Saturday, November 19, 2016

Maharishi message ,Nov'20

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!

இன்றைய சிந்தனை:

நவம்பர் 20 :

பயிற்சியும் தேர்ச்சியும் :

அறுகுணங்கள் பழிச் செயல்களாக மலர்ந்து உயிருக்கும் மனதிற்கும் களங்கம் ஏற்படுத்துவதோடு விடுவதில்லை. அவை உடலுக்கும் கூடக் களங்கத்தை உண்டு பண்ணி விடுகின்றன.

ஆறு துர்க்குணங்களையும் ஆறு நற்குணங்களாகச் சீரமைத்துக் கொள்ளுதலானது மனவளக்கலையின் இரண்டாவது அங்கமான தற்சோதனையின் முக்கியமான பகுதியாகும். ஆறுகுண வயத்தில் நீங்கள் எந்த அளவில் முன்பு இருந்தீர்கள் என்று சோதித்துப் பாருங்கள். மனவளக்கலைப் பயிற்சிக்குப் பிறகு, இன்று எந்த அளவுக்கு அதில் நீங்கள் முன்னேறி இருக்கிறீர்கள் என்று சோதித்துப் பாருங்கள். மேலும் முயலுங்கள். வெற்றி பெறுங்கள்.

தற்சோதனையை அவ்வப்போது நடத்துங்கள். வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமையில் நடத்தலாம். மாதம் ஒரு முறை பௌர்ணமியில் நடத்தலாம். அல்லது உங்களுக்குச் சௌகர்யமான போதெல்லாம் நடத்தலாம்.

அப்போதெல்லாம் ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்கள். 1/2 மணி நேரம் தவமியற்றுங்கள். நல்ல துரியத்தில் இருந்துகொண்டு ஆராயுங்கள். எண்ணத்தை எடுத்து ஆராயுங்கள். ஆறுகுணங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆராயுங்கள். உங்களிடம் உள்ள குறைகளைக் தேடிக் கண்டுபிடியுங்கள். அவற்றைப் போக்கும் வழிமுறைகளை ஆராயுங்கள்.

குறைகள் நீங்குவதற்குரிய தெளிவான, உறுதியான சங்கற்பங்களை இயற்றுங்கள். தவத்தினால் பெற்ற மன உறுதியும், தற்சோதனையால் பெற்ற மனத்தெளிவும் எதிர்காலத்தில் உங்களை விழிப்பு நிலையிலேயே வைத்திருந்து ஆறுகுண வயத்திலிருந்தும் பழிச் செயல்களிலிருந்தும் மீட்டுக் காக்கும்.

கடந்த காலத்தில் நடந்தேறிவிட்ட பழிச்செயல்களைக் கூட ஒவ்வொன்றாகத் தற்சோதனையில் எடுத்து ஆராயுங்கள். அவற்றுக்கு இப்போது பரிகாரம் செய்துவிட முடியுமானால் உடனே செய்வதற்கான ஏற்பாடுகளைத் திட்டமிட்டுச் செய்யுங்கள். பரிகாரம் செய்து இன்று சரி செய்ய முடியாத பழிச்செயல்களானால் பாதிக்கப்பட்டவர்களிடம் மானசீகமாக வேணும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் ஏற்படுத்திவிட்ட பாதிப்பிலிருந்து அவர்கள் விடுபட்டு நல்வாழ்வு பெற வேண்டும் என்று மனமாற வாழ்த்துங்கள்.

குற்ற உணர்வை (Guilty consciousness) மனதில் வைத்திருக்க வேண்டாம். குற்ற உணர்வு நம் வாழ்வைக் கெடுத்துவிடும். திருத்தம் செய்யக் கூடிய தவற்றைத் திருத்தலாம். இல்லையேல் "குற்றம் செய்துவிட்டேனே! ஐயோ, செய்துவிட்டேனே!" என்று உருகிக் கொண்டிருப்பதில் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. தற்சோதனை செய்யுங்கள். அறுகுண சீரமைப்பில் தேர்ச்சி பெறுங்கள்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment