இந்த உலகத்தின் ஒட்டு மொத்த மையப்புள்ளி அமைத்திருக்கும் இடமாக, தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையை கண்டு, இன்றைய நவீன விஞ்ஞான உலகம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.
நோயின்றி வாழ:
சிதம்பரம் நடராஜர் கோவில், இன்றைய அறிவியலுடன் மட்டுமல்ல, மனிதர்களின் உடற்கூறுடன் பொருந்துவதும் அதிசயமே. ஆகவே தான், நம்மை, அங்கு சென்று வழிபட வைத்து, உலகத்தின் காந்த சக்திக்கு கட்டுப்பட்டு, நோயின்றி வாழ, நம் முன்னோர் வழிகாட்டியுள்ளனர். இக்கோவிலின் அற்புதங்களும், ரகசியங்களும், ஆச்சரியங்களும் ஏராளம். இன்னும், மனித ஆற்றலினால் கண்டுபிடிக்க இயலாத, பேருண்மைகள் இக்கோவிலின் அமைப்பில் புதைந்து உள்ளன!
கால் பெருவிரலில்...:
சர்வதேச ஆன்மிக அமைப்புகள், கடந்த எட்டு ஆண்டுகளாக, சில கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான், மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக கண்டுபிடித்துள்ளன. இதை, பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிந்து, இக்கோவிலை, நம் முன்னோர் கட்டினர்; அவர்கள், ஆன்மிகத்தின் உள் அறிவியலை
புகுத்திய ஞானிகள்!
நவீன ஆய்வகங்கள், விலை உயர்ந்த நவீன கருவிகள் ஏதும் இல்லாத, அக்காலத்தில், இதை முன்னோர் கண்டறிந்துள்ளனர் என்பது, நம்மை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது! அணுத் துகள்கள் அசைந்தபடியே இருக்கும் என்ற உண்மையை, ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து, அதை பூமியின் மையப்புள்ளியில் அமர்த்தியது பெரிய சாதனை தான்!
அறிவியல் நூல்:
இதை, 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, கண்டறிந்த திருமூலரின் சிந்தனை ஆற்றலும், சக்தியும் மகத்தானது. திருமூலரின் திருமந்திரம், உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும். இதை உணர, இன்றைய அறிவியலுக்கு மேலும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்! 'சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியம்' என்று பலரும், பல தகவல்களை கூறிவரும் வேளையில், கோவிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த விவரங்கள் அளவிட இயலாதவை. முன்னோர் செய்த அனைத்து செயல்களும், ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது. மன்னர்கள் கட்டிய பிரமாண்டமான கற்கோவில்களுக்கு, பின்னால் இருக்கிற பல அற்புதங்கள், அதைக் கட்டியவர்களின் நுண்ணறிவை வெளிப்படுத்துகிறது.
ஒன்பது வாயில்:
மனித உடலை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ள, சிதம்பரம் கோவிலில், ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும், ஒன்பது வாயில்களை குறிக்கின்றன. கோவிலின் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரை, 21,600 தங்கத் தகடுகள் மூலம் வேயப்பட்டுள்ளது; இது, ஒரு மனிதன், தினமும் சராசரியாக, 21,600 தடவை சுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது. இந்த தங்கத் தகடுகளை பொருத்த, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன; இந்த எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளையும் குறிக்கின்றன. இதில் பல, கண்ணுக்குத் தெரியாத, உடலின் பல பாகங்களுக்கு சக்தியை சேர்ப்பவையும் அடங்கும். திருமூலர், திருமந்திரத்தில், 'மானுடராக்கை வடிவு சிவலிங்கம், மானுடராக்கை வடிவு சிதம்பரம், மானுடராக்கை வடிவு சதாசிவம், மானுடராக்கை வடிவு திருக்கூத்தே' என்று கூறுகிறார். அதாவது, 'மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்' என்ற பொருளைக் குறிக்கிறது.
பஞ்சாட்சர படிகள்:
பொன்னம்பலம், சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது; இது, நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய, ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்த படிகள், பஞ்சாட்சர படிகள் என அழைக்கப்படுகின்றன. அதாவது, 'சி, வா, ய, ந, ம' என்ற ஐந்து எழுத்தே அது! கனகசபை, பிற கோவில்களில் இருப்பதை போன்று, நேரான வழியாக இல்லாமல், பக்கவாட்டில் வருகிறது. இந்த கனகசபை தாங்க, நான்கு தூண்கள் உள்ளன; இது, நான்கு வேதங்களையும் குறிக்கின்றன. பொன்னம்பலத்தில், 28 தூண்கள் உள்ளன. இவை, 28 ஆகமங்களையும்; சிவனை வழிபடும், 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும், 64 + 64 மேற்பலகைகளை (பீம்) கொண்டன; இது, 64 கலைகளை குறிக்கின்றன. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றன. பொற்கூரையின் மேல் இருக்கும் ஒன்பது கலசங்கள், ஒன்பது வகையான சக்தியை குறிக்கின்றன. அர்த்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள், ஆறு சாஸ்திரங்களையும்; அர்த்த மண்டபம் அருகில் இருக்கும் மண்டபத்தில் உள்ள, 18 தூண்களும், 18 புராணங்களையும் குறிக்கின்றன.
ஆனந்த தாண்டவம்:
சிதம்பரம் நடராஜரின், ஆனந்த தாண்டவம் என்ற கோலம், 'காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. இந்து மத சாஸ்திர, சம்பிரதாயங்கள் அறிவியல் ரீதியானவை. அவை, மனிதனை மேம்படுத்த, உயர்ந்த தத்துவங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டவை. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு, வரும், ?ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஆகாய உருவில் இறைவன்!
சிதம்பர ரகசியம் என்பது, சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது, ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே, திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே! அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இது தான், 'சிதம்பர ரகசியம்' என, அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகிறது.
அடி-முடி
சிவன் கோயிலில் கருவறையை சுற்றி வலம் வரும்போது சிவன் சன்னதிக்கு நேர் பின்புறம் லிங்கோத்பவர் (அண்ணாமலையார்) காட்சியளிப்பார். இதில் சிவபெருமானின் உச்சி, பாதத்தை காணமுடியாது. அடி-முடி காணமுடியாத பெருமானே சிவன் என்பதன் தாத்பர்யமே இது.சிவன், விஷ்ணு, பிரம்மா இடையே யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது, சிவபெருமான் கிடுகிடுவென வளர்ந்து வானுக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுக்கிறார். அவரது தலையையும் பாதத்தையும் காண முடிகிறதா என்று விஷ்ணு, பிரம்மாவிடம் கேட்கிறார்.
பாதத்தை பார்க்க பன்றி வடிவம் எடுத்து பாதாளம் நோக்கி செல்கிறார் விஷ்ணு. அன்ன வடிவம் எடுத்து பறக்கும் பிரம்மா, தலையை பார்க்க மேல்நோக்கி செல்கிறார். பல யுகங்கள் பயணம் செய்தும் இருவராலும் சிவபெருமானின் அடி, முடியை காண முடியவில்லை. அடி, முடி இல்லாத ஜோதி சொரூபனாக அவர்களுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார் என்பது புராணம்.
63 நாயன்மார்களின் பெயர்கள்
சமயங்களுள் மிகச் சிறப்பாக போற்றப்படுவது சைவ சமயம் ஆகும். ஆதி காலம் முதல் இன்று வரை அழியாப் புகழ், பெற்று இன்று வரை பல சமயத்தவராலும் , போற்றப்படும் சிறப்பினை உடையது சைவ சமயம் ஆகும் . அத்தகைய சிறப்புடைய சைவ சமயத்தின் புகழை நிலை நாட்டவும், சிவபெருமானுக்குத் தொண்டு செய்வதை மட்டுமே தன் வாழ்வியல் குறிக்கோள் என்று வாழ்ந்து, வந்த பல்வேறு சிவ பக்தர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். 63 நாயன்மார்கள் ஆவார்கள் இவர்களின் முக்கிய குறிக்கோள், சிவபெருமானுக்குத் தொண்டு செய்வதும் , சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதும் ஆகும். இவர்களின் சிவதொண்டை எண்ணிப் பார்த்தால் இன்றும் கூட நம் நெஞ்சம் ஆனது உருகும், இத்தகைய சிறப்பினை உடைய 63 நாயன் மார்களின் பெயர்கள் பற்றி இங்கு காண்போம். 1. சுந்தரர் 2.திருநீலகண்டர் 3.இயற்பகையார் 4.இளையான்குடி மாறனார் 5.மெய்பொருள் நாயனார் 6 .விறன்மீண்டர் 7.அருள் நீதியார் 8.எறிபத்த நாயனார் 9.ஏனாதியார் 10.கண்ணப்பர் 11.குங்கிலயக்கலயர் 12.மானக்கஞ்சாரன் 13.அரிவாட்டாயர் 14.ஆனாயர் 15.முருகன் 16.மூர்த்தி 17.பசும் பதியார் 18.நந்தனார் 19.திருக்குறிப்புத் தொண்டர் 20. சண்டேசுவரர் 21.திருநாவுக்கரசர் 22. குலச்சிறையார் 23.பெருமிழலைக் குறும்பர் 24.காரைக்கால் அம்மையார் 25.அப்பூதியடிகள் 26.திருநீலநக்கனார் 27.நமிநந்தியடிகள் 28.திருஞான சம்பந்தர் 29.கலிக்காமர் 30.திருமூலர் 31.தண்டியடிகள் 32.மூர்க்கனார் 33.சோமாசிமாறன் 34. சாக்கியர் 35.சிராப்புலியார் 36.சிறுத்தொண்டர் 37.சேரமான் பெருமாள் 38.கணநாதனார் 39.கூற்றுவனார் 40.புகழ்ச் சோழன் 41.நரசிங்க முனையரையர் 42.அதி பத்தர் 43.கலிகம்பனார் 44.கலியனார் 45.சத்தி நாயனார் 46.ஐயடிகள் காடவர்கோன் 47.கணம் புல்லனார் 48.காரியார் 49.கூன்பாண்டியன் 50.வாயிலார் 51.முனையடுவார் 52.கழற்சிங்கன் 53.இடங்கலியார் 54.செருத்துணையார் 55.புகழ்த்துணையார் 56.கோட்புலியார் 57.பூசலார் 58.மங்கையர்க்கரசியார் 59.நேசநாயனார் 60.கோச்செங்கணான் 61.நீலகண்ட யாழ்ப்பாணர் 62.சடையனார் 63.இசை ஞானியார் இத்தகைய சிறப்பினை உடைய 63 நாயன் மார்களின் பணிகள் என்றுமே அழியாப் புகழ் பெற்று சிவபெருமானுக்கு புகழ் பெற்றுத் தருபவை ஆகும்.
சிவன் உருவாக்கிய ஆதிகும்பேஸ்வரர் கோவில்
கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. உலகம் அழியும் நேரம் வந்தபோது, பிரம்மன் தனது படைப்பு ஆற்றல் எல்லாவற்றியும் அமுதத்தில் கலந்து ஒரு கும்பத்தில் இட்டு அந்தக் கும்பத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்துவிட்டார். பிரளய காலத்தில் கடல் நீர் பொங்கி இமயமலை உச்சி வரை சென்றபோது, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்ட கும்பம், நீரில் மிதந்து சென்று பின் பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடத்தைமே கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமான், தரை தட்டிய கும்பத்தின் மீது அம்பைச் செலுத்த, கும்பம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். கும்பம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதி கும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் வீற்றிருக்கிறார். இந்த ஆதிகும்பேஸ்வரர் கோவில் மூன்று கோபுரங்களையும், மூன்று பிரகாரங்களையும் கொண்டுள்ளது. கிழக்கே உள்ள கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். காம்பிகை தனி சன்னதி கொண்டுள்ள அருள்மிகு மங்களாம்பிகை வரப்பிரசாதி. வழிபடுபவர்களுக்கு மங்களங்களைத் தருவதால் மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். அம்மன் சக்தி பீடங்களில் மந்திர பீடம் இங்குள்ளது. 72ஆயிரம் கோடி மந்திரங்கள் பீடத்தின் அடியில் உள்ளன. இதில் எழுந்தருளியவர் என்பதால் மந்திர பீடேஸ்வரி என்றும் போற்றப்படுகிறாள். இக்கோவிலில் ஆறுமுகப்பெருமானுக்கு ஆறு முகங்கள் இருந்தாலும் கைகள் மட்டும் 12 இல்லாமல் 6 மட்டுமே உள்ளது.