நவம்பர் 11: நினைப்பது நடக்கும்
ஐவகைக் கடமைகள்
மனிதனுக்கு ஐந்து வகைகளிலே கடமைகளுண்டு. அவை
(i) தான்,
(ii) குடும்பம்,
(iii) சுற்றம்,
(iv) ஊரார்,
(v) உலகம் ஆகிய இவைகளாகும்.
இந்த ஐவகையையும் அவரவர்கள்: ஆற்றலுக்கும், வயதிற்கும், அறிவிற்கும் தக்கவாறு உயர்த்திக் கொண்டே போகலாம். ஆனால், முதல் முக்கியத்துவம் உடலில் இருக்க வேண்டும். இரண்டாவதாகக் குடும்பம். பிறகு சுற்றம், ஊரார், உலகம் என்று இவ்வாறு விரிய வேண்டும். இந்த ஐந்திலே ஒன்றினால் மற்றொன்று பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் சமுதாயத்திற்காக உழைக்கின்றேன் என்று கூறித் தன் குடும்பத்தைப் பராமரியாது விட்டாலோ, உடல் நலத்தைச் சிதைத்துக் கொண்டாலோ, சமுதாய நலனிற்கு ஒருவர் தொண்டு செய்ய முடியுமா? குடும்ப நலனும், உடல் நலனும் வீணாகிப் போய் விடும். ஒரு மனிதன் நல்ல முறையிலே வாழ்ந்தானேயானால், அதாவது தன் உடலையும் மனதையும் சரிவரப் பேணி வந்தானேயானால் சமுதாயத்திற்கு இலாபமாக, நன்மையாக அமையும். அவ்வாறின்றி அவன் உடல் நலம் குன்றி நோயுற்றால் சமுதாயந்தானே அதற்கு ஈடு செய்ய வேண்டும்? அப்பொழுது சமுதாயத்திற்கு இருவிதத்தில் நஷ்டமாக வந்தடையும்; முதலாவதாக அவனால் கிடைக்கக் கூடிய இலாபம் போய் விட்டது. இரண்டாவதாக அவனால் செலவும் இழப்பும் உண்டாகின்றன.
தனி மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது என்பது சுயநலமன்று. தன்னைச் சரியாக வைத்துக் கொள்வது. ஆற்றல் உள்ளவனாக மாற்றிக் கொள்வது. கல்வியிலே தேர்ந்தவனாக மாற்றிக் கொள்வது ஆகிய இவையெல்லாம் சுயநலமாகா. தான் வாழக் கூடிய இந்த சமுதாயத்திற்கு நல்ல பிரஜையாக, நல்ல தொண்டனாக வரவேண்டுமென்ற அடிப்படைதான் ஒரு மனிதனுடைய நலம். அவனை அறியாமலேயே அவன் செய்யக்கூடிய நல்ல காரியங்களெல்லாம் சமுதாயத்திற்கு நன்மையாவே முடியும். பிறர்க்குத் தொண்டாற்ற வேண்டும். பிறர்படும் துன்பத்தை நீக்கித் துணைபுரிய வேண்டும் என்ற வகையிலே தனிமனிதனுடைய தொண்டாற்றும் நிலை சமுதாய வளத்தையே பெருக்கச் செய்யும்.
வாழ்க வளமுடன்!
பாமரர்களின் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
No comments:
Post a Comment