சரஸ்வதிக்கு ஆலயம் இல்லாதது ஏன்?
கலைமகள் எனும் நாமகள் சரஸ்வதி
சரஸ்வதியைப் பற்றி எப்படி நினைக்கிறோம்? பூர்ண பிரம்ம சக்தி என்று நினைக்கிறோமோ இல்லையோ வித்யாதி தேவதை, கலை மடந்தை, அறிவுத் தெய்வமென்று அவளுக்கு ரொம்பவும் உன்னதமான ஸ்தானம் கொடுத்திருக்கிறோம். வெள்ளை வெளேரென்று வீணா, புஸ்தகங்களோடு அவளை நினைத்தாலே சாந்தியாயிருக்கிறது. சரஸ்வதி பூஜை பண்ணுகிறோம்.
அவளைப் பற்றி ஸ்தோத்திரங்கள், மகான்கள் பண்ணியிருப்பது, கம்பர், ஒட்டக்கூத்தர், குமர குருபரர், பாரதியார் போன்றவர்கள் தமிழில் அழகாகப் பண்ணியிருக்கிறார்கள். அவற்றை ஓதுகிறோம். முத்துஸ்வாமி தீக்ஷிதர் முதலானவர்கள் அவள் மீது செய்திருக்கும் கீர்த்தனங்களைப் பாடுகிறோம். குழந்தையாக ஸ்கூல் போக ஆரம்பிக்கும்போதே அவள்மேல் சுலோகங்கள் சொல்லி பிரியத்துடன் பக்தி பண்ண ஆரம்பித்துவிடுகிறோம்.
இத்தனை இருந்தாலும், இவ்வளவு ஆயிரம் கோயில் இருந்தும் சரஸ்வதிக்கு ஒன்றையும் காணோம். தமிழ்நாடு பூராவிலும் தஞ்சாவூர் ஜில்லாவில் கூத்தனூர் என்ற ஒரு இடத்தில்தான் சரஸ்வதி ஆலயம் இருக்கிறது. அது ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில். ஒட்டக்கூத்தருடைய ஊர்தான் கூத்தனூர்.
காமகோட்டத்தில், காஞ்சி காமாட்சி ஆலயத்தில் சரஸ்வதிக்கு சந்நிதி உண்டு. ஆனால் அதுகூட பிரம்ம பத்னியான சரஸ்வதி இல்லை என்றும், ராஜ ராஜேச்வரிக்கு மந்த்ரிணியாக இருக்கும் ராஜசியாமளையான மகா சரஸ்வதி என்றும் ஒரு வித்தியாசம் சொல்வதுண்டு. சரஸ்வதிக்கு பிம்பம், சந்நிதியுள்ள மற்ற கோவில்களிலும் அவை முக்கியமான இடம் பெறாமல் ஏதோ ஒரு மூலையில்தான் இருக்கின்றன.
மொத்தத்தில், பிரம்மா மாதிரியே சரஸ்வதிக்கும் கோயில் முக்கியத்துவம் இல்லை. ஆனால் பிரம்மாவிடம் ஜனங்களுக்கு விசேஷ பக்தி, மரியாதைகள் இல்லாததுபோல, சரஸ்வதிக்கு இல்லாமலில்லை. அவளை எல்லாரும் நிரம்பப் போற்றி பக்தி செய்கிறோம். படிக்க ஆரம்பிக்கும்போதே கல்வித் தெய்வம் என்று அவளைத் துதிக்கக் கற்றுக் கொடுத்துவிடுவதால், அது பசுமரத்தாணியாக மனசில் பதிந்து என்றைக்கும் அவளிடம் பக்தி நீங்காமலே இருக்கிறது.
நியூஸ் பேப்பர் பாஷையில் சொன்னால், அவள் ‘பாபுலர்' தெய்வம். பிரம்மா ‘அன்பாபுலர்' தெய்வம். அன்பாபுலர் தெய்வத்துக்குக் கோயிலில்லை என்றால் அது நியாயம். நல்ல பாபுலாரிடி இருக்கிற தெய்வத்துக்கும் ஏன் அப்படியே இருக்க வேண்டும்?
இங்கேதான் நம்முடைய தேசாசாரம் வருகிறது. பதிவிரத்யம் என்பது நம் தேசாசாரத்தில் ஊறிப்போன விஷயம். பதிவிரதைகள் புருஷனுக்கு இல்லாத எதையும் தாங்கள் அனுபவிக்க மாட்டார்கள். சரஸ்வதி பிரம்மாவின் நாக்கிலேயே உட்கார்ந்துகொண்டிருக்கும் பதிவிரதை. அதாவது பிரம்மாவின் நாக்குதான் அவள் குடியிருக்கும் கோயில். அவள் எப்படிப் பதிக்குக் கோயிலில்லாதபோது தான் மட்டும் கோயிலில் குடிகொள்வாள்? அதனால்தான் அவளுக்கும் அவர் மாதிரியே கோயில் இல்லை.
அகத்திலே நாம் கூப்பிட்டால் அவள் வருவாள். தாயாரல்லவா? அதனால் நம் குடும்பத்து மனுஷியாக வருவாள். நமக்கு அறிவு புகட்ட வேண்டிய ட்யூட்டியும் அவளுக்கு இருப்பதால் தனிப்பட்ட முறையில் அகத்துக்கு வருவாள்.
ஆனால் ஊர் உலகத்துக்குப் பொதுவாக அவளைப் பெருமைப்படுத்திக் கோயில் கட்டுவது என்றால், அப்போது பதியை விட்டுவிட்டு, தான் மட்டும் மகிமை கொண்டாடிக்கொள்ள அவள் சம்மதிக்க மாட்டாள்.
அவளுடைய அந்த உத்தம ஸ்த்ரீ குணத்தை மதித்துத்தான் அவளுக்கு ஆலயமில்லாமல் வைத்திருக்கிறது. சக்திகளை வழிபடுவதற்கென்றே நவராத்ரி என்று வைத்துப் பூஜை பண்ணும்போது துர்கா, லட்சுமிகளுடன் அவளும் வந்து சரஸ்வதி பூஜை பெறுவாள். அதோடு சரி. பதியை நீக்கி, பொதுத் தலத்தில் கோயில் என்று வைத்து ஊர் கூடி நித்ய பூஜை, உத்ஸவாதிகள் பண்ணுவதற்கு அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள்.
சகல கலைகளுக்கும், கல்வி செல்வத்திற்கும் அதிபதியாகவும், அதி தேவதையாகவும் விளங்குபவள் சரஸ்வதி தேவி. கலைமகள், வாணி, பாரதி, காயத்ரி, வாகீஸ்வரி, சகலகலாவல்லி, நான்முகன் நாயகி, என பல்வேறு திருப்பெயர்களால் போற்றப்படுகிறாள். சைவ, வைணவ அடியார்கள் மட்டுமின்றி, ஜெயின் மற்றும் புத்த சமய மக்களாலும் வழிபடப்படுகிறாள் சாரதா, மானவி, சரஸ்வதி.
வித்யா, சின்மயி, ஞானவல்லி, ஞானக்கொடி, ஞானக்கொழுந்து, ஞானப்பிராட்டி, நாமடந்தை, நாவேறு செல்வி, நாவுக்கரசி, நாமிசைக்கிழத்தி, கலைமகள், வாக்கின் செல்வி, வாக்குதேவி, வாக்கு வாதினி, அன்னவாகனி, சொல்மங்கை, சொல்லிருங்கிழத்தி என பல்வேறு நாமங்களால் நாமகள் பாவலர்களால் பாடப்படுகிறாள். ஆயகலைகள் அனைத்திற்கும் தலைவி, இந்த வீணா வாணியே.
பிரமனின் மனைவி என்பதால் பிராமி என்றும், கலைகளின் பிறப்பிடமாக விளங்குவதால் சரஸ்வதி என்றும் தேவி அழைக்கப்படுகிறாள். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண்தாமரையில் அமர்ந்து, வீணை ஏந்தி நாதம் எழுப்பியவண்ணம், பின்வலக்கரத்தில் அக்ஷ மாலையும், முன்வலக்கரத்தில் வியாக்கின முத்திரையும், பின் இடக்கரத்தில் வெண்தாமரையும், முன் இடக்கரத்தில் சுவடியும் தாங்கி எழிலுற வீற்றிருப்பாள் என ஆகமங்கள் கூறுகின்றன.
நான்முகன் நாவில் கலைமகள் குடியிருப்பதாக புராணங்கள் கூறுகிறது. சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே, ஞானம் அருளுபவர்கள். அதனால் ஜெபமாலை, சுவடி ஏந்தி இருவருமே காணப்படுகிறார்கள். ஆசை அழிந்தால் தான் ஞானம் பிறக்கிறது எனவே, இருவருமே ஜடாமகுடம், ஸ்படிக மாலை, சந்திரகலை சூடி, ஆணவம் அழிக்கும் மூன்றாம் நெற்றிகண்ணை கொண்டுள்ளனர் என வேதம் குறிக்கின்றது.
பிரமனுக்கு தனி கோயில்கள் இல்லாவிட்டாலும், பிரம்மனின் நாயகி கலைமகளுக்கு நாகை மாவட்டம், கூத்தனூரில் தனிக்கோயில் உள்ளது. ஒட்டக்கூத்தரால் வழிபடப்பட்ட இந்த தேவி, கலைகளை வழங்கும் வரப்பிரசாதி. சரஸ்வதி பூசை அன்று தேவியின் திருப்பாதம் வெளிமண்டபம் வரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், அதை பக்தர்கள் மலராலும், குங்குமத்தாலும் அர்ச்சித்து வழிபடுவர். தேர்வில் வெற்றி பெற, கலைகளில் தேர்ச்சி பெற, விரும்பிய துறையில் பயில, பணி புரிய வரம் அருள்பவள் சரஸ்வதியே. இங்கு அவளை வழிபட வேண்டிய யாவும் உடனே கிட்டும்.
சரஸ்வதி தேவியை ரோமானியர்கள் மினர்வா என்றும், கிரேக்கர்கள் ஆதீனே என்றும் தேவதைகளாக உருப்படுத்தி வணங்கினர். மூன்று முகமும், ஆறு கரங்களும் கொண்ட மன்சூஸ்ரீ என்ற பெயரால் பௌத்தர்கள் வணங்குகிறார்கள். ஜைனர்களும் 16 வித்யாதேவியருடன் கூடிய சரஸ்வதியை வழிபடுகிறார்கள். சிவன் ஆலயங்கள் பெரும்பாலானவற்றில் சரஸ்வதி தேவி கோஷ்ட தேவியாகவும், தனி சந்நிதி இறைவியாகவும் இருக்கிறாள். மற்ற தெய்வ கோயில்களிலும் மாடங்களிலும், கோபுரங்களிலும், நுழைவாயில் சிற்பங்களிலும் என எங்கும் சரஸ்வதி காணப்படுகிறாள்.
திருச்சிற்றம்பலம், ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்