மனசு போல வாழ்க்கை !!!
?
கோபம் ஒரு பலவீனமான உணர்ச்சி. இயலாமையின் வெளிப்பாடுதான் கோபம். எரிச்சல், ஆத்திரம், கொந்தளிப்பு என எந்த உருவத்தில் வந்தாலும் கோபம் ஒரு வலிமையில்லாதவர்களின் ஆயுதம். ஆனால், நாம் கோபத்தை வீரமாகப் பார்க்க பழகியிருக்கிறோம்.
நமது ஆக்ஷன் ஹூரோக்கள் அனைவரும் கோபப்படுவார்கள். அதனால் கோபத்தை நாயக அடையாள மாக பார்க்க ஆரம்பித்தோம். வீட்டிலும் கோபப்படும் பெற்றோரைக் கண்டு அதிகம் பயந்தோம். கோபப்பட்டால்தான் காரியம் ஆகும் என்று அர்த்தப்படுத்திக்கொண்டோம். மீட்டிங்கில் பாஸ் கோபப்பட்டு கடிந்து கொண்டால் அதுதான் அதிகார தோரணை என்று வியந்தோம். போட்டியும் பொறாமையும் இயல்பு என்று ஆகிவிட்ட புது உலக நியதியில் கோபத்தை சகஜமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.
பெண் கோபம்
கோபத்தில் கொலை செய்வதும் தற்கொலை செய்வதும் செய்திகளாக வரும் போது மரத்துப்போய் வேறு சிந்தனையில்லாமல் அடுத்த பக்கம் திருப்புகிறோம். “இந்த வயசிலேயே என்ன கோபம் தெரியுமா என் பாப்பாவுக்கு?” என்று பெருமை பேசும் தாய் விரைவிலேயே அந்த குழந்தைக்குத்தான் அடிமை ஆவதை உணர ஆரம்பிக்கிறாள். “அவன் கேட்டது கிடைக்கலேன்னா வீட்டை இரண்டு பண்ணிடுவான். அவ்வளவு கோபம். அவ்வளவு பிடிவாதம்!” என்று பெற்றோர்கள் சொல்லக் கேட்பது சாதாரணமாகிவிட்டது.
என்னிடம் மன சிகிச்சைக்கு வரும் பலர் கோபத்தில் செல்போனை வீசி உடைப்பதாக சொல்கிறார்கள். கோபத்தில் நம்மிடம் சிக்கி சீரழிவது பொருட்கள் மட்டுமல்ல, மனிதர்களும் தான்.
கோபத்தின் வெளிப்பாடுகள் மாறுகின்றன. கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு அழகாய் சண்டையை ஆரம்பிப்பதில் பெண்கள் கில்லாடிகள். ஆண்கள் இந்த விஷயத்தில் புத்திசாலித்தனம் குறைந்தவர்கள். பேச்சில் ஜெயிக்க முடியாததால் இயலாமையை மறைக்க கையை ஓங்குவான். உள்ளத்தின் வன்முறையை உடல் வன் முறையாக மாற்றி விடுகிறார்கள்.
கோபத்தின் நோய்
உடலின் உள்ளே காலகாலமாய் அழுத்தி வைக்கப்படும் கோபம்தான் புற்று நோயாக மாறுகிறது என்பது லூயிஸ் ஹேயின் கூற்று. குறிப்பாக பெண்களின் மார்பக, கர்ப்பப்பை புற்று நோய்கள் எல்லாம் ஆண்கள் மேலுள்ள தீராத கோபத்தில் ஏற்படுபவை என்கிறார். தன் பெண்மைச் சின்னங்களை அழிப்பதை தன் வாழ்வில் தன்னைக் காயப்படுத்திய ஆண் அல்லது ஆண்களுக்கு தரும் தண்டனையாக உள் மனதில் அவள் பாவிக்கிறாள் என்று லூயிஸ் ஹே சொல்வது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம்.
கோபம் என்பது பலவீனம் என்பதை உணரும் போதே பாதி வேகம் குறைகிறது. இடம் பார்த்து வரும் கோபம் வெற்றுக் கோபம் தானே? ஒரு பக்கத்து கோபத்தை இன்னொரு பக்கத்தில் காண்பிப்பது என்ன வீரம்?
பின் “ரௌத்திரம் பழகு” என்றானே மகாகவி பாரதி? அவன் சொல்ல விரும்பியது இதுதான்: “சமூக அநீதிகளைக் கண்டால் தைரியமாகத் தட்டிக்கேள்!” கண்டவர்களிடம் எல்லாம் எரிந்து விழுவது ரௌத்திரம் அல்ல. சமூகக் கொடுமைகளை எதிர்க்கையில்கூட கண்ணியத்தையும் நயத்தையும் கையாள்பவர்கள் ஞானிகள். நம்மிடையே வாழும் நல்லகண்ணு போல.
கருத்தில் எதிர்நிலையில் இருந்தாலும், நடப்பவைக்கு சம்மதம் இல்லாவிட்டாலும், அதற்கு எதிராக போராடினாலும் அதை பக்குவமாகக் கையாளத் தெரிந்தவர்கள்தான் நிஜமான வெற்றியாளர்கள். காந்தி மகானுக்கு கடைசிவரை ஆங்கிலேயர்களிடம் பகையில்லை. அவர்களிடம் பேசுகையிலும் நகைச் சுவை உணர்வுக்கு குறைவில்லை.
உறவுகளில் வரும் கோபம், எதிர்பார்ப்புகள் பொய்ப்பதினால் வருபவை. சுய நலமான கோபம். “இதை உன்னை செய்ய வைக்க என்னால் முடியவில்லையே?” என்பதுதான் கரு. எல்லாவற்றையும், எல்லாரையும் தன் கட்டுக்குள் கொண்டு வர நினைப்பவர்கள் அதிகம் கோபப்படுவார்கள். வாழ்க்கையை அதன் இயல்பில் ஏற்று வாழ்பவர்கள் கோபத்தைக் கரைத்துக்கொள்கிறார்கள்.
கோபத்தைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் மேலைநாடுகளில் பிரபலமாகி வருகின்றன. ஒரு உள சிகிச்சையாளன் என்பதை விட கோபத்தால் வெல்ல நினைப்பவனின் அனுபவரீதியான ஆலோசனைகள் இதோ:
கோபம் இயலாமையின் வடிவம் என்பதைத் திரும்ப திரும்பச் சொல்லிக்கொள்ளுங்கள். முடிந்ததைச் செய்யலாம். முடியாததை ஏற்றுக்கொள்ளலாம். இயலாமை உணர்வை நேரடியாக எதிர்கொள்ளும் போது கோபம் கரைந்து போகும்.
கோபம் எனும் வெடிகுண்டு
கோபம் நமக்குள் நாமே பொத்தி வைத்திருக்கும் ரகசிய வெடிகுண்டு. தூர ( யார் மீதும் படாது) எறிந்துவிடுதல்தான் உடல் நலத்துக்கு நல்லது. கோபத்தினால் ஏற்படும் வியாதிகளின் பட்டியல் மிக நீண்டது.
கோபம் உறவுகளைச் சீர்குலைக்கும். எவ்வளவு பெரிய ஒழுக்கசீலராக இருந்தாலும் எல்லா நேரமும் பிறாண்டிக் கொண்டிருப்பவரை சொந்த குழந்தைகளே அண்ட பயப்படுவார்கள். சொல்வதைக் கோபப்படாமல் சொல்லத் தெரிந்துகொள்ளுதல் மனிதர்களைச் சம்பாதித்துக் கொடுக்கும்.
எல்லாவற்றையும் மாற்ற நினைப்பதை விட எல்லாவற்றையும் ஏற்க நினைப்பது தான் மனநலத்தை பேணும். உங்கள் வாழ்க்கையை, உங்கள் உறவுகளை, உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். கோபம் இடம் தெரியாமல் காணாமல் போகும்.
“கோபத்தால் என் உடலில் ஏற்பட் டுள்ள அனைத்து பாதிப்புகளையும் வெளியேற்றுகிறேன்” என்று அஃபர்மேஷன் கூறுங்கள். உங்களை முதலில் மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு மற்றவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாவிதமான கோபங்களும் காலத்தால் அடித்துச் செல்லப்படுபவை என்று புரிந்து கொள்ளுங்கள்.
ஆன்மிகப் பயணத்தில் கோபத்தை முழுமையாகக் கரைத்தல் ஒரு முக்கியமான மைல் கல். அதனால்தான் பேருண்மையை கண்ட ஞானிகள் தவக்கோலத்திலும் ஒரு புன்னகை சிந்திக்கொண்டிருப்பார்கள்.
புத்தரின் புன்னகையை விட ஒரு செறிவான புன்னகை எங்காவது உண்டோ?
-டாக்டர். ஆர். கார்த்திகேயன்
http://tamil.thehindu.com/
No comments:
Post a Comment