நல்ல மனம் வாழ்க ! இது போன்ற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
“ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார்" படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது;
படிப்பு சொல்லிக் கொடுக்குறவங்களுக்கும் காசு கிடையாது.
பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க.
இப்போ அந்தப் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து வாடகைக் கட்டடத்துல நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமா ஒரு கட்டடம் கட்டியிருக்காங்க.
ஆனா, அந்த ஏழை மளிகைக் கடைக்காரர் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்.
” அந்த மளிகைக் கடைக்காரர் பாலசுப்பிர மணியன். அவரை அறிந்தவர்களுக்கு பாலுஜி.
பள்ளிக்கூடத்தின் பெயர் ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’. 300-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள்.
பெரும்பாலானவர்கள் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழைச் சிறார்கள்.
விசேஷம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள்.
ஆகையால், எல்லாப் பள்ளிக்கூடங்களும் இயங்கும் நேரத்தில் இந்தப் பள்ளி இயங்காது.
காலை 6 மணி முதல் 8 மணி வரை. மாலை 6 மணி முதல் 9 மணி வரை.
இந்த இரு நேரங்களில் சௌகரியமான நேரத்தில் மாணவ -மாணவியர் வருகிறார்கள்.
பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களும் இப்படித்தான். வேலைக்குச் சென்றுகொண்டே கல்விச் சேவை தருபவர்கள்.
38 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி அளித்து அனுப்பியிருக்கிறார் பாலுஜி.
“அப்போ நான் எட்டாவது படிச்சுக்கிட்டுருந்தேன்.
வகுப்புல நான்தான் படிப்பில் முதல் மாணவன். அப்பா போய்ட்டார்.
வீட்டுக்கு நான்தான் மூத்த பையன்.
ரெண்டு தம்பிங்க,ஒரு தங்கச்சி எனக்குக் கீழே இருந்தாங்க. படிப்பை விட்டுட்டு மளிகைக் கடை வேலைக்குப் போனேன்.
வேலைக்குப் போய்ட்டேனே தவிர, படிப்பு ஆசை விடலை. பிரைவேட்டாவே 10-வது, 12-வது எழுதினேன், பி.ஏ. பண்ணினேன், எம்.ஏ. முடிச்சேன்.
இந்தியும் படிச்சேன். இந்தப் பகுதி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. ஏழ்மை காரணமா நிறைய குழந்தைங்க படிக்க முடியாத சூழல். கடைக்கு வரும்போது அவங்களைப் பார்க்க அத்தனை சங்கடமா இருக்கும்.
ஏதாவது செய்யணுமேனு தோணும்.
கொஞ்ச நாள் கழிச்சு நானே சின்னதா கடை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சாயுங்கால நேரத்தை இவங்களுக்கு ஒதுக்குவோம்னு முடிவெடுத்தேன்.
என்னை மாதிரியே நல்லெண்ணம் உள்ள - படிச்சுக்கிட்டு இருக்குற சில பசங்களைச் சேர்த்துக்கிட்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழக’த்தைத் தொடங்கினேன்.
யாருக்கும் யாரும் காசு தர வேண்டாம். அன்னைக்கு எல்லாம் இருந்த பெரிய செலவு கட்டடத்துக்கு வாடகை தர்றதுதான். மாசம் அம்பது ரூபா.
ஒருகட்டத்துல இங்கே படிச்சு வெளியே வேலைக்குப் போன பிள்ளைங்களே இங்கே சொல்லிக்கொடுக்கஆரம்பிச்சாங்க.
கழகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டினாங்க. இன்னைக்கு ஆலமரம் மாதிரி ஆயிடுச்சு கழகம். விழுதுகள் தாங்குது” என அமைதியாய் கூறுகிறார் பாபுஜி .
No comments:
Post a Comment