ஆக்ஞா சக்கரம் பற்றி சத்குரு கூறும் அதிசய அரிய தகவல்:-
குரு எதற்கு தேவைப்படுகிறார் என்பது உட்பட பல கேள்விகளுக்கு விஞ்ஞானப்பூர்வமான விடை::
பைனியல் சுரப்பியை பற்றிய யோக மரபின் பார்வையுடன் நவீன நரம்பியல்மருத்துவ பிரிவின் கருத்துக்கள் ஓரளவு இயைந்து இருக்கிறது. ஆக்ஞா சக்கரத்துடன் தொடர்புடையதாகவே இது யோக மரபில் அறியப்பட்டு வந்துள்ளது. இன்று நரம்பியல்விஞ்ஞானிகள், ஒருவரது மனநிலையையும் அனுபவத்தையும் நிர்ணயிப்பது இந்த சுரப்பியிலிருந்து சுரப்பதுவே என்று கூறுகின்றனர். உங்களுக்குள் போதுமான அளவு நிலையாக பைனியல் சுரப்பி சுரந்தால் உங்கள் அளவில் ஆனந்தமாக இருக்க எந்த தடையும் இல்லை.
மருத்துவ விஞ்ஞானமும், தெருவோரத்தில் கூட கிடைக்கும் போதை பொருட்களும் ஒன்றை நமக்கு தெளிவுபடுத்துகிறது. இனிமையான சூழ்நிலை இனிமையற்ற சூழ்நிலை என்று எதை வேண்டுமானாலும் உங்கள் அனுபவத்தில் உண்மை என நீங்கள் உணரும் வகையில் வேதியியல் பொருட்களால் உங்களுக்குள் உருவாக்க முடியும் தானே. மற்றவர்கள் இது நீங்களே கற்பனை செய்து கொண்டது என ஒதுக்கலாம். ஆனால் உண்மையில், உங்களுக்குள் நிகழும் அனைத்துமே உங்கள் உருவாக்கம் தான். உங்களுக்குள் ஏதாவது நிகழ, வெளியில் இருந்து தூண்டுதல் தேவையா தேவையில்லையா என்பது தான் ஓரே வித்தியாசம். நீங்கள் இப்போது வெறுமே பேரானந்தமாக ஆகிவிட்டால், இந்த நிலை, வெளி தூண்டுதல் இல்லாமல் உங்களுக்கு நீங்களே ஏற்படுத்தி கொண்டது. இதே நிலைக்கு உங்களை வெளியில் இருந்து ஏதோ ஒன்றின் மூலம் தூண்டிக்கொள்ளும் போது, அனுபவத்தில் இரண்டுமே ஒன்றாக இருக்கலாம், ஆனால் இறுதியில் அது உடலின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் சீர் குலைத்து விடும். அதுமட்டுமல்லாமல் இது எந்த வித விழிப்புணர்வையும் உங்களுக்குள் ஏற்படுத்தாது. தன் கவனத்தில் இல்லாமல் ஒருவருக்கு எவ்வளவு பெரிய அனுபவம் ஏற்பட்டாலும், அது அவரது வளர்ச்சிக்கு, பரிணாம வளர்ச்சிக்கு, என எந்த வகையிலும் பயன்படாது.
பல கலாச்சாரங்களிலும் அறியப்பட்டு இருந்த பிந்து:-
இது யோக உடற்செயலியல் மரபில் இருந்தாலும், பரவலாக வெளியில் தெரியாதது. நவீன மருத்துவத்தில் இது பற்றி எந்தவிதமான கவனமும் இல்லை. எனக்குள் எப்போதுமே நான் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளும் தன்மையும் கூட. பிந்து என்றால் ஒரு சிறு புள்ளி. இது பைனியல் சுரப்பியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடம். இதை சுற்றிலும் ஒருவிதமான சுரப்பு இருக்கும். நீங்கள் பிந்துவை தொடும் போது ஒருவிதமான சுரப்பு ஏற்பட்டு, உடல் அளவில் சௌகர்யத்துடன் பேரானந்தத்தை உணர முடியும். பிந்துவை செயல் படுத்த உங்கள் தலையின் பின் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடம் உள்ளது. உலகம் முழுவதும், பல கலாச்சாரங்களிலும் இது அறியப்பட்டு இருந்தது மட்டுமல்லாமல், அந்த புள்ளி பாதுகாக்கபட்டு செயல்படுத்தப்பட வேண்டியது என்ற புரிதலுடனும் இருந்தனர்.
இந்துக்களின் வாழ்க்கை முறையை பொறுத்த வரை, இளம் வயதில் பிராமண சிறுவர்கள் ஆன்மீக பாதையில் ஈடுபடுத்தப்படும் போது தலையை முழுவதும் மழித்து, இந்த பகுதியில் மட்டும் சிறு குடுமி வைத்து விடுவார்கள். உலகின் பல பாகங்களிலும், ஆன்மீக செயல்முறை என்று அவர்கள் கருதும் குறிப்பிட்ட சில செயல்களில் ஈடுபடும் போது தொப்பியோ (குல்லா) ஏதேனும் துணியையோ தலையில் அணிந்து கொள்ள துவங்கினர். உலகம் முழுவதும், ஏதாவது ஒரு காலகட்டத்தில் இது சிலரின் கவனத்திற்கு வந்துமட்டுமின்றி இதை பற்றி அவர்கள் பேசி இருக்கவும் வாய்ப்புள்ளது. அவர்கள் உண்மையிலேயே என்ன பேசியிருப்பார்கள் என்று தெரியவில்லை, ஆனால் மக்கள் இந்த செயல்களை செய்வதை கவனித்திருக்கிறேன். உதாரணமாக யூத கலாச்சாரத்தில் தொப்பி அணிய வேண்டியது பற்றி குறிப்பிட்டு ஏதாவது சொல்லப்பட்டிருந்தால் அதை இங்கிருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்..
சாதகர் 1: ஆன்மீக செயல் முறை செய்வதற்கு நாங்கள் வழிபாட்டு தலம் செல்வோம். நாங்கள் வெறுமே மனிதர் மட்டுமே, தெய்வம் அல்ல என்பதைக் குறிக்கும் வகையில், அப்போது தொப்பி அணிந்து கொள்வோம். இதை ஒரு மரியாதையுடனும், நாங்கள் வேறு, நாங்கள் வழிபடும் தெய்வம் வேறு என்பதை வெளிப்படுத்தவும் இப்படி செய்கிறோம்.
சத்குரு: வேறு யாராவது ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா..?
சாதகர் 2: தெய்வீகம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நினைவு படுத்தும் விதமாகவே தொப்பி அணிகிறோம். எப்போதுமே அணிந்திருப்பது தெய்வீகத்தை மறந்துவிடக் கூடாது என்பதற்காக. மேலும், இது வேற்றுமையை குறிப்பதற்காக அல்ல, நமக்குள்ளும் நம்மை சுற்றிலும் இருக்கும் தெய்வீகத்தை நினைவு படுத்துவதற்கு தான்.
சத்குரு: பிந்து எப்போது நரம்பியல் மருத்துவர்களின் பார்வைக்கு வரும் என்று தெரியவில்லை. அப்படியே கவனித்தாலும் அளவில் மிக சிறியதாக இருப்பதால் இதை ஒதுக்கி விடவும் கூடும். ஆனால் நீங்கள் கவனித்து பார்த்தால் இது எப்போதுமே உங்கள் உடலியக்கத்தின் ஒரு பாகமாக இருக்கிறது. அதற்காக உடனே கற்பனையில் மூழ்கி விடாதீர்கள்.
அமுதவிஷம்:-
குறிப்பிட்ட தியான முறைகளில் ஈடுபடும் போது பலமுறை மக்கள் ஒருவித பரவச நிலைக்கு செல்வார்கள். அதற்கு காரணம் அவர்களுக்குள் இருக்கும் “அமுதம் கலசத்தில்” இருந்து சிறிதளவு சிந்துவது தான். அவர்கள் இன்னும் துளி துளியாக எப்படி அதை சுவைப்பது என்பதை அறியவில்லை. ஒரு டம்ளர் நிறைய தண்ணீரை குழந்தையிடம் கொடுத்தால், குடிக்கும் போது, எப்படி அங்குமிங்கும் சிந்துமோ அப்படி தான் இதுவும். தேவையான யோக சாதனை செய்து வந்தால் சில காலத்திற்கு பிறகு கவனமாக பருக தெரிந்து விடும். கவனமாக பருக நீங்கள் பழகி விட்டால், உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் பேரானந்தமே.
ஆனால் ‘பிந்து’விற்கு இரண்டு குணங்கள் இருக்கிறது. நீங்கள் கூறிய இரண்டு கருத்துக்களுமே சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. இருவருமே ஓரளவு சரியாக சொன்னாலும், முழுமையாக வெளிப்பட வில்லை. இது ஒருவிதமான புரிதலில் இருந்து வந்திருக்கலாம். ‘பிந்து’வின் இன்னொரு பகுதியில் இருந்தும் சுரப்பு ஏற்படும், ஆனால் இது விஷத்தன்மையுள்ளது. கலசத்தின் தவறான பகுதியில் இருந்து பருகினால், இந்த விஷம் உடல் முழுவதும் பரவும். இது உட்கொள்ளும் விஷம் போன்றது அல்ல. இது பரவும் விதம் எப்படி இருக்கும் என்றால், காரணமே இல்லாமல் உங்களை துயரத்தில் ஆழ்த்திவிடும். இதை பலர் தங்களுக்கு தாங்களே செய்து கொண்டுள்ளனர். இதை மனச்சோர்வு என்றும் அழைக்கலாம். வாழ்க்கையில் சரியற்ற செயல்களை செய்து அமுதகலசத்தின் தவறான பகுதியை சென்று அடைந்தது தான் துயரத்துக்கு காரணம்.
உலகின் பல கலாச்சாரங்களிலும் இது குறித்து விழிப்புணர்வு இருந்து வந்துள்ளது. சிலர் தொப்பி அணிந்தும், சிலர் முக்காடுடனும், இன்னும் சிலர் வேறு வழிகளிலும் தகுந்த கவனம் எடுத்துக் கொண்டனர். எப்போதுமே இந்த கலாச்சாரங்களில் மன நிலையில் தடுமாற்றம் குறைந்த அளவிலேயே இருந்து வந்துள்ளதை நீங்கள் கவனிக்க முடியும்.
முதலில் சமநிலை, பிறகு பேரானந்தம்:-
உங்கள் வாழ்க்கையை நீங்கள் செல்வம், சொத்து, அதிகாரம், கடவுள், ஞானமடைதல் என்று எந்த குறிக்கோளுடன் வாழ்ந்தாலும், நீங்கள் அடைய விரும்புவது என்ன..? அடிப்படையில், உண்மையாக நீங்கள் தேடுவது உங்களுக்குள் இருக்கும் இனிமையான உணர்வை தான். இதை எதிர்பாராத விதமாகவோ விழிப்புணர்வுடனோ அடையும் வாய்ப்பு உங்கள் கையில் தான் இருக்கிறது.
உள்நிலையில் தேவையான உறுதி உருவான பின்பே அனைவரது மூளையிலும் இருக்கும் அமுதகலசத்திற்கு செல்லும் வகையில் பல எளிய செயல் முறைகளையும் வழிகளையும் ஏற்படுத்தியது, அந்நிலை அருளின் துணையில் உங்களுக்கு நிகழும் போது உங்களுக்கு பித்து பிடித்து விட கூடாது என்பதற்காக தான். உறுதியான அஸ்திவாரம் இல்லாத போது அதீதமான இனிமை கூட பித்தம் கொள்ளச் செய்யும்.
ஆரம்ப நிலை யோக சாதனைகள் எல்லாமே நம்மை பேரானந்த நிலைக்கு அழைத்து செல்லாமல், சமநிலையான தன்மைக்கே இட்டுச் செல்லும். பேரானந்தத்தை விட சமநிலையான தன்மையே முக்கியம். உள்நிலையில் சமநிலை அடையாமல் பேரானந்தம் நிகழ்ந்தால் அது உங்களை குலைத்து விடும். சமநிலையில் இருந்து பேரானந்தத்தை அணுகுவதே அற்புத அனுபவம். எல்லா பயிற்சிகளும் முதலில் சமநிலையை வழங்கும் வகையிலேயே யோக மரபில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேரானந்தத்திற்கு வழி எழுதப்படாத காரணம்:-
பேரானந்தம் அடையும் வழி முறைகளை போதனையாகவோ எழுதியோ என்றுமே வைத்ததில்லை. குறிப்பிட்ட சிலரின் முன்னிலையிலேயே அவரவர் தன்மைக்கேற்ப நிகழ்வதால் இதை எழுதி வைக்காமல் அப்படியே விடுவதே நல்லது. இதை பற்றி சிலர் தாந்திரீக புத்தகங்களில் எழுத முயற்சித்துள்ளதை பொறுப்பற்ற செயலாகவே பார்க்கிறேன். நீங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதில் முதல் இரு பகுதிகள் உங்களை சமநிலைபடுத்த சில எளிய பயிற்சிகளையும், அடுத்த ஐந்து பகுதிகள் உங்களை பேரானந்தத்திற்கு அழைத்துச் செல்லும் எளிய பயிற்சிகளையும் குறித்ததாக இருந்தால், -நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்.? தொல்லை தானே இது. இவர்கள் அறியாமையில் இருந்து கொண்டு உண்மையை சுற்றி தங்கள் கற்பனையை கலந்து ஏதோ ஒன்றை எழுத முயற்சித்துள்ளனர். மக்கள் முதலில் சமநிலையை தேடிச் செல்ல மாட்டார்கள், நேராக பேரானந்தத்தை நாடி – உடைத்து விடுவார்கள். பேரானந்த நிலையை உங்கள் உடல் தாங்க வேண்டுமானால், தேவையான சமநிலையை நீங்கள் ஏற்கனவே உங்களுக்குள் உருவாக்கி இருக்க வேண்டும்.
இதுவரையில் உங்கள் புலன் அனுபவத்தில் இல்லாத ஒன்றை அடைய முயற்சி செய்தால், தவறான ஒன்றை தேடுவதே நடக்கும். உங்கள் சாதனாவில் மட்டும் உறுதியாக இருங்கள். முன்கூட்டியே ஒன்றை பற்றி விளக்கும் போது தவறாக புரிந்து கொண்டு வேறு ஒன்றை நோக்கி செல்ல கூடும் என்பதால் தான் பாரம்பரியமாக நம்பிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எது பற்றியும் கவலைப்படாமல் தினமும் உங்கள் பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். நடக்க வேண்டியது தானாகவே நடக்கும். ஒரு செடி எப்படி வளரும் என்பது உங்களுக்கு தெரியாத போது, கழிவையும் அழகான மலரையும் காட்டி “இது இரண்டுமே ஒன்று தான். அதிலிருந்து தான் இது மலர்ந்திருக்கிறது” என்று சொன்னால் நம்புவீர்களா? உங்களை எந்த விதத்திலும் சமாதானப்படுத்த முடியாது தானே. ஒருவர் மீது பைத்தியக்கார தனமான நம்பிக்கை இருந்ததால் மட்டும் தானே இதை நம்ப முடியும். அதனால் தான் இதை பற்றியெல்லாம் நாம் சாதாரணமாக அதிகம் பேசுவதில்லை. உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் ஏற்படுத்தினால் தவிர இதை நம்பவைக்க முடியாது.
ஒரு குற்றம் சாட்டப்பட்ட மனிதர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பார்த்து “உங்களுக்கு வழக்கறிஞர்கள் யாராவது தேவையா..?” என்று நீதிபதி கேட்டார். அதற்கு “தேவையில்லை, நீதிபதிகளில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்” என்று அந்த மனிதர் பதில் அளித்தார்.
இது இப்படி தான் நடந்து விடும். ஆனால் கணக்கு பார்த்து பார்த்து இந்நிலையை அடைய முடியாது. அதை சரி செய்ய தான் குரு தேவைபடுகிறார் உங்களுக்கு எது எப்போது தேவை என்பதை கவனித்து, தட்டி, குட்டி, அரவணைத்து செல்ல வேண்டியிருக்கிறது. குரு, சரியான தருணத்தில் உங்களுக்கு நிகழ வேண்டியதை நிகழ்த்தி விடுவார். இல்லையென்றால் அப்படியே கணக்கு பார்த்துக் கொண்டே அங்கேயே நின்று விடுவீர்கள்.
No comments:
Post a Comment