலையிலேயே ஜீவனின் ஜீவவியக்தியை பரம்பொருள் தன்னில் ஈர்துக் கொள்கிறது. இந்நிலையே பரமன் அருள் எனப்படுகிறது. எனவேதான் வள்ளல் பெருமான் பரம்பொருளை அருட்பெருஞ் சோதி என்று அழைக்கிறார்.
அருளுக்குப் பாத்திரமான ஜீவன் பரமனோடு ஒன்றுபடுவதற்கு எந்த விதத் தடையுமில்லை. சூக்குமமாகிய சித்தம் ஞானாக்கினியில் தூய்மைப்படுத்தப்பட்டு பரம்பொருளில் சேர்ந்து விடும் பொழுது, பஞ்சபூதங்களில் தோன்றிய ஸ்தூலமும் பஞ்சபூதமாகப் பிரிந்து கரைந்து போகின்றது. ஆனால், இது அவரவர் விருப்பத்திற்கேற்ப நிகழ்கிறது. அதாவது கற்பூரத்தை பற்ற வைத்தால் அது எரிந்து, சாம்பல் கூட இல்லாமல் மறைந்து போவதைப் போல, அருட்பெருஞ் சோதியின் ஞானாக்கினியில் சித்தமான சூக்குமமும், ஸ்தூலமான அன்னமய கோசமும் தோன்றிய இடத்திலேயே ஒடுங்கி விடுகின்றன. எங்கிருந்து வந்தது, எங்கே நிலை பெற்றிருந்தது, எங்கே ஒடுங்கியது என்பதற்கான எந்த விதத் தடயமோ, அறிகுறியோ இல்லாமல் போய் விடுகின்றது. கற்பூரத்தைப் போல காணாமல் போய் விடுகின்றது. இதையே ''சித்த நிருவிகற்பஞ் சேர்ந்தார் உடல்தீபம் வைத்த கர்ப்பூரம் போல் வயங்கும் பராபரமே'' என்கிறார் தாயுமானவ சுவாமிகள். இதை நம்ப முடியவில்லையே ? என்று சொல்பவர்கள் அந்த நிர்விகல்ப நிலைக்குச் சென்றால் ஒழிய இதை உணர வேறு வழியில்லை. நான் நம்புகிறேன். ஏனென்றால் அவர்கள் சொல்லும் எத்தனையோ கருத்துக்கள் மனம் ஏற்றுக் கொள்ளும்படி இருப்பதால், இதையும் என் மனம் உறுதியாக ஏற்றுக் கொள்கிறது. இதை வெறும் அனுமானம் என்று என்னால் ஒதுக்கி விட முடியவில்லை.
இன்னும் இப்படி பட்ட பயிற்சி அளிப்பவர் நம்மில் உள்ளனரா??
ReplyDeleteமுடிந்தால் விவரம் அளிக்கவும்..