Sunday, January 8, 2017

ஒரு புல் தானாக வளர்கிறது

"வாழ்க வளமுடன்"
"வாழ்க நட்புடன்"

ஒரு புல் தானாக வளர்கிறது

வாழ்வில் பல விஷயங்களை நாம் செதுக்க நினைப்பதாக எண்ணி சிதைத்துவிடக்கூடாது.ஆம் இன்றைய காலகட்டத்தில் நாம் பெற்ற குழந்தைகளை நமக்கு இந்த சமூகம் தர மறுத்ததையெல்லாம் தந்து நாம் உருவாக ஆசைபட்டு நிறைவேறாத ஆசைகளையெல்லாம் திணிக்க நினைக்கும் பெற்றோர்களும் பிள்ளைகளை  செதுக்க நினைப்பதாக எண்ணி சிதைத்துவிடுகிறார்.

தனது குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பதற்காக எந்த பள்ளியில் தமிழகத்திலே மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பெறுகிறதோ அங்கு சென்று எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என சேர்த்துவிடுகிறார்கள்.ஆகா !அங்கு அந்த நல்லா படிக்கும் மாணவனை வியபார பொருளாக மாற்றிவிடும் யுக்தி  அரங்கேறுகிறது.அவனை முதல் மதிப்பெண் எடுக்க வைத்தால்தான் அடுத்த ஆண்டு நிறைய மாணவர்களை அள்ளி குவிக்க முடியும்.பணம் ஈட்ட முடியும்

.எனவே அந்த மாணவனுக்கு அந்த பள்ளி கல்விக்கட்டணத்தில் முழுசலுகை வழங்குவது அவன் பெற்ற மதிப்பெண்ணிற்காக அல்ல. அவன் பெறும் மதிப்பெண்ணால் அடுத்த ஆண்டு ஈட்டப்போகும் வருமானத்திற்கான முதல் ஆகும்.

அங்கு அவன் படும் பாடுகள் ஏராளம் .அவனை கொண்டு அப்பள்ளி அதிக மதிப்பெண்ணை பெற்றிருக்கலாம்.ஆனால் அவனது இயல்பான பல தன்மைகள் பல மறைக்கப்பட்டு அவனை மனப்பாடம் செய்யும் எந்திரமாக மாற்றி அனுப்பியிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.இங்கு ஆப்ரேஷன் சக்சஸ் பட் பாடி அவுட்.ஆம் அவனை சமூகத்திற்கு உகந்தவனாக தயாரிக்க பள்ளி தவறியது என்பது என் வருத்தம்.

எனது பள்ளியில் நான் மேல் நிலை வேதியியல் ஆசிரியர் நான் நடத்தும் வேதியியல் முழுவதும் புரிந்துகொள்ளாத மனநிலையில் ஒரு மாணவன் இருந்ததை எண்ணி வருத்தமாக இருந்தது.அதிலும் குறிப்பாக கரிமவேதியியலில் பென்சீன் ரிங்கை போட்டாலே அவன் முகம் மாறிவிடும்.ஆனால் எவ்வளவு முயன்றும் வேதியியல் பாடம் வர மறுக்கிறது.ஆனாலும் அவனை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்கவேண்டும் என்பதற்காக தினம் ஒரு வினா எழுத வைத்தாலும் அவனால் எழுத இயலவில்லை.அவன் படிப்பின் நிலைகண்டு அவனை பரிதாபமாக நினைத்தேன்.

ஆனால் நேற்று நடந்த எங்களது பள்ளியின் விளையாட்டு விழாவில் நான் மஞ்சள் அணிக்கு பொறுப்பாசிரியாராக இருந்தேன்.அதில் எமது அணி சார்பாக வாலிபால் (கையுந்துபந்து) விளையாட அந்த வேதியியல் சரியாக படிக்காத மாணவன் கலந்து கொண்டு அந்த விளையாட்டில் பலவித யுக்திகளை பயன்படுத்தி அந்த விளையாட்டை சிறப்பாக விளையாடி எங்கள் பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர்களின் கை தட்டையும்,பாராட்டையும் பெற்று எங்கள் அணியை வெற்றி பெறச்செய்தான்.

அந்த அருமையான வாய்ப்பின் மூலமாக அவனுக்குள் உள்ள திறமையை கண்டறிய முடிந்தது.ஆகா! நாம் அவனை சரியாக படிக்காததை வைத்து அவனை எடை போட்டது தவறு.அவனை இறைவன் வேறு காரணத்திற்காக படைத்திருக்கிறான் என எண்ணி அம்மாணவனை அழைத்து பாராட்டி" நீ மெதுவாக ஒரு கேள்வியாக படித்து பாஸ் ஆகிவிடு.பிறகு கல்லூரியில் விளையாட்டு சார்ந்த இளநிலை படிப்பில் சேரலாம் "என ஆலோசனை வழங்கினோம்.

எதற்காக எமது பள்ளியில் நிகழ்ந்த  எமது அனுபவத்தை பகிர்ந்தேன் என்றால்
"ஒரே காரணத்திற்காக எல்லா குழந்தைகளை படைக்க இறைவன் ஒரு முட்டாளில்லை.ஒவ்வொறுவரும் ஒரு காரணத்திற்காகவே படைக்கப்படுகிறார்கள்.அதனை கண்டறிந்து வெளிக்கொணர்வதே பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கூடங்களின் தலையாய கடமையாகும் ".

கவிக்கோ அப்துல் ரகுமான் கூறுவதுபோல

"புத்தகங்களே பிள்ளைகளை கிழித்துவிடாதீர்கள் "

ஆம் சிலநேரங்களில் அதிகப்படியான புத்தகங்களும் பிள்ளைகளின் இயல்புணர்வை வளரவிடாமல் தடுக்கிறது.

பெற்றோர்களுக்கு

"பிள்ளைகளை நீங்கள் பெற்றதனால்தான் நீங்கள் பெற்றோர்கள் ஆனீர்கள்.பிள்ளைகள் உங்கள் மூலம் பிறந்திருந்தாலும் அவர்கள் உங்களுக்காக மட்டும் பிறந்தவர்கள் இல்லை"

ஒருவனுக்கு ஏனைய செல்வங்களை விட கல்வி செல்வம் தலைசிறந்த செல்வமாகும் என்பதில் யாருக்கும் மறுப்பில்லை.ஆனால் அது சரியாக வர மறுக்கும் பிள்ளைகளை வார்த்தைகளால் வதக்கிவிடாதீர்கள்.அவனிடம் கல்வியல்லாத ஏராளமான கலைகள் ஓவியம்,பாட்டு,இசை ,நடனம்,கராத்தே ,கவிதை மற்றும் விளையாட்டு என "கொட்டி கிடக்குது செல்வங்கள் பூமியிலே" அதனில் அவனுக்கு பிடித்ததை எடுத்து கண்டறிந்து வளர்க்கும்போது மனமகிழ்வோடு மலர்வான்,சமூகமும் மலரும்.இந்தியா ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்க பதக்கம் பெற முடியாத சூழலில் நாளை உங்கள் குழந்தைகளை வளர்த்து இந்தியாவுக்கு பெருமையை தேடி தரும் பெற்றோராக நீங்களும் மாறலாம் .எல்லோரும் படித்து அதிகரியாக மட்டும் ஆக நினைப்பதால்தான் இந்தியாவின் பல்வேறு கலைகளுக்கு ஆள் பற்றாக்குறையாக உள்ளது.எனவே மாற்றியோசித்து வளமான பிள்ளைகளை "ஒரு புல் எவ்வாறு இயற்கையாக தானாக வளர்கிறதோ அதுபோல வளரவைப்போம்.

நன்றி
"வாழ்க வளமுடன்" வாழ்க நட்புடன்"

No comments:

Post a Comment