*வாழ்க்கை மலர்கள்: ஜனவரி 23*
*நல்வரம்*
நாம் வெற்றியாக, அமைதியாக வாழ வேண்டும். அதற்கு என்னென்ன வேண்டும் என்கின்ற போது “உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்வோம்”. இதைவிட உங்களுக்கு என்ன வேண்டும்?
ஒரு அன்பர் ஒருமுறை ஒரு கேள்வி எழுப்பினார். நாம் தெய்வத்தன்மையில் இருந்து தவம் செய்த பிறகு நமக்காக இவையெல்லாம் கேட்க வேண்டுமா? என்று, நான் விளக்கினேன். பொதுவாக எல்லோருக்கும் அது தேவை என்று சொல்கிறேன்.
நீங்களே எண்ணிப் பாருங்கள். உடல் நலம் வேண்டுமா, வேண்டாமா? பிறகு நீளாயுள். நாம் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும்; அறிவை அறிவதற்காகப் பிறந்து இருக்கிறோம். அதற்காக அந்த வழியில் (Process) இருக்கின்றோம். அது நிறைவேற வேண்டும். அதற்கு இடையில் துண்டு போட்ட மாதிரி இந்த உயிரை விட்டுவிட்டால் வேலை முடியாது. ஆகவே, நீளாயுள் வேண்டும். அடுத்தது நிறைசெல்வம். இந்த உலகத்தில் வாழும்வரை வசதிகள் வேண்டுமல்லவா? எல்லாம் நல்லபடியாக எண்ணுவதுதான் நிறைசெல்வம். உயர்புகழ் என்றால் என்ன? நம்முடைய செயல் எல்லோருக்கும் நல்லபடியாக அமைவது, அமையும் போது அதனால் பயன்பெற்ற மக்களுடைய பாராட்டுத்தான் புகழ்.
ஆகவே, புகழ் என்பது ஏதோ நமக்குத் தனிப்பட்ட சொத்து அன்று. நான் செய்யக்கூடிய காரியங்கள் எல்லாம் எல்லோருக்கும் நன்மை அளிக்கட்டும் என்பதுதான் புகழில் இருக்கக் கூடியது. கடைசியாக மெய்ஞானம். நாம் எந்த நோக்கத்தோடு பிறந்தோமோ, அந்த நோக்கத்தை அடைவதற்கு மெய்ப்பொருள் விளக்கம் வேண்டும். இந்த ஐந்தையும் தான் “உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க” என்று சொல்கிறேன்.
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam
No comments:
Post a Comment