நண்பர் -ஐம்பது வயதுக்கு மேல் ஆன்மீகத்தை கடைபிடித்தால் போதும் என்று சொல்கிறார்களே, இது பற்றி தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?
இராம் மனோகர் - கடைபிடிப்பதற்கு ஆன்மீகம் என்பது நமக்குப் புறம்பானதல்ல. ஆன்மீகம் என்பது நம் சுய இயல்பு. அதை உணராத வரை அதை நம்மிலிருந்து வேறான ஒன்றாகக் கருதும் அறியாமையின் அந்தகார இருளின் பிடிக்குள் சிக்கி, மாயையின் வசப்பட்டு, மலவுபாதிகளில் மூழ்கிக் கிடக்கும் வரை நாம் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி ஒரு மிருகத்தைப் போல் நடந்து கொள்கிறோம். வாழ்க்கை சுகங்களை அடைவதற்காக பலவிதங்களில் முயற்சி செய்கிறோம். இதனால் மற்றவர்களுக்கு எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் சுயநலம் பிடித்தவர்களாக ஆகி விடுகிறோம். உணவு, உறக்கம், உடலுறவு போன்ற அற்ப சுகங்களையே பெரிதென எண்ணி ஏமாந்து போகிறோம். ஆனால், இங்கே எதுவுமே நிலையானதல்ல என்கிற உண்மை புலப்படும் கால கட்டமும் நம் வாழ்க்கையில் வருகிறது. அன்று நமக்கு வயதாகி விடுகின்றது. பணம் இருக்கிறது ஆனால், விரும்பியதை உண்ண முடிவதில்லை. மெத்தை, ஏசி எல்லாம் இருக்கிறது ஆனால், தூக்கம் வருவதில்லை. பெண்களே விரும்பி ஏற்றுக் கொண்டாலும் கூட அவர்களோடு கூடி இன்பம் காண உடம்பில் வலு இருப்பதில்லை.
எதையெல்லாம் நிலையானது என்று நாம் நினைத்து ஆடாத ஆட்டமெல்லாம் போட்டோமோ, அவையெல்லாம் நம்மைப் பொருத்த வரையில் நிலையற்றவைகளாகப் போய் விட்டன. இப்பொழுதுதான் வேதாந்தம், சித்தாந்தமெல்லாம் உண்மை என்பது அறிவில் புலப்படுகிறது. நாம் கண்டதெல்லாம் ஒரு கனவு போன்ற வாழ்க்கை என்கிற நிதர்சனம் அறியாமையை ஒழித்துக் கட்ட நினைக்கிறது. ஆனால் என்ன செய்ய ? மனம் அடங்குவதில்லையே ? இப்படியே வாழ்ந்து பழகி விட்ட நாம் நம்மை மாற்றிக் கொள்வது என்பது முடியாத காரியமாக அல்லவா இருக்கிறது ? இவையெல்லாம் சித்தத்திலும், இரத்தத்திலும் ஊறிப் போய் விட்டனவே ? இனி இறுதி கட்டத்தில் இவைகளையெல்லாம் உதறி விட்டு, புதுப் பண்புகளையும், குணங்களையும் எப்படி கடைபிடிப்பது ?
கடந்தகாலப் பதிவுகளோடு, வாஸனைகளோடுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதை எளிதில் மாற்றிக் கொள்ள முடியாது. அதற்குத் தீவிரமான, வைராக்கியமான முயற்சி வேண்டும். அதைத் திடீரென்று வாழ்வில் கொண்டு வந்து புகுத்த முடியாது. அது மேலும் குழப்பத்தையே விளைவிக்கும். நாம் பல இலட்சம் யோனி பேதங்களைக் கடந்துதான் மனிதனாகப் பரிணமித்து வர முடிந்தது. படிப்படியாகத்தான் மிருக நிலையிலிருந்து மனிதனாகப் பரிணமித்து வந்தோம். வெளிப் புறத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைப் போல உள்ளே உள்ளத்திலும் இந்த மாற்றத்தை நாம் படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும். ஐம்பது வயதுக்கு மேல், அறுபது வயதுக்கு மேல் பார்த்துக் கொள்ளலாம் என்று மெத்தனமாக இருந்தால், அது நடக்காது.
அன்று நம் உள்ளம் அதை ஏற்காது. வலுக்கட்டாயமாகத் திணிக்கவும் முடியாது. எனவே இளமையிலிருந்தே இதற்கான நன்முயற்சிகளை நாம் கடைபிடிக்க வேண்டும். வாழ்க்கை போராட்டங்களுக்கிடையே நம் பிறப்பின் இலட்சியத்தை நோக்கிய உறுதியான தன்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். சேற்றிலே மலரும் தாமரை போல, இந்த உலகாயம் எனும் கலங்கிய குட்டையிலே மலர்ந்து மணம் வீசும் தாமரையாக நம் உள்ளம் ஆன்ம நோக்கம் பெற்று விளங்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இறுதி கட்டத்தில் நம் மனமானது தெளிந்த நீரோடை போலச் சலனமற்ற நிலையில் விளங்கும். மரணிக்கும் தருவாயில் இங்கே நான் பெறப் போவது எதுவுமில்லை என்கிற நிர்மலமான நிலை அப்பொழுதுதான் வாய்க்கும். அப்படிப்பட்டவர்கள்தான் மரணத்தை வெல்ல முடியும். அவ்வளவு பெரிய கீதையின் மொத்த சாராம்சமே இதுதான். எவனொருவன் மரணிக்கும் தருவாயில் எந்த வித உலகாய நாட்டமுமில்லாமல் என்னை (ஆன்மாவை) நினைக்கிறானோ அவன் விடுதலை பெறுகிறான் என்பதுதான். ''இளமையில் கல்'' என்று சொன்னது இதற்காகத்தான்.
No comments:
Post a Comment