'.''
நண்பர் - //கோபத்தை அடக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது, அந்த கோபத்தால் நமது உடலில் ஏற்படும் மாற்றங்களை அதாவது மூச்சை, உடல் நடுக்கத்தை, இதயம் படபடவென துடிப்பதை கவனிக்க ஆரம்பித்தோமானால், நம் கோபம் வந்த வழியே காணாமல் போய் விடும் // இது சாத்தியமா நண்பரே !? பிறர் நம்மை இகழும் பொழுது, நமக்கு எதிராக அல்லது நமக்குப் பிடிக்காததைச் செய்யும் பொழுது கோபம் வந்து விடுகிறதே. கோபம் வந்து விட்டால்தான் நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவு, நம் மனம் நம் வசமில்லாமல் போய் விடுகிறது. நீங்கள் எளிதாகச் சொல்லி விட்டீர்கள். ஆனால், இதெல்லாம் நடைமுறைக்கு சாத்திமாகுமா ?
இராம் மனோகர் - சாத்தியமில்லாதது என்று ஒன்று இந்த உலகில் இல்லவே இல்லை. நம்பிக்கை இன்மையும், பயமும் உள்ளவர்களால் எதையும் சாதிக்க முடியாது. முயற்சியும், முனைப்பும் இருந்தால் எல்லாம் சாத்தியமே. நம்மை விட வலிமையானவன் என்று தெரிந்து விட்டால், அவனுக்கு முன்னால் நாம் கோபப்படுவதில்லையே ? அப்பொழுது கோபத்தை விட பயம் வலிமை பெற்று விடுகிறது. கோபம் ஒரு நஞ்சு என்றால் பயம் அதை விடக் கொடிய நஞ்சு. எனவே ஒன்று வலிமையாக இருந்தால் மற்றது அடங்கி விடுகிறது. இதை நாம் இயற்கையின் நடைமுறையில் பார்க்கிறோம் தானே ? ஒரு தீமையை அடக்க நாம் இன்னொரு தீமையை கையில் எடுத்தால், அதுவும் பிறகு துன்பத்திற்குதானே வழிவகுக்கும் ?
பயத்தை ஏற்படுத்தி அல்லது ஏதேனும் ஒரு உபாயத்தை கையாண்டு கோபத்தை அடக்குவது என்பது இதையொத்ததே. எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், எதிரிகள் தாக்க முடியாதபடிக்கு வலிமையான கோட்டையைக் கட்டி தன்னை பாதுகாத்துக் கொள்வது பயம் என்று கருதுகிறீர்களா ? விவேகம் என்று கருதுகிறீர்களா ? தன்னையும், தன் பலவீனங்களையும் உணர்ந்து, அவற்றை சரி செய்து கொள்பவனே விவேகி. மற்றவர்களை சரி செய்ய நம்மால் இயலாது. நம்மை நாம் வலிமை உள்ளவர்களாக, பலமுள்ளவர்களாக ஆக்கிக் கொண்டால் எந்த விதமான தீய உணர்வுகளும் நம்மை அண்டாது. இங்கே பலமும் வலிமையும் கோபத்தை வெல்லும் மனநிலையைக் குறித்து பேசப்படுகிறதே அல்லாமல் உடல் வலிவைக் குறித்து அல்ல.
பிறரிடத்தில் எந்த செயல் நமக்கு எரிச்சலை, கோபத்தை உண்டாக்குகிறதோ, அதுவே நம்மிடத்திலும் இருக்கிறது என்பதை யாரும் உணர்வதேயில்லை. நம்மிடத்தில் இருக்கும் பொழுது தவறில்லாததாகத் தெரிவதெல்லாம் பிறரிடத்தில் காணப்படும் பொழுது மட்டும் தவறாகத் தோன்றி, கோபத்தைத் தூண்டுகிறது என்றால், அது எவ்வளவு பெரிய பலவீனம். மற்றவர்கள் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக நடந்து கொள்ளும் பொழுது, அவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதற்குக் காரணமாக நம்மிடம் உள்ள குறைபாடுகள் என்ன என்பதை முதலில் நாம் கண்டுபிடித்து சரி செய்வதே விவேகம். பிரபஞ்ச வாழ்க்கையில் பிற உயிர்களோடு நமக்கு அமைந்துள்ள உறவானது, கண்ணாடியைப் போன்றது. நமக்குள் இருக்கும் பலவீனங்களை நாம் பார்த்து தெளிந்து நம்மை நாமே உணர்ந்து நம் பலவீனங்களை சரி செய்து கொள்ளவே அந்தக் கண்ணாடி இறையாற்றலால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கோபம் வரும் பொழுது எதிரே நிற்பவர்கள் சொல்லிலும், செயலிலும் கவனம் வைத்தால், அது எரிகிற தீயில் எண்ணையை ஊற்றியது போல மேலும் பற்றி எரியும். மாறாகக் கோபம் வரும் பொழுது நம்முள் ஏற்படுகின்ற மாற்றங்களையும், இத்தகைய பொருந்தாத சூழல் அமைவதற்குக் காரணமாக நாம் செய்த தவறு என்ன, என்று எண்ணிப் பார்க்கத் துணிந்தால் கோபம் ஒரு போதும் வரவே வராது. ஆனால், இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்தப் பக்குவம் ஒரே நாளில் வந்து விடுவதில்லை. தீவிரமான தற்சோதனைப் பயிற்சியும், முயற்சியும் மேற் கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். அப்பொழுதுதான் நம்மை நாம் உணர்ந்து நம்முடைய தவறான நடைமுறைகளை மாற்றிக் கொள்வதற்கும், சகிப்புத் தன்மை வளர்த்துக் கொள்வதற்கும், நம்மை சுற்றி உள்ளவர்களோடு சுமூகமான, இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இயலும். தன்னைச் சுற்றி கோட்டை கட்டிக் கொள்ளும் விவேகம் இதுதான்.
மாறாக மற்றவர்களிடம் பூரணத்தை எதிர் பார்த்து, ஏமாற்றமடைந்து, கோபப்படுவதினால், நாம் நம்மிடம் ஏற்கனவே உள்ள மனோ பலத்தையும் இழந்து மீளாத துன்பத்திற்கு ஆளாகி விடுகிறோம். இயற்கையின் நடைமுறையை கூர்ந்து கவனித்தால், சில நிகழ்வுகள் நமக்கு நல்ல பாடமாக அமையும். புயல் வேகமாக வீசும் பொழுது பலமில்லாத மரங்கள் விழுந்து விடுகின்றன. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் பொழுது தரமில்லாத கரை கரைந்து போய் விடுகின்றது. வலிமையற்றவை பலவீனமானவை காணாமல் போய் விடுகின்றன. பிறர் நமக்கு எலிச்சலூட்டி, கோபத்தைத் தூண்டும் விதமாக நடந்து கொள்ளும் பொழுது, கோபப்படுபவன் மனதளவில் பலவீனமானவனாகிறான். அத்தகைய சூழலில் தடுமாற்றம் அடையாமல், காற்றடிக்கும் பொழுது கற்பாறை நிற்பது போல அசையாமல் நிற்பவனே மன வலிமை பெற்றவனாகிறான்.
பிறர் சொல்லாலோ, செயலாலோ கோபமடைந்து துன்பப்படுபவன் வாழத் தகுதியற்றவனாகிறான். பெரிய காரியங்கள் எதையும் அவனால் சாதிக்க முடியாது. எனவே எந்தச் சூழலிலும் மனங்கலங்காமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். மனங்கலங்கி விடுபவன் எதிர்ப்பையும், நேரும் துன்பங்களையும் வெல்ல முடியாதவனாக ஆகி விடுகின்றான். மற்றவர்களை விடத் தன்னை உயர்வானவனாக எண்ணிக் கொள்பவனே அகங்காரம் கொண்டு கோபம் கொள்கிறான். தன்னை மற்ற உயிர்களோடு இணைத்து வைத்துப் பார்க்கிற தெய்வீகப் பண்பை உடையவன் ஒருபோதும் கோபம் கொள்வதில்லை. எனவே நம் மனப்பான்மையை நாம் மாற்றியமைத்து பலம் உள்ளதாக ஆக்கிக் கொள்வதே விவேகம்.
கோபத்தை அழிக்கும் வழியும் அதுதான். இது அனைவருக்கும் சாத்தியமானதுதான். இதற்கு வரலாற்றில் எத்தனையோ உதாரணங்கள் உண்டு. கோபத்தால் அழிந்தவர்கள் கோடானு கோடி. பொறுமையால் அழிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை. ஒருவேளை மற்றொருவரின் கோபம் இத்தகைய மகாத்மாக்களின் ஸ்தூல தேகத்திற்கு வேண்டுமானால் தீங்கு செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் கீர்த்தி என்றென்றும் அழியாமல் பிறருக்கு நல்வழியைக் காட்டிக் கொண்டிருக்கும்.
''மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.'' என்பார் திருவள்ளுவர்.
பாட்டுச் சித்தர் பாரதி என்ன சொல்கிறார் பாருங்கள்....
''எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா,
யானும் வந்தேன் ஒருசித்தன் இந்த நாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள்
மனோன்மணியென் மாசக்தி வையத் தேவி;
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்;
மிச்சத்தைப் பின்சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை;
துச்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,
சூழ்ந்த தெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே,
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்
சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்,
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலை யாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்.
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்;
கொடுங் கோபம் பேரதிர்ச்சி; சிறியகோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறிய தாகும்;
அச்சத்தால் நாடியெலா மவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதற்கு வழியெனநான் குறித்திட் டேனே.
No comments:
Post a Comment